முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயின் வாழ்க்கை மற்றும் இலட்சியங்களைப் போற்றும் வகையில், பிரதமர் திரு நரேந்திர மோடி உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் இன்று தேசிய நினைவிடத்தை திறந்து வைத்தார். வாஜ்பாயின் 101 – வது பிறந்த தினத்தைக் குறிக்கும் வகையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் பேசிய பிரதமர், இன்று லக்னோ நகரம் ஒரு புதிய உத்வேகத்திற்கு சாட்சியாக உள்ளது என்று குறிப்பிட்டார்., இந்தியாவில் மற்றும் உலகளவில் உள்ள மக்களுக்கு கிறிஸ்துமஸ் பண்டிகை வாழ்த்துகளைத் தெரிவித்தார். இந்தியாவிலும் லட்சக்கணக்கான கிறித்தவ குடும்பங்கள் இன்று இந்த பண்டிகையைக் கொண்டாடுகின்றன என்று திரு மோடி குறிப்பிட்டார். இந்த கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் அனைவரின் வாழ்விலும் மகிழ்ச்சியைக் கொண்டுவர வேண்டும் என்பதே நம் அனைவரின் ஒன்றிணைந்த விருப்பம் என்றும் அவர் கூறினார்.
டிசம்பர் 25 -ம் தேதி நாட்டின் இரண்டு மாபெரும் ஆளுமைகளின் பிறந்த தினத்தைக் கொண்டாடி வருகிறது என்பதைச் சுட்டிக்காட்டிய திரு மோடி, பாரத ரத்னா அடல் பிஹாரி வாஜ்பாய் அவர்களும், மாமனிதர் பாரத ரத்னா மதன் மோகன் மாளவியா அவர்களும் இந்தியாவின் அடையாளம் என்றும், ஒற்றுமை, பாரம்பரியத்தின் பெருமையைப் பாதுகாப்பதற்காக தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்தவர்கள் என்று புகழாரம் சூட்டினார். இந்த இரண்டு ஆளுமைகளும் தங்களது மகத்தான பங்களிப்புகளின் மூலம் நாட்டைக் கட்டமைப்பதில் காலத்தால் அழியாத முத்திரையைப் பதித்துள்ளனர் என்று பிரதமர் தெரிவித்தார்.
டிசம்பர் 25 – ம் தேதி மகாராஜா பிஜ்லி பாசியின் பிறந்த தினத்தையும் குறிக்கிறது என்பதை சுட்டிக்காட்டிய திரு மோடி, லக்னோ நகரத்தின் புகழ்பெற்ற பிஜ்லி பாசி கோட்டை வெகு தொலைவில் இல்லை என்றும், மகாராஜா பிஜ்லி பாசியின் வீரம், நல்லாட்சி, அனைவரையும் உள்ளடக்கிய தன்மை போன்ற பண்புகளின் மரபை விட்டுச் சென்றுள்ளார் என்றும், அவற்றை பாசி சமூகம் பெருமையுடன் முன்னெடுத்துச் செல்கிறது என்றும் குறிப்பிட்டார். 2000 – ம் ஆண்டில் மகாராஜா பிஜ்லி பாசியின் நினைவாக அடல் ஜி அஞ்சல் தலை வெளியிட்ட தற்செயல் நிகழ்வையும் அவர் குறிப்பிட்டார். மாமனிதர் மாளவியா, அடல் ஜி மற்றும் மகாராஜா பிஜ்லி பாசி ஆகியோருக்கு அவர் அஞ்சலி செலுத்தினார்.
சுயமரியாதை, ஒற்றுமை, சேவை ஆகிய பாதைகளை இந்தியாவிற்கு அளித்து, தொலைநோக்குப் பார்வையின் அடையாளமாகத் திகழும் தேசிய நினைவிடத்தை திறந்து வைக்கும் பாக்கியம் தமக்குக் கிடைத்ததாக திரு மோடி கூறினார். டாக்டர் ஷ்யாமா பிரசாத் முகர்ஜி, பண்டிட் தீன் தயாள் உபாத்யாயா ஜி மற்றும் அடல் பிஹாரி வாஜ்பாய் ஜி ஆகியோரின் பிரம்மாண்ட சிலைகள் இங்கு கம்பீரமாக நிற்கின்றன, ஆனால் அவை வழங்கும் உத்வேகம் அதைக் காட்டிலும் பெரியது என்று அவர் எடுத்துரைத்தார். அடல் ஜி-யின் வரிகளை மேற்கோள் காட்டி பேசிய பிரதமர், இந்த தேசிய நினைவிடம், ஒவ்வொரு அடியும், ஒவ்வொரு முயற்சியும் நாட்டைக் கட்டமைப்பதற்காக அர்ப்பணிக்கப்பட வேண்டும் என்றும், கூட்டு முயற்சியால் மட்டுமே வளர்ச்சியடைந்த இந்தியாவின் தீர்மானம் நிறைவேறும் என்றும் அவர் வலியுறுத்தினார். இந்த நவீன உத்வேகத் தளத்திற்காக லக்னோ, உத்தரப்பிரதேசம் மற்றும் ஒட்டுமொத்த தேசத்திற்கும் அவர் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார். இந்த பிரேர்னா ஸ்தலம் கட்டப்பட்டுள்ள நிலத்தில், பல தசாப்தங்களாக 30 ஏக்கருக்கும் அதிகமான பரப்பளவில் குப்பைகள் குவிந்து கிடந்ததாகவும், கடந்த மூன்று ஆண்டுகளில் அவை முழுமையாக அகற்றப்பட்டுள்ளதாகவும் பிரதமர் குறிப்பிட்டார். இந்தப் பணியில் ஈடுபட்ட அனைத்துத் தொழிலாளர்கள், கைவினைஞர்கள், திட்டமிடுபவர்களுக்கும் பிரதமர் வாழ்த்து தெரிவித்தார். மேலும் அம்மாநில முதலமைச்சர் மற்றும் அயராது பணியாற்றிய அவரது முழு அணிக்கும் பாராட்டுகளைத் தெரிவித்தார்.
திவாஹர்
