குஜராத்தின் அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்து 242 பேருடன் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளானது. இதனை ஏர் இந்தியா நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது. ஏஐ171 (AI)171 என்ற எண் கொண்ட விமானம் விபத்துக்குள்ளானது என்று எக்ஸ் பக்கத்தில் ஏர் இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது. மீட்புப் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.
அகமதாபாத் சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து பிரிட்டன் தலைநகர் லண்டன் நோக்கி மதியம் 1:38 மணிக்கு புறப்பட்ட விமானம், 5 நிமிடங்களுக்குப் பிறகு விபத்துக்குள்ளானது. ஏர் இந்தியாவுக்குச் சொந்தமான போயிங் 787-8 ட்ரீம்லைனர் விமானம், விமான நிலையத்துக்கு அருகே உள்ள குடியிருப்புப் பகுதியில் விழுந்து விபத்துக்குள்ளானது.
ஏர் இந்தியா 171 என்ற எண் கொண்ட இந்த விமானத்தில் 230 பயணிகள், 12 பணியாளர்கள் என 242 பேர் பயணித்த நிலையில், அவர்களின் நிலை குறித்த தகவல்கள் கவலை அளிக்கும் விதமாக உள்ளதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. விபத்தை அடுத்து, விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள், காவல் துறை அதிகாரிகள், தீ அணைப்புத் துறையினர் உள்ளிட்டோர் சம்பவ இடத்துக்கு விரைந்து மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
எஸ்.சதிஸ் சர்மா
