மதிமுகவை உடைக்கச் சதி! விகடன் வெளியிட்ட செய்தியில் உண்மை இல்லை! -மதுரை தெற்கு தொகுதிச் சட்டமன்ற உறுப்பினர் புதூர் மு.பூமிநாதன் ஆதங்கம்.

மதுரை தெற்கு தொகுதிச் சட்டமன்ற உறுப்பினர் புதூர் மு.பூமிநாதன்.

விகடன் வெளியிட்ட பொய் செய்தி.

மதிமுக பொதுச் செயலாளர் வைகோவுடன் மு.பூமிநாதன். (File Photo)

தமிழ்நாட்டு அச்சு ஊடகங்களில் விகடன் போன்ற பாரம்பரியம் மிக்க சில ஊடகங்கள் ஓரளவுக்கு உண்மையை எழுதுவார்கள் என்ற நம்பிக்கை வைத்திருந்த எனக்கு இன்று வந்த செய்தியை பார்த்து பெருத்த ஏமாற்றம் தான்.

எந்த ஆதாரத்தின் அடைப்படையில் இப்படிப்பட்ட செய்திகளை அச்சிடுகிறார்கள் என்ற கேள்வி தான் எழுகிறது..!!

தலைவர் வைகோ அவர்களோடு பெரிய அறிமுகம் இல்லாத காலத்திலேயே என்னை அரசியலில் ஆளாக்கிய அண்ணன் பொன்.முத்துரலிங்கம் அவர்களுக்காக தான் மறுமலர்ச்சி திமுகவில் என்னை இணைத்துக்கொண்டவன். என் உடன் பிறந்த அண்ணன்களுக்கு மேல் நான் மதிக்கும் அண்ணன் பொன்.முத்துராமலிங்கம் திமுகவில் இணைந்த போது கூட மறுமலர்ச்சி திமுகவில் தலைவர் வைகோ அவர்களோடு நின்றவன் நான். தோல்விகளும் துன்பங்களும் நிறைந்திருந்தாலும் வைகோ என்ற மாமனிதரை பின்தொடர்கிறோம் என்ற திருப்தியில், எத்தனையோ போராட்டங்கள் சிறைவாசம் என அத்தனையும் கடந்து, தலைவர் என்கிற இடத்தைத் தாண்டி அவரை ஒரு தந்தையின் இடத்தில் நானும், உடன்பிறந்த சகோதரனைப் போல் அவர் என்னையும் நினைத்துக் கொண்டிருக்கையில் நான் கட்சி. மாறுவதை பற்றி யோசிக்கிறேன் என்ற செய்தி பார்த்து நகைக்கத்தான் வேண்டி இருக்கிறது.

நான் பெரிய செல்வந்தர் குடும்பத்து பிள்ளையோ, மிட்டா மிராசோ கிடையாது. என் தந்தை ஒரு எளிய விவசாயி. திருமணம் ஆகும் வரையில் ராமநாதபுரத்தின் கரிசல் காடுகளில் செம்மறி ஆடுகளை மேய்த்துக்கொண்டிருந்தவன் நான்.

யாரையுமே தெரியாமல் கையில் வெறும் 500 ரூபாயோடு மதுரைக்கு பிழைக்க வந்தவன் இந்த பூமிநாதன். நான்கு முறை தேர்தலில் நின்று மூன்றுமுறை தோற்று இன்று தமிழ்நாட்டில் உள்ள 234 சட்டமன்ற உறுப்பினர்களில் ஒருவனாக இருப்பவன்.

தனியாக தேர்தலை சந்தித்த போதும் சரி, அண்ணா திமுக கூட்டணியில் 35 தொகுதிகள் வழங்கிய போதும் சரி, திமுக கூட்டணியில் 6 தொகுதிகள் மட்டுமே பெற்ற போதும் கூட இந்த பூமிநாதனுக்கு தெற்கு தொகுதியை பெற்றுத்தந்தது நான் சட்டமன்ற உறுப்பினராகும் வாய்ப்பை வழங்கியவர் எங்கள் தலைவர்.

என்னை நன்கு அறிந்த அனைவருக்குமே தெரியும் இத்தனை ஆண்டு கால பொது வாழ்க்கையில் எதற்காகவும் யாரிடமும் பல்லைக்காட்டிக்கொண்டு நின்றதோ, பயந்து, பணிந்து, குனிந்து, யாரையும் அண்டிப்பிழைத்ததோ கிடையாது. பதவியில் இருந்தால் வாக்களித்த மக்களுக்கு ஒரு உண்மையான ஊழியனாக பணியாற்றுவேன் இல்லையேல் என்னுடைய விவசாய வேலைகளை பார்க்கப்போகிறேன்.

உழுகின்ற மண்ணையும், உழைக்கின்ற என்னையும் மட்டுமே நம்பி தான் இத்தனை ஆண்டுகளை மறுமலர்ச்சி திமுகவில் தொடர்கிறேன். இனியும் அப்படித்தான்.

“நில்லாத வற்றை நிலையின என்றுணரும்
புல்லறி வாண்மை கடை”

நிலையில்லாதவைகளை நிலையானவை என்று மயங்கி உணரும் புல்லறிவு உடையவராக இருத்தல் வாழ்க்கையில் இழிந்த நிலையாகும் என்று திருக்குறள் கூறியது போல் பணம், பதவி என்பது வரும் போகும் இவைகளையெல்லாம் நிலையானவை என்று நினைக்கும் மனிதர்கள் நமக்கு முன் வாழ்ந்து வீழ்ந்த பெரும் பெரும் ஜாம்பவான்களையும், சாம்ராஜ்யங்களையும் நினைத்துப்பார்க்கவேண்டும்.

ஐந்து பிள்ளைகளைப்பெற்று ஐவரும் நல்ல நிலையில் தான் இருக்கின்றார்கள். ஐந்து பேரின் திருமணத்தையும் தலைவர் வைகோ தான் நடத்தி வைத்தார்கள். பேரன் பேத்திகள் மருத்துவம் படிக்கிறார்கள். சட்டமன்ற உறுப்பினரின் மகன், மகள் நாங்கள் என்று எங்குமே கூறிக்கொள்ளக்கூட மாட்டார்கள் எம் பிள்ளைகள். என் மனைவிக்கு வீடு தான் உலகம் வேறு ஒன்றுமே தெரியாது. உழைப்பதைத் தவிர எதுவும் தெரியாத நான் சட்டமன்ற உறுப்பினர். எல்லா வகையிலும் நிம்மதியான, நிறைவான வாழ்வை வாழ்ந்துகொண்டிருக்கும் எனக்கு பதவி என்பது ஒரு பொருட்டே அல்ல.

நான் தெய்வமாக நினைக்கும் என் தந்தை எனக்கு சொல்லிக்கொடுத்தது இரண்டு விஷயங்கள் தான், உன்னால் முடிந்தால் பிறருக்கு உதவி செய், முடியாவிட்டால் உன் வேலையை பார், தப்பித்தவரிகூட யாருக்கும் கெடுதல் செய்யாக்கூடாது. சிறு துரும்பின் அளவு உதவி செய்தவர்களைக்கூட உயிருள்ளவரை நினைக்க வேண்டும்.

ஆடு மாடுகளை சந்தையில் விலைக்கு வாங்குவதுபோல் மனிதர்களையும் விலைபேசும் இன்றைய உலகத்தில் எங்களின் விசுவாசம் விற்பனைக்கல்ல என்பதை விகடன் பத்திரிக்கைக்கு தெரிவித்துக்கொள்கிறோம்.

இவ்வாறு மதிமுக முக்கிய நிர்வாகியும், மதுரை தெற்கு சட்டமன்றத் தொகுதி உறுப்பினருமான புதூர் மு.பூமிநாதன், விகடன் வெளியிட்ட செய்திக்கு விளக்கம் அளித்துள்ளார்.

Leave a Reply