தமிழ் மொழியின் தொன்மையையும், அவற்றின் நீண்ட நெடிய வரலாற்று உண்மையையும் இங்கு முழுமையாகப் பதிவு செய்யத்தான் எமக்கும் விருப்பம். ஆனால், கரையில் இருந்துக் கொண்டு கடலை அளவிட முடியாது; தரையில் நின்று கொண்டு ஆகாயத்தை அவ்வளவு எளிதில் வளைத்து விட முடியாது என்பதால் கன்னட மொழியின் வரலாற்றை இங்கே பதிவு செய்திருக்கிறேன்.
உன் நண்பனைக் காட்டு உன்னைப் பற்றி நான் தெரிந்து கொள்கிறேன்! –என்ற வாழ்க்கைத் தத்துவத்தின் அடிப்படையில் கன்னட மொழியின் வரலாற்றை இங்கு தெரிந்து கொள்வதின் மூலம் தமிழ் மொழியின் தொன்மையையும்; உண்மையையும் இங்கு புரிந்துக்கொள்ள முடியும். எனவே கைப்புண்ணிற்கு கண்ணாடித் தேடி அலைய வேண்டிய அவசியம் இல்லை..
முக்கியக் குறிப்பு:
இந்த ஆய்வுக் கட்டுரைக் குறித்து நேர்மறை / எதிர்மறைக் கருத்துக்கள் யாருக்காவது இருந்தால் அதை ஆதாரப்பூர்வமாக எங்களுக்கு அனுப்பி வைத்தால் அதையும் வெளியிடுவதற்கு நாங்கள் தயாராக இருக்கிறோம்.
கருத்துக்கள் புனிதமானவை; விமர்சனங்கள் சுதந்திரமானவை!
–Dr.துரை பெஞ்சமின்., BAMS., M.A., SOCIOLOGY,
Ex. Honorary A.W.Officer, Govt Of India,.
மருத்துவ மற்றும் வரலாற்றுச் சுவடிகள் ஆய்வாளர்,
Editor and Publisher,
www.ullatchithagaval.com
Director, UTL MEDIA (OPC) PRIVATE LIMITED
Mobile No.98424 14040.
E-mail : editorutlmedia@gmail.com
கன்னடம் பேசும் மக்களை ‘கன்னடர்’ என அழைக்கப்படுகிறார்கள். அவர்கள் கர்நாடகாவை பூர்வீகமாகக் கொண்டவர்கள், ஆனால் அண்டை மாநிலங்களிலும் கன்னடம் பேசப்படுகிறது. குறிப்பாக தமிழ்நாட்டின் மொத்த மக்கள் தொகையயில் 2.2% மக்கள் கன்னடம் பேசுகின்றனர்.
கன்னடம், தென்னிந்தியாவில் உள்ள கர்நாடக மாநிலத்தின் அதிகாரப்பூர்வ மொழியாகும். அது திராவிட மொழிக் குடும்பத்தைச் சேர்ந்தது. சுமார் 4.5 கோடி மக்களால் பேசப்படும் இந்த மொழி, உலகளவில் 27 வது இடத்தில் அதிகம் பேசப்படும் மொழியாகக் கருதப்படுகிறது.பேசும் மக்களின் எண்ணிக்கை அடிப்படையில், இது திராவிட மொழிகளுள் மூன்றாவது பெரிய மொழியாகும். மேலும், தமிழுக்கு அடுத்தப்படியாக மிகப் பழமையான இலக்கியங்களைக் கொண்டுள்ள திராவிடமொழி கன்னடமே. இந்தியாவின் 22 தேசிய மொழிகளுள் இதுவும் ஒன்று. 2008 ம் ஆண்டு நவம்பர் 1 அன்று இந்திய அரசால் கன்னடம் செம்மொழியாக அறிவிக்கப்பட்டது.
கன்னட மொழியில் எழுதப்பட்ட இலக்கியம் கன்னட இலக்கியம் ஆகும். முதலாம் நூற்றாண்டில் இருந்தே கன்னட கல்வெட்டுக்கள் உள்ளன. எனினும் பொ.ஊ. 9 ம் நூற்றாண்டி இருந்தே இலக்கியங்கள் இன்று கிடைக்கின்றன. கன்னட இலக்கியங்கள் கால வரையாக பின்வருமாறு பிரிக்கப்படுகின்றன:
பழங்கால கன்னட இலக்கியம் (பொ.ஊ. 600–1200)
இடைக்கால கன்னட இலக்கியம் (1200–1700)
தற்கால கன்னட இலக்கியம் (1700–இன்று)
பழங்காலம் (600 – 1200)
கன்னட இலக்கியத்தின் முதல் பெரும் படைப்பாக பொ.ஊ. 9 ம் நூற்றாண்டில் எழுந்த கவிராச மார்க்கம் கருதப்படுகிறது. இந்த நூல் கவிதையியல் பற்றியது. 10 ஆம் நூற்றாண்டில் வட்டாராதனே என்னும் சிறுகதைத் தொகுப்பு நூல் எழுந்தது. இந்த நூல் சமண சமயக் கருத்துக்களை எடுத்துரைத்தது. இக்காலத்தில் பம்பா, இரன்னா போன்ற கன்னட மகாகவிகள் எழுதினார்கள். இதனால் கன்னட இலக்கியத்தின் பொற்காலம் என்றும் இது குறிப்பிடப்படுவதுண்டு. இக்காலத்தில் சமண சமயம் சிறப்புற்று இருந்தது.
இடைக்காலம் (1200 – 1700)
போசளப் பேரரசு எழுச்சியுடன் சமணம் வீழ்ச்சி அடைந்து, வீர சைவம் உயர் நிலை பெற்றது. இக்காலத்தில் எழுந்த இலக்கியங்கள் வீரசைவ சாகித்தியா என்று குறிப்பிடுவர். 1300 களில் இருந்து 1500 வரை விசய நகரக் கர்நாடகம் விசய நகரப் பேரரசின் ஆட்சிக்கு உட்பட்டது. இவர்களின் ஆதரவில் வைணவ சமயமும், கன்னட வைணவ இலக்கியமும் வளர்ச்சி பெற்றன. விசய நகர வீழ்ச்சிக்குப் பின்பு மைசூர் அரசு மற்றும் கேளடி நாயக்கர்கள் ஆகியோர் கர்நாடகத்தை ஆட்சி செய்தனர். இவர்களின் ஆட்சியின் கீழும் பல கன்னட இலக்கியங்கள் படைக்கப்பெற்றன.
தற்காலம் (1700 – இன்று)
18 ம் நூற்றாண்டு தொடக்கம் ஐரோப்பியர் ஆட்சி இந்தியாவிலும், கர்நாடகத்திலும் நிகழ்ந்தது. ஐரோப்பியரின் தாக்கத்தில் புதினம், கலைக்களஞ்சியம், அகராதி, பத்திரிகை, இதழ் போன்ற வடிவங்கள் கன்னடத்தில் வளர்ச்சி பெற்றன. 20 ம் நூற்றாண்டில் பல இலக்கிய இயக்கங்கள் கன்னடத்தில் பிறந்தன. 20 நூற்றாண்டின் தொடக்கத்தில் எழுந்த நவ உதயம் (புதிய எழுச்சி) இலக்கிய இயக்கம் அன்றாட வாழ்வின் விடயங்கள் பற்றி, மனிதபிமான விடயங்கள் பற்றி கருக்களில் இலக்கியம் படைத்தது. 1940 களில் கன்னட முற்போக்காளர் இலக்கிய இலக்கியம் எழுந்தது. இவர்கள் இடதுசாரிக் கருத்துக்களை முன்வைத்து தமது இலக்கியங்களை படைத்தனர். 1950 களில் நவ்யா இலக்கிய இயக்கம் வளர்ச்சி பெற்றது
பழங்கால எழுத்துக்கள்:
கி.பி 5 ஆம் நூற்றாண்டில், கன்னட மொழியில் எழுதப்பட்ட கல்வெட்டுகள் காணப்படுகின்றன. கி.பி 578 மங்கலேஷாவின் பாதாமி கல்வெட்டு ஒரு முக்கிய சான்று.
கன்னடம், நிர்வாகம் மற்றும் வழிபாட்டு நோக்கங்களுக்காக பயன்படுத்தப்படுவதற்கு முன்பே, பிராகிருத மொழி பேசும் மக்களுடன் தொடர்பு கொண்டு, அவர்களின் மொழியில் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கலாம்.
இம்மொழியின் எழுத்து வடிவம் தெலுங்கு மொழியின் எழுத்து வடிவத்தை ஒத்து இருந்தாலும் இலக்கணம்,சொற்கள் அடிப்படையில் தமிழ்தான் மிகவும் நெருங்கியதாகும்.
கன்னட மொழி எழுத்துக்கள்
கன்னட மொழியானது மூல தென் திராவிட மொழியிலிருந்து பிரிந்ததாக எண்ணுகின்றனர். எப்பொழுது இப்பிரிவு நிகழ்ந்தது என்று கூறப் போதிய சான்றுகள் இல்லை. பேச்சு மொழியாக 2000 ஆண்டுகளேனும் இருந்திருக்க வேண்டும். பிராகிருத, சமசுகிருத மொழிகளின் தாக்கத்தை இம்மொழியில் காணலாம். மொழியின், அகரவரிசை நெடுங்கணக்கில் வல்லின மெய்யெழுத்துக்கள் ஒவ்வொன்றும் சமசுகிருதம் போல நான்கு வேறுபாடுகள் உள்ளனவாக அமைத்துக்கொண்டனர். இவ்வமைப்பு எப்பொழுதிலிருந்து நிலவி வருகின்றதெனத் தெரியவில்லை.
கல்வெட்டுக்களில் மிகவும் தொன்மையானது பொ.ஊ. 450 ஐச் சார்ந்த ஹல்மிதி கல்வெட்டாகும். இது ஹளே கன்னடம் (= பழைய கன்னடம்) மொழியில் உள்ளது. பதாமி மலையில் பொ.ஊ. 543 ஆம் ஆண்டைச் சேர்ந்த ஒரு கல்வெட்டில் ஹளே கன்னட மொழி எழுத்துக்களில் சமசுகிருத மொழி கல்வெட்டு ஒன்று உள்ளது. பழைய கன்னடத்தில் தமிழ் ழகரமும், தமிழ் வல்லின றகரமும், இரண்டுசுழி னகரமும் இருந்தன. தென்கன்னடப் பகுதியில் (தக்ஷின் கன்னடாவில்) 1980ல் தான் னகரத்தை விலக்கினார்கள்.
மேற்கு கங்கர் ஆட்சிக் காலத்தில் (பொ.ஊ. 444) எழுதப்பட்டதாகக் கருதப்படும் தும்புலா செப்பேடுகளில் சமசுகிருத–கன்னட இருமொழி பொறிப்புகள் உள்ளது. 8 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தென் கன்னடப் பகுதியில் பெல்மன்னு என்னும் இடத்தில், ஆலுவரச-2 என்னும் அரசன் ஆண்ட காலத்தில் ஹளே கன்னட மொழி எழுத்துக்களில் முழு கன்னட மொழி செப்பேடு ஒன்று அறியப்படுகின்றது.
இலக்கிய வகையில், பொ.ஊ. 700 ஆம் ஆண்டளவில் திரிபாதி சந்தத்தில் கப்பெ அரபட்டா எழுதிய பாடல்கள் பழமையானவை. ஆனால் இன்று கிடைத்துள்ளவற்றுள் நிருபதுங்க அமோகவர்ஷா என்னும் அரசனால் பொ.ஊ. 850 ஆம் ஆண்டளவில் எழுதப்பட்ட கவிராஜமார்கம் என்னும் நூலே பழமையானது. பொ.ஊ. 900ல் சிரவணபலகுலாவைச் சேர்ந்த பத்திரபாஃகுவின் வாழ்க்கையை விளக்கும், சிவகோட்டியாச்சார்யர் எழுதிய வட்டராதனே (?) என்னும் நூல் அடுத்ததாக உள்ள பழமையான நூல் ஆகும்.
20 ஆம் நூற்றாண்டு இலக்கியத்தில் கன்னடம் முன்னணி வகிக்கும் ஓர் இந்திய மொழி ஆகும். இந்தியாவில் எம்மொழியினும் அதிக எண்ணிக்கையில் ஞானபீடப் பரிசுப் பெற்ற மொழி கன்னடம் ஆகும். இதுவரை 7 இலக்கிய எழுத்தாளர்கள் ஞானபீடப் பரிசுகள் பெற்றுள்ளனர். இது தவிர 48 சாகித்திய அகாதமிப் பரிசகளும் பெற்றுள்ளது.
ஞானபீட பரிசு பெற்றவர்கள்:
1967 குவெம்பு (ஸ்ரீ ராமாயண தர்ஷனம்) (Kuvempu for Sri Ramayana Darshanam)
1973 டா. ரா பெந்த்ரே (நாக்கு தந்தி) (Da.Ra.Bendre for Naaku thanthi)
1977 சிவராம் கரந்த் (மூக்காஜ்ஜிய கனசுகளு) (Shivaram Karanth for Mookajjiya Kanasugalu)
1983 மாஸ்தி வெங்கடேச ஐயங்கார் (சிக்கவீர ராஜேந்திரா) (Masti Venkatesh Iyengar for Chikaveera Raajendhra)
1990 வி.க்ரு கோகக் (பாரத சிந்து ராஷ்மி) (Vi.Kru.Gokak for Bhaaratha Sindhhu Rashmi)
1994 யு.ஆர். ஆனந்தமூர்த்தி (கன்னட சங்கிரஹ சாஹித்யம்/ கன்னட மொழி ஆக்கங்களுக்கு) (U.R.Ananthamurthy for his works in Kannada / samagra sahitya)
1998 கிரிஷ் கர்னாட் (கன்னட சங்கிரஹ சாஹித்ய நாடக ஆக்கங்களுக்கு) (Girish Karnad for his dramatic works in Kannada / samagra sahitya)
உயிர் எழுத்துக்கள்
கன்னடத்தில் 13 உயிர் எழுத்துக்கள் உள்ளன. உயிரெழுத்துக்களை ஸ்வர என்று அழைக்கின்றனர். அவையாவன:
திராவிடக் குடும்ப மொழிகள்
ಅ (அ), ಆ (ஆ), ಇ (இ), ಈ (ஈ), ಉ (உ), ಊ (ஊ), ಋ (ரு), ಎ (எ), ಏ (ஏ), ಐ (ஐ), ಒ (ஒ), ಓ (ஓ), ಔ (ஔ)
யோகவாஹா
உயிர் எழுத்துக்கள் தவிர, பாதி உயிரெழுத்து ஒலியாகவும், பாதி மெய்யெழுத்து ஒலியாகவும் இருப்பதாகக் கருதப்படும் யோகவாஹா என்னும் இரு எழுத்துக்கள் உண்டு. அவையாவன:
அனுஸ்வரம்: ಂ (அம்)
விசர்கம்: ಃ (ஃ)
மெய் எழுத்துக்கள்
கன்னட மொழியில் தமிழில் உள்ள க,ச,ட,த,ப ஆகிய ஐந்து வல்லின எழுத்துக்கள் ஒவ்வொன்றையும் நான்கு விதமாக வேறுபடுத்திக் காட்டுவர்.
ஒலிப்பிலா ஒலிப்பிலா
வெடிப்பொலி ஒலிப்புடை ஒலிப்புடை
வெடிப்பொலி மூக்கொலி
கடைநா
கடையண்ண ஒலிகள் : ಕ (க1, ka) ಖ (க2, kha) ಗ (க3, ga) ಘ (க4gha) ಙ (ங, nga)
இடைநா
இடையண்ண ஒலிகள் : ಚ (ச1, ca) ಛ (ச2, cha) ಜ (ச3, ja) ಝ (ச4, jha) ಞ (ஞ, nya)
நுனிநா
மேலண்ண ஒலிகள் : ಟ (ட1, tta) ಠ (ட2, ttha) ಡ (ட3, dda) ಢ (ட4, ddha) ಣ (ண, nna)
பல் உறழ் ஒலிகள் : ತ (த1, ta) ಥ (த2, tha) ದ (த3, da) ಧ (த4, dha) ನ (ந, na)
இதழ் ஒலிகள் : ಪ (ப1, pa) ಫ (ப2, pha) ಬ (ப3, ba) ಭ (ப4, bha) ಮ (ம, ma)
மேலுள்ளனவன்றி, தமிழில் உள்ளது போன்ற இடையின மெய்யெழுத்துக்கள் வரிசையும் உண்டு. அவையாவன:
ಯ (ய, ya), ರ (ர, ra), ಲ (ல, la), ವ (வ, va), ಶ (ஶ, sha), ಷ ( ஷ, shha), ಸ (ஸ, sa), ಹ (ஹ, ha), ಳ (ள, lla), மற்றும்,ಱ (ற, Ra),ೞ (ழ, zha) (ழ&றகரங்கள் 12ஆம் & 18ஆம் நூற்றாண்டுகளில் உபயோகத்திலிருந்து மறைந்துவிட்டன)
பேச்சுக் கன்னடம்
கன்னடத்தின் எழுத்துருவம் தெலுங்கை ஒத்துள்ளபோதிலும் பேச்சுக் கன்னடம் தமிழை ஓரளவு ஒத்தாகும்.
எண்கள்
1- ஒந்து (ஒன்று (தமிழில்))
2- எரடு (இரண்டு (தமிழில்))
3- மூரு (மூன்று (தமிழில்))
4- நாலக்கு (நான்கு (தமிழில்))
5- ஐது (ஐந்து (தமிழில்))
6- ஆறு (ஆறு (தமிழில்))
7- ஏளு (ஏழு (தமிழில்))
8- என்டு (எட்டு (தமிழில்))
9- ஒம்பத்து (ஒன்பது (தமிழில்))
10- ஹத்து (பத்து (தமிழில்))
100- நூறு (நூறு (தமிழில்))
1000- ஸாவிரா (ஆயிரம் (தமிழில்))
பொதுவானவை
நானு – நான் (தமிழில்)
குத்கொலி – அமருங்கள் (பேச்சுத் தமிழ்: உக்காருங்க, சென்னை, செங்கல்பட்டுத் தமிழில் குந்து, குந்திக்கோங்க) (தமிழில்)
பருத்தீரா? – வாறீங்களா (தமிழில்)
ஹௌதா? – அப்படியா (தமிழில்)
ஆமேலே பர்த்தினி – அப்புறமா வரேன் (தமிழில்)
எஷ்டு – (எவ்வளவு (தமிழில்)
எஷ்டாகிதே – (எவ்வளவு ஆகீயிருகுதுங்க (தமிழில்)
கன்னட சொல்ப சொல்ப பரத்தே (கன்னடம் கொஞ்சம் கொஞ்சம் அறிவேன் (தமிழில்))
கெண்டித்தி/மனையவரூ (மனைவி (தமிழில்))
ஊட்டா (சாப்பாடு (தமிழில்))
திண்டி (சிற்றுண்டி (தமிழில்))
நிம்ம ஹெசரு ஏனு (உங்க பெயர் என்ன? (தமிழில்))
சென்னாகிதீரா? (நலமாக உள்ளீர்களா? (தமிழில்))
ஹேகிதிரா? – (எப்படி இருக்கிறீர்கள்? (தமிழில்))
மல்கொளி – (படுத்துக் கொள்ளுங்கள் (தமிழில்))
மனே எள்ளீதே (வீடு எங்குள்ளது (தமிழில்))
பூப்பசந்திர ஹோகுதா இல்வா? (பொதுவா பஸ்களில்: பூப்பசந்திரம் போகுதா இல்லையா? (தமிழில்))
சொல்ப நீர் கொடி (கொஞ்சம் தண்ணீர் தரவும்(தமிழில்))
நானு நிம்கெ ப்ரீத்தி மாடுத்தேனெ(நான் உங்களைக் காதலிக்கின்றேன் (தமிழில்))
எனவே, தமிழுக்கும், கன்னடத்திற்கும் எவ்வளவு நெருக்கமானத் தொடர்பு இருக்கிறது என்று இப்போது உங்களுக்கு தெளிவாகப் புரிந்திருக்கும் என்று நினைக்கிறேன்.
அவரவர் தாய் அவர் அவர்களுக்கு எப்படி புனிதமானதோ; பெருமைக்குரியதோ அதேபோல அவரவர் தாய் மொழியும் அவர் அவர்களுக்கு உயர்வானது தான்.
மனிதன் விழிக்கொண்டு வாழவில்லை; அவரவர் தாய்மொழிக் கொண்டுதான் வாழ்கின்றான்! என்ற உண்மையை உணர்ந்து மொழி பிரச்சனைக்கு இத்தோடு முற்றுப்புள்ளி வைப்போம்.
–Dr.துரை பெஞ்சமின்., BAMS., M.A., SOCIOLOGY,
Ex. Honorary A.W.Officer, Govt Of India,.
மருத்துவ மற்றும் வரலாற்றுச் சுவடிகள் ஆய்வாளர்,
Editor and Publisher,
www.ullatchithagaval.com
Director, UTL MEDIA (OPC) PRIVATE LIMITED
Mobile No.98424 14040.
E-mail : editorutlmedia@gmail.com
