சேட்டை செய்த கே.ஏ. செங்கோட்டையன்! கட்சிப் பதவிகளை பறித்த எடப்பாடி கே.பழனிச்சாமி! அடுத்து என்ன நடக்கும்?

K.A. செங்கோட்டையன்.

அஇஅதிமுகவின் அமைப்புச் செயலாளராகவும்; ஈரோடு புறநகர் மேற்கு மாவட்டச் செயலாளராகவும் பொறுப்பில் இருந்த கே. ஏ. செங்கோட்டையன் அப்பொறுப்புகளில் இருந்து விடுவிக்கப்பட்டிருக்கிறார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை அஇஅதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிச்சாமி இன்று வெளியிட்டு இருக்கிறார்.

அஇஅதிமுகவில் முக்கியப் பொறுப்பில் இருந்து கொண்டே கட்சியின் மூத்த உறுப்பினரான கே.ஏ.செங்கோட்டையன்; தன்னுடைய இருப்பைத் தக்க வைத்துக் கொள்வதற்காக கடந்த சில மாதங்களாக எடப்பாடி கே பழனிச்சாமிக்கு எதிராக பல்வேறு திரை மறைவு வேலைகளை தொடர்ந்து செய்து வந்தார். தனது ஆதரவாளர்களுடன் தன்னிச்சையாகவும் செயல்பட்டு வந்தார். இத்தகைய ராஜதந்திரங்கள் எடப்பாடி கே. பழனிச்சாமியிடம் எடுபடவில்லை. இன்னும் வெளிப்படையாக சொல்லப் போனால் கே ஏ செங்கோட்டையனை எடப்பாடி கே.பழனிச்சாமி ஒரு பொருட்டாகவே அவர் நினைக்கவில்லை. இதனால் கே. ஏ. செங்கோட்டையன் சமீபகாலமாக அஇஅதிமுகவிலிருந்து ஓரங்கட்டப்பட்டார்.

இந்நிலையில் நேற்று (செப்டம்பர் 5) செய்தியாளர்களை சந்தித்த செங்கோட்டையன் அஇஅதிமுக தலைமை எவ்வாறு செயல்பட வேண்டும்; எப்படி எதிர்வரும் தேர்தலை சந்திக்க வேண்டும் என்பது குறித்து பொதுவெளியில் புலம்பியதோடு, அதற்கு மறைந்த மேனாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆரையும் துணைக்கு அழைத்துக் கொண்டார். எடப்பாடி கே. பழனிச்சாமிக்கு காலக்கெடுவும் விதித்தார்.

எப்படா சிக்குவான் இந்த செங்கோட்டையன் என்று எதிர்பார்த்து காத்திருந்த எடப்பாடி கே.பழனிச்சாமி இன்று (செப்டம்பர் 6) அஇஅதிமுக பொறுப்புகளில் இருந்து அவரை அதிரடியாக விடுவித்துள்ளார்.

கே ஏ செங்கோட்டையன் சட்டமன்ற உறுப்பினராக இருப்பதால்தான் கட்சி பொறுப்புகளில் இருந்து மட்டும் இன்று விடுவிக்கப்பட்டிருக்கிறார். இல்லையென்றால் இவர் செய்த; செய்திருக்கும் துரோக வேலைகளுக்கு கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் இன்று நிச்சயம் நீக்கப்பட்டிருப்பார்.

ஆம், கட்சி வளர்ச்சிக் குறித்தும்; கட்சியின் எதிர்காலம் குறித்தும்; தேர்தல் கூட்டணி குறித்தும் அஇஅதிமுக பொதுச் செயலாளரிடம் நேரிலோ (அல்லது) எழுத்துப்பூர்வமாகவோ அவரது ஆலோசனைகளை கே.ஏ. செங்கோட்டையன் தெரிவித்திருக்கலாம். (அல்லது) அஇஅதிமுக செயற்குழு, பொதுக்குழு மற்றும் ஆலோசனைக் குழு கூட்டங்களுக்கு சென்று தனது கருத்தை ஆணித்தரமாகப் பதிவு செய்திருக்கலாம். இப்படி எந்த முயற்சியும் எடுக்காமல்; பொதுவெளியில் செய்தியாளர்களிடம் பேசி இருப்பது. மூத்த உறுப்பினரான செங்கோட்டையனின் இத்தகைய செயல் கட்சி விதிமுறைகளுக்கு புறம்பானது. இது ஒரு அரசியல் அநாகரிகம்.

எனவே கட்சிக் கட்டுப்பாட்டை மீறி கட்சிக்கும் கட்சித் தலைமைக்கும் களங்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற கெட்ட நோக்கத்தோடு கே ஏ செங்கோட்டையன் செயல்பட்டு இருக்கிறார். இதனால் இவருக்கு விளக்கம் கேட்டு விரைவில் நோட்டீஸ் அனுப்ப அஇஅதிமுக தலைமை முடிவெடுத்துள்ளது.

அதற்கு முறையான விளக்கம் அளிக்காத பட்சத்தில் விரைவில் கே.ஏ. செங்கோட்டையன் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து அதிரடியாக நீக்கப்படுவார்.

கே.ஏ.செங்கோட்டையனுக்கு நல்ல காலம் வருவதும்; கெட்ட காலம் வருவதும் இனி அவருடைய நடத்தையின் மூலமாகத்தான் தெரிய வரும்.

என்ன நடக்கிறது என்பதைப் பொறுத்திருந்துப் பார்ப்போம்.

Leave a Reply