பணி நிரந்தரம் செய்வோம் என்று சொன்னீர்களே; செய்தீர்களா? -கதறும் பகுதி நேர ஆசிரியர்கள்.

S.செந்தில்குமார், பகுதி நேர ஆசிரியர்கள் கூட்டமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர்.

2026 தேர்தலுக்கு திமுக தேர்தல் அறிக்கை தயாரிக்க மக்களவை உறுப்பினர் கனிமொழி தலைமையிலான ஒரு குழுவை திமுக தலைமை அமைத்து உள்ளது.

முந்தைய தேர்தலில் கொடுத்த பகுதிநேர ஆசிரியர்கள் பணிநிரந்தரம், பழைய ஓய்வூதியம் உள்ளிட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் உள்ளபோது அடுத்த தேர்தலுக்காக தேர்தல் அறிக்கை தயாரிக்க ஒரு குழுவை திமுக அமைத்துள்ளது கேலிக் கூத்தாக உள்ளது.

முதல்வர் மு.க.ஸ்டாலின் 2021 தேர்தலில் அளித்த வாக்குறுதிபடி இதுவரை பகுதி நேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்யவில்லை. கடந்த 15 ஆண்டுகளாக தற்காலிகமாக வேலை செய்கின்ற பகுதிநேர ஆசிரியர்களை மனிதாபிமானம் கொண்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் பணி நிரந்தரம் செய்து இருக்க வேண்டும்.

ஆனால், திமுக தேர்தல் அறிக்கையில் 2016 மற்றும் 2021 என இரண்டு முறை கொடுத்த வாக்குறுதியை முதல்வர் மு.க.ஸ்டாலின் நிறைவேற்றவில்லை.

மே மாதம் விடுமுறையில் சம்பளம் இல்லாமல், அரசு சலுகைகள் எதுவும் இல்லாமல் மாதம் வெறும் ரூ.12,500 சம்பளத்தில் அடிப்படை தேவைகளை கூட பூர்த்திச் செய்து கொள்ள முடியாமல் தவிக்கின்ற இந்த 12 ஆயிரம் குடும்பங்களை காப்பாற்ற முதல்வர் மு.க.ஸ்டாலின் பணி நிரந்தரம் செய்யாமல் காலத்தைக் கடத்தி விட்டார்.

அடுத்த 2026 தேர்தல் அறிவிப்பு வெளிவருவதற்கு இன்னும் தோராயமாக 50 நாளே உள்ள நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பகுதிநேர ஆசிரியர்களுக்கு கொடுத்தப் பணி நிரந்தர வாக்குறுதியை நிறைவேற்றி நம்பிக்கையைக் காப்பாற்ற வேண்டும்.

இவ்வாறு தமிழ்நாடு பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் எஸ்.செந்தில்குமார் தமது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Leave a Reply