குடியரசுத்தலைவர் திருமதி திரௌபதி முர்மு, ஐஎன்எஸ் வாக்ஷீர் நீர்மூழ்கிக் கப்பலில் இன்று (28.12.2025) பயணம் மேற்கொண்டார். கடற்படைத் தளபதி அட்மிரல் தினேஷ் கே. திரிபாதி குடியரசுத்தலைவருடன் கப்பலில் பயணித்தார். கர்நாடகாவின் கார்வார் கடற்படைத் துறைமுகத்தில் இருந்து குடியரசுத்தலைவர் இந்த பயணத்தை மேற்கொண்டார். 2 மணி நேரத்திற்கும் மேலான நீண்ட பயணத்தின் போது, அவர் நீர்மூழ்கிக் கப்பல் குழுவினருடன் உரையாடியதுடன் கப்பலின் செயல்பாடுகளைக் கண்டார்.
மறைந்த முன்னாள் குடியரசுத்தலைவர் டாக்டர் ஏபிஜே அப்துல் கலாமிற்குப் பிறகு நீர்மூழ்கிக் கப்பலில் பயணம் செய்த இரண்டாவது குடியரசுத்தலைவர் என்ற பெருமையை திருமதி திரௌபதி முர்மு பெற்றுள்ளார்.
பயணத்திற்குப் பின்னர், பார்வையாளர் புத்தகத்தில், குடியரசுத்தலைவர் எழுதி தனது கருத்துகளை வெளிப்படுத்தினார். அதில் அவர், “ஐஎன்எஸ் வாக்ஷீரில் நமது மாலுமிகளுடனும் அதிகாரிகளுடனும் பயணம் செய்து, நேரத்தை செலவிட்டது எனக்கு மிகவும் சிறப்பான அனுபவமாக இருந்தது. ஐஎன்எஸ் வாக்ஷீரால் மேற்கொள்ளப்பட்ட பல வெற்றிகரமான பணிகள் அதன் அர்ப்பணிப்பை நிரூபிக்கின்றன. வாக்ஷீர் குழுவினர் ஒழுக்கம், நம்பிக்கை, உற்சாகம், அர்ப்பணிப்பு ஆகியவற்றுடன் செயல்படுகின்றனர். நமது நீர்மூழ்கிக் கப்பல்களும் இந்திய கடற்படையும் எந்த அச்சுறுத்தலுக்கும் எதிராக, எல்லா சூழ்நிலைகளிலும் போராடத் தயாராக உள்ளன என்பது இதன் மூலம் எனக்கு உறுதியாகத் தெரிகிறது” என்று குறிப்பிட்டுள்ளார்.
எஸ்.சதிஸ் சர்மா
