அண்டை மாநிலங்களுக்கு இடையே ஆம்னி பேருந்துகளை இயக்குவதில் உள்ள வரி சம்பந்தமான பிரச்சனைக்கு விலக்கு ஏற்படுத்திக்கொடுக்க வேண்டும் என்ற அனைத்து ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் மற்றும் சுற்றுலா இயக்குபவர்கள் சங்கத்தின் கோரிக்கையை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும்.
தமிழ்நாடு – கேரளா – கர்நாடகா மாநிலங்களுக்கு இடையே ஆம்னி பேருந்துகளை இயக்க முடியாமல் ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தமிழ்நாடு, கேரளா மற்றும் கர்நாடகா மாநிலங்களுக்கு இடையே ஆம்னி பேருந்து சேவையானது புதிய வரி பிரச்சனையால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. சமீபத்தில், கேரள அரசு தமிழ்நாட்டில் இருந்து தனது மாநிலத்திற்கு பயணித்த 30க்கும் மேற்பட்ட ஆம்னி பேருந்துகளுக்கு ரூ.70 லட்சம் அபராதம் விதித்தது. இதையடுத்து, கர்நாடக அரசும் கடந்த ஏழு நாட்களில் ரூ.1 கோடியே 15 லட்சம் அபராதம் விதித்துள்ளது. இதற்கு அண்டை மாநிலங்கள் கூறும் காரணம் மத்திய அரசின் ஆல் இந்தியா பெர்மிட் விதிகளின் படி, ஒரு மாநிலத்தில் பதிவு செய்யப்பட்ட பேருந்து மற்ற மாநிலங்களில் சுற்றுலா நோக்கத்திற்காக இயக்கப்படலாம். ஆனால் ஒவ்வொரு மாநிலமும் தங்களது சாலை வரி மற்றும் அனுமதி விதிகளின் அடிப்படையில் தனித்தனி கட்டணங்களை வசூலிக்கின்றன.
தமிழ்நாடு அரசு தனது மாநிலத்திற்கு வரும் பிற மாநில பதிவெண் கொண்ட பேருந்துகளுக்கு வரி விதித்து வந்ததை காரணம் காட்டி, இப்போது கேரளா மற்றும் கர்நாடக அரசுகளும் அதேபோல தமிழக பதிவெண் கொண்ட பேருந்துகளிடம் வரி வசூலிக்கத் தொடங்கியுள்ளன. இந்த புதிய வரி கொள்கை, தனியார் பேருந்து உரிமையாளர்களுக்கு மிகுந்த சுமையாக மாறியுள்ளது. ஒவ்வொரு காலாண்டிலும் ஒரு பேருந்துக்கு சுமார் ரூ.4.40 லட்சம் வரை சாலை வரி செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
இதனால், தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, புதுச்சேரி மற்றும் தெலுங்கானா மாநிலங்களுக்கிடையே ஆம்னி பேருந்து சேவைகள் இயக்க இயலாத சூழ்நிலை ஏற்பட்டது என ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. குறிப்பாக வரி சுமை காரணமாக பொருளாதார ரீதியாக பேருந்துகளை இயக்க முடியவில்லை என்று தெரிவித்தனர்.
அதாவது ஒவ்வொரு மாநிலத்திற்கும் இடையே இயக்கப்படும் ஆம்னி பேருந்துகளுக்கு காலாண்டிற்கு (90 நாட்கள்) தமிழ்நாட்டின் சாலை வரி ரூ. 1,50,000, AITP சாலை வரி ரூ. 90,00,000 மறும் கேரளா அல்லது கர்நாடகா சாலை வரி சுமாராக 2 லட்சம் என மொத்தம் காலாண்டுக்கு சுமார் ரூ. 4,40,000 செலுத்தி பேருந்துகளை இயக்க முடியவில்லை. உதாரணத்திற்கு தமிழ்நாட்டில் இருந்து கேரளா மாநிலத்திற்கு இயக்கப்பட வேண்டிய 100 க்கும் மேற்பட்ட ஆம்னி பேருந்துகளை இயக்காமல் நிறுத்தி வைத்துள்ளனர்.
இதனால் இரு மாநிலங்களுக்கு இடையேயான பொது போக்குவரத்து பாதிப்படைந்து, தமிழ் நாட்டிலிருந்து ஐயப்பன் கோவிலுக்கு செல்லும் தமிழ்நாட்டின் பயணிகளும் பாதிக்கப்படுவார்கள்.
கேரளா, கர்நாடகா, ஆந்திரா, பாண்டிச்சேரி மற்றும் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஆம்னி பேருந்துகளின் அனைத்து சங்கங்களும் ஆம்னி பேருந்துகளை இயக்க முடியாத சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.
இதனால் தென்னிந்தியாவில் கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, கேரளா மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்களுக்கு இடையேயான ஆம்னி பேருந்து சேவைகள் நிறுத்தப்பட்டு, நீண்ட தூர சேவைகளை நம்பியிருக்கும் பயணிகள் பெரும் சிரமத்திற்கு உட்படுகிறார்கள்.
மேலும் மாநிலங்களுக்கு இடையேயான சுற்றுலா, தொழில்சார் பயணங்கள் பாதிக்கப்படும் அபாயம் நிலவுகிறது.
எனவே தமிழக அரசு – அண்டை மாநிலங்களான கேரளா மற்றும் கர்நாடகா அரசுடன் தொடர்பு கொண்டு அந்தந்த மாநில பேருந்துகளுக்கும் சாலை வரியில் விலக்கு பெற்று, அண்டை மாநிலங்களுக்கு தொடர்ந்து ஆம்னி பேருந்துகளை இயக்குவதற்கான வழி வகையை ஏற்படுத்திக்கொடுக்க வேண்டும் என்று என்று தமிழ் மாநில காங்கிரஸ்(மூ) சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி கே வாசன் தமது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
சி.கார்த்திகேயன்
