ஆந்திரப் பிரதேசத்தின் விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற 11-வது சர்வதேச யோகா தின கொண்டாட்டங்களில் பிரதமர் நரேந்திர மோதி உரையாற்றினார்.

பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று ஆந்திரப் பிரதேசத்தின் விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற 11-வது சர்வதேச யோகா தின நிகழ்வில் உரையாற்றினார். சர்வதேச யோகா தின கொண்டாட்டங்களுக்கு பிரதமர் தலைமை தாங்கி யோகா அமர்வில் பங்கேற்றார்.

இந்த நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர், இந்தியாவிலும் உலகம் முழுவதிலும் உள்ள மக்களுக்கு சர்வதேச யோகா தின வாழ்த்துக்களைத் தெரிவித்தார். இந்த ஜூன் 21-ம் தேதி உலகம் முழுவதும் கூட்டாக யோகா பயிற்சி செய்ய ஒன்றுகூடும் நிகழ்வாகும் என்பதை அவர் எடுத்துரைத்தார். யோகாவின் சாராம்சம் ஒன்றிணைவது என்றும், யோகா உலகை எவ்வாறு ஒன்றிணைத்துள்ளது என்பதைப் பார்ப்பது மகிழ்ச்சியளிக்கிறது என்றும் அவர் குறிப்பிட்டார். கடந்த பத்து ஆண்டு யோகா பயணத்தைப் பற்றிப் பேசுகையில், ஐக்கிய நாடுகள் சபையில் சர்வதேச யோகா தின யோசனையை இந்தியா முன்மொழிந்த தருணத்தை திரு நரேந்திர மோடி நினைவு கூர்ந்தார். 175 நாடுகள் இந்த திட்டத்தை ஆதரித்ததாகவும், இது உலகளாவிய ஒற்றுமைக்கான ஒரு அரிய நிகழ்வாகும் என்றும் அவர் குறிப்பிட்டார். இந்த ஆதரவு யோகா தினத்திற்கு மட்டுமல்ல எனவும், மனிதகுலத்தின் நன்மைக்காக உலகின் கூட்டு முயற்சியைக்கான ஆதரவு என்றும் அவர் கூறினார். 11 ஆண்டுகளில், யோகா உலகம் முழுவதும் கோடிக் கணக்கான மக்களின் வாழ்க்கை முறையின் ஒருங்கிணைந்த பகுதியாக மாறிவிட்டது என்று அவர் தெரிவித்தார். பார்வை மாற்றுத் திறனாளிகள் பிரெய்லி முறையில் யோக நூல்களைப் படிப்பதையும், விஞ்ஞானிகள் விண்வெளியில் யோகா பயிற்சி செய்வதையும் கண்டு பிரதமர் பெருமை தெரிவித்தார். யோகா ஒலிம்பியாட்களில் கிராமப்புற இளைஞர்களின் உற்சாகமான பங்கேற்பையும் அவர் குறிப்பிட்டார். சிட்னி ஓபரா ஹவுஸின் படிகளாக இருந்தாலும் சரி, எவரெஸ்ட் சிகரமாக இருந்தாலும் சரி, அல்லது கடலின் பரந்த பரப்பாக இருந்தாலும் சரி, “யோகா அனைவருக்கும் பொதுவாக உள்ளது என அவர் கூறினார. எல்லைகளுக்கு அப்பால், பல்வேறு பின்னணிகளுக்கு அப்பால், வயது அல்லது திறன்களுக்கு அப்பால் யோகா அனைவரையும் இணைத்துள்ளது என்பதை திரு நரேந்திர மோடி சுட்டிக் காட்டினார்.

விசாகப்பட்டினத்திற்கு வந்து நிகழ்ச்சியில் பங்கேற்பது குறித்து மகிழ்ச்சி தெரிவித்த திரு நரேந்திர மோடி, இயற்கை மற்றும் முன்னேற்றத்தின் இணைவு என்று வர்ணித்ததோடு, இந்த நிகழ்வை சிறப்பாக ஏற்பாடு செய்த அனைவரையும் பாராட்டினார். ஆந்திர முதலமைச்சர் திரு சந்திரபாபு நாயுடு துணை முதலமைச்சர் திரு பவன் கல்யாண் ஆகியோருக்குப் பிரதமர் வாழ்த்துகளைத் தெரிவித்தார். ஆந்திரப் பிரதேசம் யோகாந்திரா அபியான் என்ற ஒரு குறிப்பிடத்தக்க முயற்சியைத் தொடங்கியதையும் பிரதமர் எடுத்துரைத்தார். யோகா ஒரு உண்மையான சமூக கொண்டாட்டம் என்பதும், சமூகத்தின் ஒவ்வொரு பிரிவினரையும் யோகா மூலம் உள்ளடக்க முடியும் என்பதும் நிரூபிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

இரண்டு கோடிக்கும் மேற்பட்ட மக்கள் யோகாந்திரா அபியானில் இணைந்துள்ளனர் எனவும் இது பொது பங்கேற்பின் துடிப்பான உணர்வை பிரதிபலிக்கிறது என்றும் அவர் குறிப்பிட்டார். ,இந்த உணர்வுதான் ஒரு வளர்ச்தி அடைந்த பாரதத்தின் அடித்தளத்தை உருவாக்குகிறது என்பதை அவர் எடுத்துரைத்தார். மக்கள் தாங்களாகவே ஒரு பணியை ஏற்றுக்கொண்டு தீவிரமாக பங்கேற்கும்போது, எந்த இலக்கும் எட்ட முடியாததாக இருக்காது என்று அவர் குறிப்பிட்டார். விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வு முழுவதும் மக்களின் நல்லெண்ணமும், உற்சாகமான முயற்சிகளும் காணப்பட்டதாக திரு நரேந்திர மோடி கூறினார்.

இந்த ஆண்டு சர்வதேச யோகா தின கருப்பொருளான “ஒரே பூமி – ஒரே ஆரோக்கியத்திற்கு யோகா” என்பதை சுட்டிட்டுக் காட்டிய பிரதமர், பூமியில் உள்ள ஒவ்வொரு பொருளின் ஆரோக்கியமும் ஒன்றோடொன்று இணைக்கப்பட்டுள்ளது என்ற ஆழமான உண்மையை இந்த கருப்பொருள் பிரதிபலிக்கிறது என்று குறிப்பிட்டார்.  உணவை உற்பத்தி செய்யும் மண், தண்ணீரை வழங்கும் ஆறுகள், சுற்றுச்சூழல் அமைப்புகளைப் பகிர்ந்து கொள்ளும் விலங்குகள், நம்மை வளர்க்கும் தாவரங்கள் ஆகியவற்றின் ஆரோக்கியத்தைப் பொறுத்தே மனித நல்வாழ்வு அமையும் என்று அவர் கூறினார். யோகா இந்த ஒன்றோடொன்று இணைந்த தன்மைக்கு நம்மை தயாராக்கி, உலகத்துடன் ஒற்றுமையை நோக்கிய பயணத்தில் நம்மை வழிநடத்துகிறது என்பதை திரு நரேந்திர மோடி எடுத்துரைத்தார். நாம் தனியான நபர்கள் அல்ல என்றும் மாறாக இயற்கையின் ஒருங்கிணைந்த பகுதி என்பதை யோகா நமக்குக் கற்பிக்கிறது என்றும் அவர் கூறினார். யோகா மூலம், தொடக்கத்தில் நமது சொந்த ஆரோக்கியத்தையும் நல்வாழ்வையும் கவனித்துக் கொள்கிறோம் என்றும் படிப்படியாக, இந்த அக்கறை நமது சுற்றுச்சூழல், சமூகம் மற்றும் பூமி என முழுவதற்கும் விரிவடைகிறது எனவும் அவர் குறிப்பிட்டார். யோகா என்பது ஒரு ஆழமான தனிப்பட்ட ஒழுக்கம் எனவும் அதே நேரத்தில், ஒரு கூட்டு கலையாகவும் அது செயல்படுகிறது என்றும் அவர் கூறினார். தனிநபர்களை என்ற நிலையில் இருந்து நாம் என்பதற்கு யோகா நம்மை மாற்றுகிறது என்று பிரதமர் தெரிவித்தார்.

“நானும் நாமும்” என்ற எண்ணம் இந்தியாவின் ஆன்மாவையே உள்ளடக்கியுள்ளது என்று கூறிய திரு நரேந்திர மோடி, ஒரு தனிநபர் சுயநலத்திற்கு அப்பால் உயர்ந்து சமூகத்தைப் பற்றிப் பொதுவாக சிந்திக்கத் தொடங்கும்போது,  மனிதகுலத்தின் நலன் அனைத்தும் சாத்தியமாகும் என்று குறிப்பிட்டார். இதுவே இந்திய கலாச்சாரம் என அவர் குறிப்பிட்டார். இந்த சிந்தனைதான் சமூக நல்லிணக்கத்தை வளர்க்கிறது என்று பிரதமர் கூறினார்.

உலகின் பல்வேறு பகுதிகளில் அதிகரித்து வரும் அமைதியின்மை மற்றும் உறுதியற்ற தன்மை குறித்து கவலை தெரிவித்த திரு நரேந்திர மோடி, இதுபோன்ற காலங்களில், யோகா அமைதிக்கான பாதையை வழங்குகிறது என்று குறிப்பிட்டார். யோகா என்பது மனிதகுலத்தை சமநிலைப்படுத்த தேவையான கருவி என்று அவர் கூறினார். இந்த யோகா தினம் மனிதகுலத்திற்கான யோகா 2.0-வின் தொடக்கத்தைக் குறிக்கட்டும் எனவும் இதில் உள் அமைதி உலகளாவிய கொள்கையாக மாறட்டும் என்றும்  பிரதமர் கூறினார். யோகா வெறும் தனிப்பட்ட பயிற்சியாக மட்டும் இருக்கக்கூடாது எனவும் மாறாக உலகளாவிய ஒத்துழைப்புகளுக்கான ஒரு ஊடகமாக உருவாக வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். ஒவ்வொரு தேசமும் ஒவ்வொரு சமூகமும் யோகாவை தங்கள் வாழ்க்கை முறையிலும் பொதுக் கொள்கையிலும் ஒருங்கிணைக்க வேண்டும் என்று அவர் அழைப்பு விடுத்தார். அமைதியான, சமநிலையான, நிலையான உலகத்தை முன்னேற்றுவதற்கான கூட்டு முயற்சிக்கு திரு நரேந்திர மோடி அழைப்பு விடுத்தார். யோகா, உலகை மோதலில் இருந்து ஒத்துழைப்புக்கும், மன அழுத்தத்திலிருந்து தீர்வுகளுக்கும் வழிநடத்துவதாக அவர் மேலும் கூறினார்.

Leave a Reply