டி.ஆர்.டி.ஓ-வின் எரிவாயு விசையாழி ஆராய்ச்சி நிறுவனத்தால் (ஜி.டி.ஆர்.இ) வடிவமைக்கப்பட்ட, 350 கிலோ உந்துவிசைத் திறன் கொண்ட முதல் உள்நாட்டு செலவழிப்பு டர்போ ஜெட் இயந்திரம் வெற்றிகரமாக உருவாக்கப்பட்டுள்ளது. இந்த இயந்திரத்தின் உற்பத்தி மற்றும் ஒருங்கிணைப்புப் பணிகளுக்காக, ஹைதராபாத்தைச் சேர்ந்த ஆசாத் இன்ஜினியரிங் நிறுவனத்தை ஜி.டி.ஆர்.இ தனது தொழில் கூட்டாளராக அடையாளம் கண்டிருந்தது. ஜூலை 22, 2026 அன்று, இந்த இயந்திரம் ஆசாத் இன்ஜினியரிங் நிறுவனத்தால் வெற்றிகரமாக உருவாக்கப்பட்டு ஜி.டி.ஆர்.இ-க்கு வழங்கப்பட்டது. இது இந்தியாவின் விண்வெளி மற்றும் பாதுகாப்புச் சூழலுக்கு ஒரு மைல்கல் சாதனையாகும். இந்த ஒப்படைப்பு, பல ஆண்டுகால துல்லியமான பொறியியல், மேம்பட்ட உற்பத்தி மற்றும் இந்தியாவின் அறிவியல் மற்றும் தொழில்துறை சமூகங்களுக்கு இடையேயான நெருங்கிய கூட்டாண்மை ஆகியவற்றின் உச்சகட்டத்தைக் குறிக்கிறது.
ஒரு சில நாடுகளால் மட்டுமே தேர்ச்சி பெற்ற ஜெட் எஞ்சின் தொழில்நுட்பம், உலகின் மிகவும் நுட்பமான பொறியியல் துறைகளில் ஒன்றாகப் பரவலாகக் கருதப்படுகிறது. இதற்கு மிக உயர்ந்த துல்லியம், மேம்பட்ட உலோகவியல் மற்றும் சமரசமற்ற உற்பத்தித் தரநிலைகள் தேவைப்படுகின்றன. டி.ஆர்.டி.ஓ-வின் வடிவமைப்பின் அடிப்படையில் இத்தகைய சிக்கலான அமைப்பை வழங்குவது, இந்தியப் பாதுகாப்புத் துறையின் வளர்ந்து வரும் தொழில்நுட்பத் திறன்களைப் பிரதிபலிக்கிறது.
இந்த இயந்திரத்தை, சிறப்பு விஞ்ஞானி மற்றும் தலைமை இயக்குநர் (விமானவியல் அமைப்புகள்) டாக்டர் கே. ராஜலட்சுமி மேனன் மற்றும் தலைசிறந்த விஞ்ஞானி மற்றும் இயக்குநர் ஜி.டி.ஆர்.இ. டாக்டர் எஸ்.வி. ராமணமூர்த்தி ஆகியோரிடம் ஆசாத் இன்ஜினியரிங் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி திரு ராகேஷ் சோப்தார் அவர்கள் ஒப்படைத்தார்.
பாதுகாப்புச் செயலாளரும், பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத் துறையின் செயலாளரும், டி.ஆர்.டி.ஓ-வின் தலைவருமான திரு ராஜேஷ் குமார் சிங், இந்த தொலைநோக்குப் பார்வையை ஒரு வரலாற்று மைல்கல்லாக மாற்றுவதில் முக்கியப் பங்காற்றிய ஜி.டி.ஆர்.இ மற்றும் தொழில்துறையின் கூட்டாண்மையைப் பாராட்டினார்.
திவாஹர்
