கேட் கீப்பரின் அலட்சியத்தாலும், பள்ளி வேன் ஓட்டுனரின் கவனக்குறைவாலும், பள்ளி வேன் மீது இரயில் மோதிய விபத்தில் 2 குழந்தைகள் உயிரிழந்த நிகழ்வு அதிர்ச்சியளிக்கிறது.
கடலூர் மாவட்டம், செம்மங்குப்பம் அருகே ரயில்வே கேட்டைக் கடக்க முயன்ற பள்ளி வேன் மீது சிதம்பரம் நோக்கிச் சென்ற இரயில் மோதி விபத்துக்குள்ளாகி இருக்கிறது. இந்த கோர விபத்தில், 11 ஆம் வகுப்பு மாணவி சாருமதி, மாணவர் நிமிலேஷ் ஆகியோர் உயிரிழந்துள்ளனர். மேலும், பள்ளி வாகன ஓட்டுனர் உள்பட நான்கு பேர் படுகாயமடைந்திருப்பது கவலையளிக்கிறது.
இந்த விபத்திற்கு, செம்மங்குப்பம் ரயில்வே கேட் மூடப்படாததும், கேட் கீப்பர் மெத்தனப்போக்குடன் செயல்பட்டதுமே காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒரு கேட் கீப்பர் உள்ள லெவல் கிராசிங்கில் பள்ளி வேன் மீது இரயில் மோதிய விபத்தில் 2 மாணவர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். கேட் கீப்பர் பணியில் பங்கஜ் ஷர்மா என்பவர் இருந்துள்ளார்.
பள்ளி வேன் மீது இரயில் மோதியதில் சுமார் 50 அடி தொலைவிற்கு வேன் இழுத்து செல்லப்பட்டுள்ளது. காயமடைந்துள்ள வேன் ஓட்டுநர் உள்பட நான்கு பேர் கடலூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து செல்லப்பட்டுள்ளனர். வேன் ஓட்டுநர் பள்ளிக்கு சரியான நேரத்தில் செல்ல வேண்டும் என்று கேட்டுக்கொண்டதை அடுத்து கேட் கீப்பர் லெவல் கிராசிங் கேட்டைத் திறந்து வைத்ததாக தெற்கு ரயில்வே அதிகாரிகள் கூறுகிறார்கள்.
சில கேள்விகளுக்கு இங்கு பதில் வேண்டும்:
ஒரு interlocking level crossing ல், கேட் மூடவில்லை என்றால் லைன்னில் அதற்கு முன் உள்ள சிக்னல் சிவப்பாக இருக்க வேண்டும். அப்படி இருக்கும் போது எப்படி அந்த இரயில் நிற்காமல் வந்து வேன் மீது மோதியது? ஒரு வேளை சிக்னல் பச்சை நிறத்தில் இருந்திருந்தால் (கேட் மூடினால் மட்டுமே run through சிக்னல் வரும்), அந்த வேன் டிரைவர் எப்படி கேட்டை தாண்டி உள்ளே வந்தார்? இதுவும் புதிராக உள்ளது!
அது non-interlocked crossing என்று தற்போது தகவல் வந்துள்ளது. அந்த இரயில்வே கேட்டின் முழு பாதுகாப்பும் கேட் கீப்பரையே சாரும். அதாவது ஸ்டேஷன் மாஸ்டர் மூடுவதற்கு ஆணையிட்டபின், மூடிவிட்டு மீண்டும் திறப்பதற்கு அனுமதி வரும் முன் திறக்க கூடாது. ஒன்று அவர் திறந்திருக்க வேண்டும் அல்லது கேட் மூடாமல் இருந்திருக்க வேண்டும்.
இந்த விபத்தில் பள்ளி வேன் ஓட்டுனரின் அவசர புத்தியும்; கவன குறைவும் முக்கியக் காரணமாக இருந்திருக்கிறது. சாலையில் நாய் ஓடினால் கூட விழிப்பாக இருக்க வேண்டிய ஓட்டுநர்; பள்ளிக் குழந்தைகளை ஏற்றிக்கொண்டு ஒரு இரயில்வே கேட்டை கடப்பதற்கு முன்பு மிகவும் எச்சரிக்கையாகவும்; விழிப்பாகவும் இருந்திருக்க வேண்டுமா? வேண்டாமா? இரயில்வே கேட் திறந்து இருந்தாலும் இவ்வளவு பெரிய இரயில் வரும் சப்தம் வேன் ஓட்டுனரின் காதுக்கு கேட்காமலா இருந்திருக்கும்?!
ஆசை ஆசையாய் அவசர அவசரமாய் பள்ளிக்கூடத்திற்கு புறப்பட்டு வேனில் சென்ற இந்தக் குழந்தைகளையும்; குழந்தைகளை வழியனுப்பி வைத்த பெற்றோர்களையும் நினைக்கும் போது உண்மையிலுமே நெஞ்சம் பதைக்கிறது.
ஒவ்வொரு பெற்றோரும் தன் குழந்தைகளை மட்டும் தான் உலகம் என்று நம்பிக் கொண்டிருக்கிறார்கள். குழந்தைகளின் கல்விக்காகவும்; அவர்களின் எதிர்கால கனவுகளுக்காக மட்டும் தான் அவர்கள் வாழ்ந்துக் கொண்டிருக்கிறார்கள். அப்படி இருக்கும்போது இந்த இழப்பை அவர்கள் எப்படி ஏற்றுக் கொள்வார்கள்?!இவர்களுக்கு எப்படி ஆறுதல் சொல்ல முடியும்? 16 ஆண்டுகள் வளர்த்த பிள்ளையை இன்று ஒரு நொடியில் இரயிலுக்கு பலி கொடுத்து அனாதையாய் நிற்கும் அவர்களை எப்படி தேற்ற முடியும்?! இந்தச் செய்தியை இங்கு பதிவு செய்யும் நமக்கே கண்ணீர் முட்டுகிறது.
இந்த விபத்துக்கானக் காரணத்தைக் கண்டுபிடிப்பதற்காக விசாரணை நடத்தி வருகிறார்களாம். போங்கய்யா நீங்களும்; உங்க விசாரணையும்.
முக்கிய குறிப்பு:
பள்ளி வாகனம் மீது ரயில் மோதிய விபத்தில் உயிரிழந்த மாணவர்களின் எண்ணிக்கை 3 ஆக உயர்வு மேல் சிகிச்சைக்காக ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மாணவன் செழியன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் .
–Dr.துரைபெஞ்சமின், BAMS.,
M.A.,SOCIOLOGY,
Ex. Honorary A.W.Officer, Govt Of India,
Editor & Publisher,
www.ullatchithagaval.com
Director, UTL MEDIA OPC PVT LTD,
Mobile No.98424 14040
