அடிதடி பிரச்சனையை விசாரிக்கச் சென்ற சிறப்பு உதவி காவல் ஆய்வாளர் சண்முகவேல் அரிவாளால் வெட்டிக்கொலை! இரவு நேரத்தில் நடந்த பயங்கரம்! முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில் குளறுபடி! – தமிழ்நாடு செய்தி மக்கள் தொடர்புத் துறையின் அலட்சியம்.

வெட்டிக் கொலை செய்யப்பட்ட சிறப்பு உதவி காவல் ஆய்வாளர் சண்முகவேல்.

முதலில் வெளியிடப்பட்ட செய்தி அறிக்கை.

அடுத்து வெளியிடப்பட்ட செய்தி அறிக்கை.

திருப்பூர் மாவட்டம் உடுமலைபேட்டை அருகே உள்ள குடிமங்கலம் பகுதியில் மடத்துக்குளம் அதிமுக எம்எல்ஏ மகேந்திரனுக்கு சொந்தமான தோட்டம் உள்ளது. இங்கு திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த மூர்த்தி என்பவரும், அவரது மூத்த மகன் தங்கபாண்டியன், இளைய மகன் மணிகண்டன் என்பவர்களும் குடும்பத்துடன் தங்கி பணியாற்றி வருகின்றனர்.மூன்று பேரும் நேற்று இரவு மதுப்போதையில் தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதில் தங்கபாண்டி, மணிகண்டன் சேர்ந்து தனது தந்தை மூர்த்தியை கடுமையாக தாக்கியுள்ளனர்.

இது குறித்து அருகில் இருந்தவர்கள் காவல் அவசர உதவி எண் 100 க்கு அழைத்து தகவல் தெரிவித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து குடிமங்கலம் காவல் நிலையத்தில் பணியாற்றி வரும் சிறப்பு உதவி ஆய்வாளர் சண்முகவேல் அந்தப் பகுதி அருகே ரோந்து பணியில் ஈடுபட்டிருந்ததால் அவருக்கு முதல் தகவல் கொடுக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து அங்கு சென்ற உதவி ஆய்வாளர் சண்முகவேல் தந்தை மகன் சண்டையை சமாதானம் செய்ய முயன்றுள்ளார். போலீஸ் வந்ததை பார்த்த மணிகண்டன் தோட்டத்தில் சென்று பதுங்கி கொண்டார். காயமடைந்த மூர்த்தியை ஆம்புலன்சில் அனுப்பி வைக்க ஏற்பாடு செய்துள்ளார். மேலும், மூர்த்தி தங்கபாண்டியை செல்போனில் படங்களை எடுத்து காவல் நிலையத்தில் பணியில் இருந்தவர்களுக்கு அனுப்பி வைத்துள்ளார். இருவரிடமும் சாதாரணமாக பேசிக் கொண்டிருந்த போது மறைந்திருந்த மணிகண்டன் உதவி ஆய்வாளரை வெட்டியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த சண்முகவேல் தப்பிக்க முயன்று ஓடி உள்ளார். ஆத்திரத்தில் இருந்த தங்கபாண்டியும் அவனது தந்தை மூர்த்தியும் துரத்தி சென்றுள்ளனர். போதையில் இருந்த 3 பேரும் சேர்ந்து உதவி ஆய்வாளரை வெட்டிக் கொலை செய்தனர். உடன் இருந்த ஓட்டுநரையும் துரத்திச் சென்றுள்ளனர். அவர் தப்பி ஓடி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளார்.

சம்பவ இடத்திற்கு வந்த குடிமங்கலம் போலீசார் தப்பிச் சென்ற தந்தை மூர்த்தி மகன்கள் தங்கபாண்டி, மணிகண்டன் என மூன்று பேரையும் தேடி வருகின்றனர்.

தப்பி ஓடிய கொலையாளிகள்.

சம்பவம் குறித்து 5 தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தமிழ்நாடு முழுவதும் இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கும் நிலையில் உயிரிழந்த சண்முகவேல் குடும்பத்திற்கு ஆறுதலும் மற்றும் நிதி உதவி வழங்கவும் தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

இதில் தான் தமிழ்நாடு செய்தி மக்கள் தொடர்புத்துறை குளறுபடி செய்துள்ளது. ஆம், இச்சம்பவம் குறித்து இன்று முதலில் வெளிவந்த செய்திக் குறிப்பில் சிறப்பு உதவி காவல் ஆய்வாளர் சண்முகவேல் குடும்பத்திற்கு ரூ. 30 லட்சம் நிதி உதவி வழங்கப்படும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

அதன் பிறகு வெளிவந்த இரண்டாவது செய்தி அறிக்கையில் ஒரு கோடி ரூபாய் நிதி உதவி வழங்க உத்தரவிட்டிருப்பதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

காவல்துறையினர் மற்றும் அரசு ஊழியர்கள் பணியின் போது வன்முறை, கலவரம் மற்றும் சமூக விரோதிகளின் தாக்குதலால் வீரமரணம் அடைந்தால் அவர்களது குடும்பத்திற்கு ஒரு கோடி ரூபாய் நிவாரண உதவி வழங்கப்படும் என்ற உத்தரவு ஏற்கனவே தமிழக அரசு நடைமுறைப்படுத்தி வரும் நிலையில் முதல்வர் அலுவலகமும் மற்றும் தமிழ்நாடு செய்தி மக்கள் தொடர்புத்துறையும் இதுபோன்று குளறுபடியானச் செய்தி அறிக்கைகளை வெளியிடுவது முதலமைச்சருக்கு மிகப்பெரிய பாதிப்பை உண்டாக்கும். இத்தகைய அலட்சியம் தமிழ்நாடு அரசின் நம்பகத் தன்மையை கேள்விக் குறியாக்கும்.

மேலும், அந்த அறிக்கையின் முதல் பத்தி நான்காவது வரியில் தனியார் என்று பதிவு செய்வதற்கு பதிலாக தனியர் என்று பதிவுச் செய்யப்பட்டுள்ளது. அடுத்து வெளியிட்ட இரண்டாவது செய்தி அறிக்கையிலும் அந்த எழுத்துப் பிழை அப்படியே உள்ளது. அப்படியானால் செய்தி மக்கள் தொடர்புத்துறையில் பிழைத் திருத்துனர் பணியில் யார் இருக்கிறார்கள்?

முதலமைச்சர் பெயரில் வெளிவரும் செய்தி அறிக்கை கூட எழுத்துப் பிழை; கருத்துப் பிழை இல்லாமல் வெளியிட முடியாது என்றால், அதற்கு எதற்கு செய்தி மக்கள் தொடர்புத்துறை என்ற ஒரு அமைச்சகம்?!

.

Leave a Reply