தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (25.11.2025) கோயம்புத்தூர், காந்திபுரம் மத்திய சிறைச்சாலை வளாகத்தில் 165 ஏக்கர் பரப்பளவிலான செம்மொழிப் பூங்காவிற்கு, முதற்கட்டமாக 45 ஏக்கர் பரப்பளவில் 208.50 கோடி ரூபாய் செலவில் உலகத்தரத்தில் பல்வேறு நவீன வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ள செம்மொழிப் பூங்காவினை மக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்.
செம்மொழிப் பூங்கா அமைத்திட அறிவிப்பு
கோயம்புத்தூரில் 2010-ஆம் ஆண்டு நடைபெற்ற உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டில், அன்றைய முதலமைச்சர் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள், செம்மொழி பூங்கா அமைக்கப்படும் என்று அறிவித்தார்.
அதன் தொடர்ச்சியாக, 22.11.2021 அன்று கோயம்புத்தூர் வ.உ.சி. மைதானத்தில் நடைபெற்ற அரசு விழாவில், காந்திபுரத்தில் பொதுமக்கள் பயன்படுத்தக்கூடிய நடைபாதை போன்ற அனைத்து வசதிகளும், கூட்ட அரங்கு, வெளி அரங்கு போன்ற கட்டமைப்புகளும் கொண்ட செம்மொழிப் பூங்கா இரண்டு கட்டங்களாக அமைக்கப்படும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அறிவித்தார்.
உலகத்தரத்தில் அமைக்கப்பட்டுள்ள செம்மொழிப் பூங்கா மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தல்
இவ்வறிவிப்பினை செயல்படுத்திடும் வகையில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கடந்த 18.12.2023 அன்று செம்மொழி பூங்கா அமைக்கும் பணிக்கு அடிக்கல் நாட்டி, பணிகளை தொடங்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து கோயம்புத்தூர் மாநகராட்சி, காந்திபுரம் மத்திய சிறைச்சாலை வளாகப் பகுதியில் 165 ஏக்கர் நிலப்பரப்பில் அமைக்கவும், தற்போது முதற்கட்டமாக 45 ஏக்கர் நிலப்பரப்பில், உலகத் தரத்திலான பூங்கா அமைப்பதற்கு 208.50 கோடி ரூபாய் நிர்வாக அனுமதி வழங்கப்பட்டது.
கே.பி.சுகுமார்
