குப்பையைத் தரம் பிரித்து அகற்றுவதில் கோடிக்கணக்கில் முறைகேடு! தஞ்சாவூர் மாநகராட்சியில் நடந்த தில்லு முல்லு! 4 நபர்கள் மீது ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு வழக்குப் பதிவு! – இதோ முதல் தகவல் அறிக்கையின் உண்மை நகல்.

தமிழ்நாட்டில் தஞ்சாவூர் பழமையான, வரலாற்றுச் சிறப்புமிக்க நகராகும். தஞ்சாவூர் மாவட்டத்திற்கு தஞ்சாவூர் தலைநகரமாக விளங்குகிறது. காவிரி டெல்டா பகுதியில் தஞ்சாவூர் முக்கிய விவசாய பகுதியாகவும், தமிழ்நாட்டின் நெற்களஞ்சியமாகவும் உள்ளது. மேலும், ஆன்மீகத்தின் அடையாளமாகவும், வரலாற்று சிறப்புமிக்க நகரமாகவும் விளங்கும் தஞ்சாவூர் மாநகராட்சியில் குப்பையில் கூட கோடிக்கணக்கில் முறைகேடு மற்றும் ஊழல் நடைபெற்று இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆம், இது சம்பந்தமாக கீழ்காணும் நபர்கள் மீது ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு வழக்குப் பதிவு செய்துள்ளது. (FIR No : 08/2025, Date 24.11.2025, 120 (B) 409, 465, 468, 471 and 109 IPC and Sec 13(2), 13(1) (a) and 12 of PC Act 1988 as amended in 2018) இந்த முதல் தகவல் அறிக்கையின் உண்மை நகல், நமது வாசகர்களின் பார்வைக்காக இங்கு நாம் பதிவு செய்துள்ளோம்.

08-2025-TAN_watermark-1

தஞ்சாவூர் மாநகராட்சி 51 வார்டுகளையும், 36.33 சதுர கிலோ மீட்ட பரப்பளவு கொண்டதாகவும் உள்ளது. மேலும் 2011 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி 222619 மக்கள்தொகையை கொண்டுள்ளது.தஞ்சாவூர் நகராட்சி தமிழக முதலமைச்சரால் 110 விதியின்கீழ் மாநகராட்சியாக தரம் உயர்த்தி அறிவிக்கப்பட்டு, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் அரசாணை எண்.23, நாள்.17.02.2014 ன்படி மாநகராட்சியாக அறிவிக்கப்பட்டு, 19.02.2014 முதல் தஞ்சாவூர் மாநகராட்சியாக செயல்பட்டு வருகிறது. மேற்படி மாநகராட்சியாக அறிவிக்கும்போது ஒரு பேரூராட்சியும், 11 ஊராட்சிகளும் இந்த மாநகராட்சியுடன் இணைக்கப்படும் எனவும், இணைக்கப்பட்ட பின் மாநகராட்சியின் மொத்த பரப்பளவு 128.02 சதுர கிலோ மீட்டர் கொண்டதாகவும், மொத்த மக்கள்தொகை 351655 ஆகவும், அதனுடைய ஆண்டு வருவாய் ரூ.6016.99 இலட்சமாகவும் இருக்கும் என மதிப்பிடப்பட்டது.

தஞ்சாவூர் மாநகராட்சியில் மொத்தமாக 124 மெட்ரிக் டன் குப்பைகள் உருவாகிறது. இவற்றில் 116 மெட்ரிக் டன் குப்பைகள் பொது சுகாதாரப்பிரிவு வாகனங்கள் மூலமாக சேகரிக்கப்படுகிறது. தஞ்சாவூர் மாநகராட்சிக்கு என்று 20.23 ஏக்கர் பரப்பளவில் குப்பைக் கிடங்கு உள்ளது. 225 Push Carts வாகனங்கள் முதன்மை குப்பைச் சேகரிப்பு பணிக்கும், 20 எண்ணிக்கையிலான கனரக வாகனங்கள் மற்றும் 14 எண்ணிக்கையிலான ஆட்டோக்களும் இரண்டாம் நிலை குப்பைச் சேகரிப்பு பணிக்கும் பயன்படுத்தப்பட்டு வருவதாக தஞ்சாவூர் மாநகராட்சி புள்ளி விவரம் கூறுகிறது.

தஞ்சாவூர் மாநகராட்சி குப்பைக் கிடங்கில் ரூ.737.96 இலட்சம் மதிப்பீட்டில் Sanitary Land Fill அமைக்கும் பணியும், ரூ.80.00 இலட்சம் மதிப்பீட்டில் குப்பைகளை உரமாக மாற்றுவதற்கான இயந்திரங்கள் மற்றும் அதற்கான அரங்கு அமைக்கும் பணியும் அமைக்கப்பட்டுள்ளது. ரூ.90.00 இலட்சம் மதிப்பீட்டில் உருவாக்கப்பட்டுள்ள Bio-Methanitation Project முடிக்கப்பட்டு தற்போது பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக தஞ்சாவூர் மாநகராட்சி தெரிவித்துள்ளது.

50 ஆண்டு காலமாக ஒரே இடத்தில் குப்பைகள் கொட்டப்படுவதால், மலைபோல் குவிந்திருந்த நிலையில் அதற்கு மேல் குப்பை கொட்ட முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. அதன் பின் கடந்த 2019 ஆகஸ்ட் மாதம் பணி தொடங்கப்பட்டது. இதற்கு ரூ.15 கோடியே 43 லட்சம் மதிப்பில் மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம் பிரிக்க பெங்களூரைச் சேர்ந்த தனியார் நிறுவனத்துடன் ஒப்பந்தம் போடப்பட்டது.இதையடுத்து குப்பைகளை தரம் பிரித்து வைக்கக்கூடிய 4 இயந்திரம் குப்பை கிடங்குக்கு கொண்டு வரப்பட்டன. தொடர்ந்து மக்கும் குப்பை, மக்காத குப்பை, என தரம் பிரித்து மறுசுழற்சி செய்யும் பணி நடைபெற்று வந்தது. 2.30 லட்சம் கன மீட்டர் குவிந்திருந்த குப்பை மேட்டை 60 ஆயிரம் கன மீட்டர் குப்பைகள் பயோ மெட்ரிக் மூலம் தரம் பிரித்து குப்பையை சற்று குறைத்திருந்தனர்.குப்பை கிடங்கில் தேங்கியுள்ள சாக்குகள்,தேங்காய், ரப்பர்கள் பிளாஸ்டிக் பொருட்கள், பாட்டில்கள், பாலிதீன் பைகள், டயர்கள், நார்கள். துணிமணிகள், கட்டைகள், விளையாட்டு பொருட்கள் மற்றும் ஏராளமான பொருட்கள் காலனிகள் ஆகியவை தரம் பிரிக்கும் இயந்திரம் மூலம் பிரிக்கப்பட்டு, அரைத்து குப்பையில் மக்கி போன மண்ணை வைத்து இயற்கை உரமாக தயாரித்தனர்.

கூடுதலாக 4 அலகுகள், அதாவது மக்கும் குப்பை, மக்கா குப்பைகளை பிரிக்கும் இயந்திரம் வாங்கப்பட்டு, 8 இயந்திரம் கடந்த 2019 ஜுன் மாதம் வரை செயல்பாட்டில் இருந்து வந்தது.

இந்நிலையில் கடந்த 22. 08. 2022 அன்று MSG INFRA என்ற நிறுவனத்தின் ஒப்பந்தத்தை திடீரென ரத்து செய்துவிட்டு, மாநகராட்சி ஒப்பந்ததாரர் பதிவேட்டில் பதிவு செய்யாத Softbery Solutions என்ற நிறுவனத்திற்கு வேலை உத்தரவு (Work Order) வழங்கியுள்ளனர். இதன் மூலம் வேலை செய்யாமலேயே வேலை செய்ததாக ரூ.95682048/- அரசு பணத்தை கூட்டுச் சேர்ந்து அபகரித்துள்ளனர்.

மக்கள் வரிப்பணத்தில் சம்பளம் வாங்கிக் கொண்டு அரசுக்கும் பொதுமக்களுக்கும் விசுவாசமாக சேவை செய்ய வேண்டிய அதிகாரிகள் தனிப்பட்ட ஆதாயத்திற்காக தனியார் நிறுவனத்துடன் சேர்ந்து கூட்டுக் கொள்ளை அடித்திருப்பது நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தஞ்சாவூர் மாநகராட்சியில் மட்டும் தான் இப்படியா? இல்லை தமிழகம் முழுவதும் இதுதான் நிலைமையா? என்பதை பணியில் உள்ள உயர் நீதிமன்ற நீதிபதியின் தலைமையில் ஒரு சிறப்பு விசாரணை குழுவை அமைத்து ஆய்வு செய்ய வேண்டும்.

Leave a Reply