தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மற்றும் துணை முதலமைச்சர் உதயநிதி ஆகியோர் வெளி மாவட்டங்களுக்கு கார் மூலம் சுற்றுப்பயணம் செய்யும்போது அவர்கள் செல்லும் வழித்தடத்தில் சாலைகளில் உள்ள வேகத்தடைகள் அனைத்தும் இரவோடு, இரவாக அகற்றப்படுகிறது. ஆனால், மறுபடியும் அதே இடங்களில் வேகத்தடைகள் அமைப்பதற்கு பல மாதங்கள் ஆகிறது. அப்படியே வேகத்தடை அமைத்தாலும் வேகத்தடை இருப்பதற்கான அடையாளமாக அதன் மீது பெயிண்ட் அடிப்பதில்லை. இதனால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். சாலை விபத்துக்கள் ஏற்படுவதற்கும் இது முக்கிய காரணமாக இருக்கிறது. மேலும், முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் வருகை தந்தால் மட்டும்தான் சாலை பராமரிப்பு, மராமத்து மற்றும் சாலை ஓரத்தில் இருக்கும் மண் குப்பைகளை அகற்றும் பணிகள் நடக்கிறது. மற்ற தருணங்களில் அப்பகுதிகளை அதிகாரிகள் திரும்பி கூட பார்ப்பதில்லை. தமிழ்நாடு முழுவதும் இதே தான் நிலைமை.
தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையில் ஒரு நேர்மையான குழுவை அமைத்து இரகசியமாக திடீர் கள ஆய்வு செய்தால் நாம் மேலே குறிப்பிட்டு இருப்பது 100 சதவீதம் உண்மை என்பது தெரியவரும்.
அந்த வகையில் கல்லணையில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடுவதற்காக ஜூன் 15ஆம் தேதி திருச்சிராப்பள்ளி மாவட்டம், ஸ்ரீரங்கம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட திருச்சி – சென்னை பைபாஸ்சாலை, தங்கையன் கோயில், திருவளர்சோலை, பனையபுரம், உத்தமச்சேரி, கிளிக்கூடு வழியாக கல்லணைக்கு சாலை மார்க்கமாக முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் பயணம் மேற்கொண்டார். இவரது வருகையை முன்னிட்டு மேற்படி வழித்தடத்தில் இருந்த சுமார் 12 க்கும் மேற்பட்ட வேகத்தடைகள் இரவோடு, இரவாக அதிகாரிகளின் உத்தரவின் பெயரில் அகற்றப்பட்டது.
ஆனால், கடந்த 20 நாட்களுக்கு மேலாகியும் அந்த வழித்தடத்தில் அகற்றப்பட்ட வேகத்தடைகள் ஒன்று கூட இந்தச் செய்தி பதிவேற்றம் செய்யும் (05/07/2025) இந்த நிமிடம் வரை மீண்டும் அங்கு அமைக்கப்படவில்லை.
இதனால் அந்த வழித்தடத்தில் செல்லும் சுற்றுலாப் பயணிகளும், அந்த பகுதிகளில் வசிக்கும் கிராமப் பொதுமக்களும், பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ, மாணவிகளும், அன்றாடம் வேலைக்கு செல்லும் நபர்களும் மற்றும் இருசக்கர, நான்கு சக்கர வாகனங்களின் செல்லும் வாகன ஓட்டிகளும் உயிரை கையில் பிடித்துக் கொண்டுதான் செல்ல வேண்டி இருக்கிறது.
மேலும், அரசுப் பேருந்துகளும், சுற்றுலாச் செல்லும் வாகனங்களும், குறிப்பாக அந்தப் பகுதியில் இருந்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு வந்து செல்லும் வாகனங்களும் அந்த வழித்தடத்தில் தான் சென்று கொண்டிருக்கிறது. இதைத் தவிர சிமெண்ட் கலவை ஏற்றிச் செல்லும் கனரக வாகனங்களும், செங்கல் கற்களை ஏற்றிச் செல்லும் லாரிகளும் அதிக எண்ணிக்கையில் அந்த வழித்தடத்தில் சொல்கிறது.
எனவே, மேற்படி திருச்சி – கல்லணை சாலையில் முதல்வர் வருகைக்காக இரவோடு, இரவாக அகற்றப்பட்ட வேகத்தடைகள் அனைத்தையும் போர்க்கால அடிப்படையில் மீண்டும் அதே இடத்தில் அமைத்து, வேகத்தடை இருப்பதற்கு அடையாளமாக அதன் மீது பெயிண்ட் அடித்து விபத்துக்கள் ஏற்படாமல் தடுப்பதற்கு போர்க்கால அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்க முதலமைச்சர் மு க ஸ்டாலின் அதிகாரிகளுக்கு உடனே உத்தரவிட வேண்டும்.
–Dr.துரைபெஞ்சமின், BAMS.,
M.A.,SOCIOLOGY,
Ex. Honorary A.W.Officer, Govt Of India,
Editor & Publisher,
www.ullatchithagaval.com
Director, UTL MEDIA OPC PVT LTD,
Mobile No.98424 14040
