தமிழக அரசு –அரசு மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்காக வரும் ஏழை, எளிய, நடுத்தர மக்களுத்தான் அரசு மருத்துவர்களின் பணி பேருதவியாக இருப்பதை உணர்ந்து அதற்கேற்ப ஆட்சி செய்ய வேண்டும்.
அரசு மருத்துவர்களுக்கான சட்டப்போராட்டக் குழு – கால முறை ஊதிய உயர்வு, பதவி உயர்வு, கொரோனா கால பணியில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இழப்பீடு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சேலம் மேட்டூரில் இருந்து சென்னை வரை நடைபயணம் மேற்கொண்டுள்ளனர்.
அரசு மருத்துவர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்று கடந்த சட்டமன்றத் தேர்தலின் போது வாக்குறுதி அளித்த தி.மு.க ஆட்சிக்கு வந்த பிறகு இன்னும் அதை நிறைவேற்றவில்லை. இதனால் அரசு மருத்துவர்கள் மற்றும் அவர்களது குடும்பங்கள் தான் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஒரு அசாதாரண கொரோனா காலச்சூழலில் அரசு மருத்துவமனைகள் அனைத்து தரப்பு மக்களுக்குமான சிகிச்சைக்கு ஏற்ற இடமாக இருந்ததற்கு காரணம் அரசு மருத்துவர்களும், செவிலியர்களும், பணியாளர்களும் தான்.
குறிப்பாக பெருந்தொற்று காலத்தில் பணியாற்றிய போது 11 அரசு மருத்துவர்கள் உயிரிழந்தனர். உயிரிழந்த அரசு மருத்துவர்களில் இன்னும் மருத்துவர் விவேகானந்தன் குடும்பத்தில் ஒருவருக்கு வேலை வழங்கவில்லை.
அரசு மருத்துவர்களுக்கு அரசாணை 354 ன் படி 12 ஆண்டுகளுக்கான ஊதிய விகிதம் வழங்க வேண்டும். மத்திய அரசு மருத்துவர்களுக்கு இணையாக, மாநில அரசு மருத்துவர்களுக்கும் ஊதியம் உயர்த்தப்பட வேண்டும்.
அரசு மருத்துவமனைகளில் உள்ள காலிப்பணியிடங்களை முழுமையாக காலம் தாழ்த்தாமல் நிரப்ப வேண்டும். மேலும் அரசு மருத்துவமனைகளுக்கு வரும் நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப அரசு மருத்துவர்கள், செவிலியர்கள் பணியில் இருந்தால் தான் சிகிச்சை அளிப்பதில் தாமதமோ, தடையோ இருக்காது. ஆனால் இன்னும் பல அரசு மருத்துவமனைகளில் போதிய எண்ணிக்கையில் மருத்துவர்கள் உள்ளிட்ட பல்வேறு பணியாளர்கள் இல்லாமல் பற்றாக்குறை உள்ளது.
அரசு மருத்துவர்கள் அவர்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி, பல போராட்டங்களை நடத்திய பிறகு இன்னும் அரசு அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றவில்லை என்பது ஏமாற்றும் செயல்.
இந்நிலையில் தான் 11 ஆம் தேதியான நேற்று மருத்துவர் சங்கத்தினர்
சேலம் மேட்டூரில் இருந்து சென்னை நோக்கி சுமார் 400 கிலோ மீட்டர் நடைபயணம் தொடங்கினர்.
எனவே தமிழக அரசு பொது சுகாதாரத் துறையின் கட்டமைப்பை வலுப்படுத்துவதன் அவசியத்தையும், அரசு மருத்துவர்களுக்கான சட்டப்போராட்டக் குழுவின் கோரிக்கைகளையும் கவனத்தில் கொண்டு உடனடியாக கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ்(மூ) சார்பில் வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி கே வாசன் தமது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
சி.கார்த்திகேயன்
