IDPL பெட்ரோலிய நிறுவனம் விவசாய நிலத்தில் கேஸ் பைப் லைன் பதிக்கும் பணியை கைவிட்டு மாற்று வழியில் நிறைவேற்ற வேண்டும்!- ஜி.கே.வாசன் வலியுறுத்தல்.

கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் தற்பொழுது IDPL பெட்ரோலிய நிறுவனம் விவசாய நிலத்தின் வழியே மீண்டும் கேஸ் பைப் பதிக்கின்ற முயற்சியை மேற்கொண்டுள்ளது. விவசாயிகளிடையே மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 1999-ஆம் ஆண்டு CCK பெட்ரோலிய நிறுவனம் விவசாயிகளிடம் பல்வேறு வாக்குறுதிகளை அளித்து கொச்சின் முதல் கரூர் வரை பைப் லைன் அமைத்தது. ஆனால் திட்டம் நிறைவேறியதும் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை. தற்பொழுது எரிவாயு குழாய் பதிக்கப்பட்ட நிலத்தின் மதிப்பு முழுவதுமாக சரிந்துவிட்டது. மேலும் வேளாண்மையும் பொய்த்துவிட்டது. இதனால் விவசாயிகளின் வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கபட்டுள்ளது.

நாட்டின் வளர்ச்சிக்கு புதிய திட்டங்களை கொண்டு வருவது நல்லதுதான். ஆனால் அவை மக்களை பாதிக்காதவாறு அமைய வேண்டும். தற்பொழுது IDPL பெட்ரோலிய நிறுவனம் இருகூர் முதல் கர்நாடக மாநிலம் தேவனகொந்தி வரை சுமார் 360 கிலோ மீட்டர் தூரத்தில், இருகூர் முதல் முத்தூர் வரை உள்ள 70 கிலோ மீட்டர் தூரம் மட்டும் விவசாய நிலங்களில் வழியாக பைப் லைன் அமைக்க முயற்சியை எடுக்கின்றன.

விவசாயிகளின் கோரிக்கை என்னெவென்றால் முத்தூர் முதல் தேவனகுந்தி வரை 290 கிலோ மீட்டர் நெடுஞ்சாலையின் ஓரமாக கேஸ் பைப் லைன் பதிக்கப்பட்டுள்ளது. அதைப் போலவே கோவை மாவட்டம் இருகூர் முதல் முத்தூர் வரை உள்ள 70 கிலோமீட்டர் தூரத்திற்கும் சாலையோரம் கேஸ் பைப் லைன் அமைக்க அரசாணை இருந்தும் IDPL நிறுவனம் விவசாய நிலத்திலேயே அமைக்க கடும் முயற்சியை மேற்கொண்டு வருகிறது. இது மிகுந்த வருத்தம் அளிக்கிறது.

இத்திட்டத்தை எதிர்த்து பல்வேறு அமைப்புகளும், அரசியல் கட்சிகளும், விவசாய பாதுகாப்பு இயக்கமும் தொடர்ந்து போராடி வருகிறது. எனவே விவசாயத்தையும், விவசாயிகளையும் பாதிக்கும் இத்திட்டதை IDPL நிறுவனம் கைவிட்டு மாற்றுவழியில் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி கே வாசன் தமது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Leave a Reply