அரசியல் நாகரிகத்தை காப்பாற்றிய மேனாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா!

பல்கலைக்கழக துணைவேந்தர்கள் மாநாட்டிற்கு அரசு முறைப் பயணமாக நீலகிரி மாவட்டம், உதகமண்டலத்திற்கு வருகைப்புரிந்த இந்திய குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கருக்கு, மேனாள் மத்திய அமைச்சரும், நீலகிரி பாராளுமன்ற உறுப்பினருமான ஆ.ராசா புத்தகம் வழங்கி வரவேற்றார்.

மேனாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா மீது அரசியல் ரீதியாக ஆயிரம் விமர்சனங்கள் சொல்லப்பட்டாலும், அவர் ஒரு கற்றறிந்த வழக்குரைஞர், அனுபவமிக்க மிகச்சிறந்த அரசியல்வாதி, துணிச்சலான நாடாளுமன்ற உறுப்பினர் என்பதை அவரது எதிரிகள் கூட நிச்சயம் ஏற்றுக்கொள்வார்கள்.

துணைவேந்தர்கள் மாநாட்டை துணைவேந்தர்களே புறக்கணித்திருக்கும் சூழலில்; துணைவேந்தர்கள் மாநாட்டிற்கு வருகை தந்த இந்திய குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கரை, நீலகிரி பாராளுமன்ற உறுப்பினர் என்ற அடிப்படையில் மேனாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா நேரில் சென்று வரவேற்று இருப்பது. உண்மையிலுமே பாராட்டத்தக்கது. அரசியல் நாகரீகம் மற்றும் மரபுகள் இந்தியாவில் இன்னும் அற்றுப் போகவில்லை என்பதை இதன்மூலம் ஆ.ராசா ஆழமாகப் பதிவு செய்திருக்கிறார்.

கட்சி ரீதியாக, கொள்கை ரீதியாக மற்றும் சித்தாந்த ரீதியாக ஆயிரம் கருத்து வேறுபாடுகள், முரண்பாடுகள் இருந்தாலும், ஆட்சி நிர்வாகம் என்று வருகிற போது அந்தந்த பதவிக்கு உரிய கண்ணியத்தையும், கௌரவத்தையும் காப்பாற்ற வேண்டிய கடமை அனைவருக்கும் உண்டு. அந்த வகையில் நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா தனது கடமையை செவ்வனே சிறப்பாகக் செய்திருக்கிறார்.

இந்திய குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் உதகமண்டல வருகை என்பது முன்கூட்டியே திட்டமிடப்பட்ட ஒன்றுதான். இது நீலகிரி பாராளுமன்ற உறுப்பினர் ஆ.ராசாவுக்கும் நன்கு தெரியும். உண்மையிலுமே ஆ.ராசா நினைத்திருந்தால் குடியரசு துணைத் தலைவரை சந்திப்பதைத் தவிர்ப்பதற்காக ஏதோ ஒரு காரணத்தைச் சொல்லி அவர் தொகுதியை விட்டு முன்கூட்டியே வேறு ஒரு இடத்திற்கு சென்றிருக்கலாம். அதை யாரும் குறையாகவோ, குற்றமாகவோ சொல்ல வாய்ப்பில்லை. ஆனால், ஆ.ராசா அப்படி எதுவும் குதர்க்கமாக செய்யவில்லை. செய்யவும் விரும்பவில்லை.

2 ஜி வழக்கில் மட்டும் ஆ.ராசா சிக்காமல், சிக்க வைக்காமல் இருந்திருந்தால் அரசியலில் அவர் மிகப்பெரிய உயரத்தை நிச்சயம் எட்டி இருப்பார். என்ன செய்வது பாவம் ஒரு பக்கம்; பழி ஒரு பக்கம்! தேங்காய் திங்கறவன் ஒருத்தன்; தண்டம் கொடுக்கிறவன் ஒருத்தன்! என்ற கதையாக ஆ.ராசாவின் வாழ்க்கை அமைந்துவிட்டது! ஆம், சேர்மானம் சரியில்லை என்றால் அவமானத்தை சந்தித்து தானே ஆக வேண்டும். விதி யாரை விட்டது?!

ஆ.ராசா தமிழ்நாட்டில் பிறக்காமல், 2 ஜி வழக்கில் சிக்காமல், இந்தியாவில் வேறு ஏதாவது ஒரு மாநிலத்தில் பிறந்திருந்தால், அவரையும், அவரது திறமையையும், அவரது அறிவாற்றலையும் மக்கள் தலை மேல் வைத்து நிச்சயம் கொண்டாடி இருப்பார்கள்.

என்ன செய்வது, அரசியலில் அறிவாளிகளுக்கு இடமில்லை, உரிய அங்கீகாரமும் இல்லை என்பதற்கு தமிழ்நாட்டில் வைகோ, தொல்.திருமாவளவன் மிகச் சிறந்த உதாரணம். அந்தப் பட்டியலில் தான் ஆ. ராசாவும் இருக்கிறார். இதற்கு காலம் தான் பதில் சொல்ல வேண்டும்.

Leave a Reply