கர்நாடக அரசு காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணைக்கட்ட முயற்சி மேற்கொள்வதை தமிழக அரசு தடுக்கும் வகையில் ஆக்கப்பூர்வமாக செயல்பட வேண்டும்.
கர்நாடக அரசு மேகதாது அணைக்கட்டுவது சம்பந்தமாக மத்திய அரசின் அனுமதி பெறப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் உச்சநீதிமன்றம் இத்திட்டம் பற்றி எந்த இறுதி முடிவும் எடுக்கவில்லை.
இருப்பினும் கர்நாடக அரசு மேகதாதுவில் அணைக்கட்ட விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க நேற்றைய தினம் உச்சநீதிமன்றம் அனுமதி அளித்திருப்பது மிகவும் கவனிக்கப்பட வேண்டிய ஒன்று.
தமிழக அரசு மேகதாது அணை சம்பந்தமாக உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாட்டின் உரிமையை பாதுகாக்கும் வகையில் முறையிட வேண்டும்.
எச்சூழலிலும் மேகதாது அணைக்கட்டும் விவகாரத்தில் காங்கிரஸ் கூட்டணி, இந்தி கூட்டணி என சமரசம் செய்துகொள்ளும் வகையில் தமிழக தி.மு.க அரசு பின் வாங்கக்கூடாது.
ஏனென்றால் காவிரி நீரானது டெல்டா மாவட்டங்களில் விவசாயம் நடைபெறுவதற்கும் பல்வேறு மாவட்ட மக்களுக்கு குடிநீராகவும் பயன்படுகிறது.
குறிப்பாக காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையம், காவிரி நதிநீர் ஒழுங்காற்று ஆணையம் மற்றும் உச்சநீதிமன்றம் ஆகியவற்றில் தமிழக அரசு மேகதாது அணை சம்பந்தமாக தமிழகத்திற்கு காவிரி நீரின் உரிமையை நிலைநாட்டும் வகையில் எடுத்துக்கூற வேண்டும்.!
எனவே தமிழக தி.மு.க அரசு மேகதாதுவில் அணைக்கட்டும் கர்நாடக அரசின் முயற்சியை முறியடிக்கும் வகையில் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ்(மூ) சார்பில் வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி கே வாசன் தமது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
எஸ்.திவ்யா
