ஒடிசாவின் கஞ்சம் மாவட்டத்தின் கோபால்பூர் கடற்கரையில், கடந்த 15-ந்தேதி, 20 வயது கல்லூரி மாணவி சுமார் 10 ஆண்களால் கூட்டுப் பாலியல் வன்புணர்வுக்கு ஆளானதாகக் கூறப்படும் ஊடகச் செய்தி குறித்து தேசிய மனித உரிமைகள் ஆணையம் (என்எச்ஆர்சி) தானாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக்கொண்டுள்ளது. பாதிக்கப்பட்ட பெண் ஒரு ஆண் நண்பருடன் ஒரு பண்டிகையைக் கொண்டாட கடற்கரைக்குச் சென்றதாகக் கூறப்படுகிறது. குற்றவாளிகள் அந்த ஆணைத் தாக்கிவிட்டு, குற்றச்செயலில் ஈடுப்பட்டுள்ளனர்.
அந்தச் செய்தியின் உள்ளடக்கங்கள் உண்மையாக இருந்தால், மனித உரிமைகள் மீறல் தொடர்பான கடுமையான பிரச்சினையை இச்சம்பவம் எழுப்புவதாக ஆணையம் கருதுகிறது. எனவே, ஒடிசாவின் தலைமைச் செயலாளர் மற்றும் காவல்துறை தலைமை இயக்குநர் இரண்டு வாரங்களுக்குள் இந்த விவகாரம் குறித்து விரிவான அறிக்கை அளிக்குமாறு ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இந்த அறிக்கையில், வழக்கு விசாரணையின் நிலை, பாதிக்கப்பட்டவரின் உடல்நிலை மற்றும் மாநில அதிகாரிகளால் அவருக்கு வழங்கப்பட்ட இழப்பீடு ஆலோசனை ஏதேனும் இருந்தால், அது உள்ளிட்டவை இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஜூன் 16 வெளியிடப்பட்ட ஊடகச் செய்தியின் படி, பாதிக்கப்பட்டவர் மருத்துவ பரிசோதனைக்காக பெர்ஹாம்பூரில் உள்ள எம்கேசிஜி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளார். இந்த வழக்கில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் ஏழு நபர்களைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
திவாஹர்
