தமிழக அரசு மாநிலம் முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகளை தொடர்ந்து பார்வையிட்டு மக்களுக்கான அரசு மருத்துவமனைகளில் உள்ள குறைபாடுகளை களைய வேண்டும்!- ஜி.கே.வாசன் வலியுறுத்தல்.

தமிழக அரசு அரசு மருத்துவமனைகளை தொடர்ந்து பார்வையிட்டு சுத்தம், சுகாதாரத்தைப் பேணவும், மருந்து மாத்திரைகளை வழங்குவதில் உள்ள குறைபாடுகளை களையவும், தனியார் ரத்த பரிசோதனை நிலையங்கள் பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்யவும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

அதாவது பெரும்பாலான அரசு மருத்துவமனைகளில் சுத்தம் சுகாதாரமானது கேள்விக்குறியாக உள்ளது.

குறிப்பாக கழிப்பிட வசதிகளும், குடிநீர் வசதிகளும் சுகாதாரமற்ற நிலையில் இருப்பதாக பொது மக்கள் குறை கூறியுள்ளனர்.

சில மருத்துவமனைகளில் மருத்துவர்களும் தேவைக்கேற்ப பணியில் இல்லை என்பதும் தெரிகிறது.

மருத்துவமனைகளுக்கு வரும் புறநோயாளிகள் மருந்து மாத்திரை வாங்கச் சென்றால் மருந்து மாத்திரைகளை கவரில் போட்டுக்கொடுக்காமல் அப்படியே கையில் கொடுப்பதும், காலை மாலை இரவு, சாப்பாட்டிற்கு முன்பு சாப்பாட்டிற்கு பின்பு என எழுதாமல் அப்படியே கூறுவதும் எப்படி மனதில் பதியும். பெரும்பாலான மருத்துவமனைகளில் மெத்தனப் போக்கில் பணியில் இருப்பது மிகவும் வேதனைக்குரியது.

ரத்த பரிசோதனை நிலையங்கள் தேவைக்கேற்ப அனைத்து மாவட்டப் பகுதிகளில் உள்ள அரசு மருத்துவமனைகளிலும், தனியாரிடமும் இருப்பது மிகவும் அவசியமானது.

மத்திய அரசு, ரத்த பரிசோதனை நிலையங்கள் செயல்பட குறைந்தபட்ச இட நிர்ணயத்தை அறிவிக்கவில்லை. ஆனால் தமிழக அரசு ரத்த பரிசோதனை, எக்ஸ்ரே மற்றும் பிற பரிசோதனை நிலையங்கள் செயல்பட தேவையான இடவசதி குறித்து அரசாணை 390 ல் தெரிவித்திருக்கிறது.

இந்த அரசாணையின்படி தெரிவிக்கப்பட்டுள்ள இட வசதியால் ஏற்கனவே 80 சதவீதத்திற்கு மேலான தனியார் ரத்த பரிசோதனை நிலையங்கள் குறைந்த அளவு இடத்தில் இயங்கி வருவது மூடப்படக்கூடிய நிலைக்கு தள்ளப்பட்டு அவர்கள் பெருமளவு பாதிக்கப்படுவார்கள்.

குறைந்த கட்டணத்தில் தனியார் நடத்தும் ரத்த பரிசோதனை நிலையம் உள்ளிட்ட பிற பரிசோதனை நிலையங்களில் சோதனை செய்து கொள்ள வரும் ஏழை, எளிய மக்கள் பாதிக்கப்படும் சூழலை தமிழக அரசாணை ஏற்படுத்தியுள்ளது. எனவே தமிழக அரசு இந்த அரசாணையை உடனடியாக திரும்ப பெற வேண்டும்.

மேலும் தமிழக அரசு அரசு மருத்துவமனைகளை தொடர்ந்து பார்வையிட்டு சுத்தம், சுகாதாரத்தைப் பேணவும், மருந்து மாத்திரைகளை வழங்குவதில் உள்ள குறைபாடுகளை களையவும், தனியார் பாதிக்காத வகையில் ரத்த பரிசோதனை நிலையங்கள் தேவைக்கேற்ப இருப்பதை உறுதி செய்யவும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ்(மூ) சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி கே வாசன் தமது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Leave a Reply