விவசாயிகளுக்கு ஆதரவாக 2 கோடி கையெழுத்துடன் குடியரசு தலைவர் மாளிகை நோக்கி திரண்ட காங்கிரசார்!- கைது செய்த டெல்லி போலீசார்!-நாட்டில் ஜனநாயகம் இல்லாத சூழல் நிலவுகிறது!- ராகுல் காந்தி பேட்டி.

மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் சட்டங்களை எதிர்த்து போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக, நாடு முழுவதும் 2 கோடி பேரிடம் காங்கிரசார் கையெழுத்து பெற்றனர். அதனை ராகுல் காந்தி, குலாம் நபி ஆசாத், ஆதிர் ரஞ்சன் சவுத்ரி ஆகியோர் அடங்கிய இந்திய தேசிய காங்கிரஸின் தூதுக்குழு, இந்திய குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்தை நேரில் சந்தித்து இன்று ஒப்படைத்தனர்.

முன்னதாக குடியரசுத் தலைவர் மாளிகை அருகே இருக்கும் விஜய் சவுக் பகுதியிலிருந்து ராகுல் காந்தி தலைமையில், பிரியங்கா காந்தி, ரன்தீப் சிங் சுர்ஜேவாலா, கே.சி.வேணுகோபால் உள்ளிட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் பேரணியாகக் குடியரசுத் தலைவர் மாளிகை நோக்கி சென்றனர். ஆனால், பேரணி செல்வதற்கு டெல்லி போலீஸார் அனுமதியளிக்கவில்லை. ஆனால், காங்கிரஸ் நிர்வாகிகள் பேரணியாக செல்ல தொடர்ந்து முயன்றபோது அவர்களை போலீஸார் கைது செய்தனர்.

இந்திய குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்தை நேரில் சந்தித்த பிறகு, ராகுல் காந்தி செய்தியாளர்களை சந்தித்தார்.

மத்திய அரசு கொண்டுவந்த வேளாண் சட்டங்கள் விவசாயிகளுக்கு எதிரானவை. விவசாயிகள், தொழிலாளர்கள் இதனால் பாதிக்கப்படுவார்கள் எனக் குடியரசுத் தலைவரிடம் தெரிவித்தோம். ஆனால், இந்தச் சட்டங்கள் விவசாயிகளுக்கு ஆதரவானவை என மத்திய அரசு கூறுகிறது. நாட்டில் உள்ள விவசாயிகள் இந்தச் சட்டங்களுக்கு எதிராகத்தான் போராடி வருகிறார்கள்.

3 பேர் மட்டும் சென்று குடியரசுத் தலைவரிடம் 2 கோடி விவசாயிகளின் கையொப்பம் அடங்கிய ஆவணத்தை அளித்தோம். இந்தச் சட்டங்களால் விவசாயிகள் வேதனைப்படுகிறார்கள், உயிரிழந்து வருகிறார்கள். இந்தச் சட்டங்களைத் திரும்பப் பெறாவிட்டால், இந்த தேசம் பாதிப்படையும் எனத் தெரிவித்தோம்.

இந்தச் சட்டங்கள் திரும்பப் பெறப்படும்வரை விவசாயிகள் திரும்பிச் செல்ல மாட்டார்கள். நாடாளுமன்றக் கூட்டுக் கூட்டத்தைக் கூட்டி, இந்தச் சட்டங்களை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும். அனைத்து எதிர்க்கட்சிகளும் விவசாயிகளுக்கு ஆதரவாக இருக்கிறோம். எந்தவிதமான விவாதமும், ஆலோசனையும் இல்லாமல் நிறைவேற்றப்பட்ட இந்தச் சட்டங்கள் திரும்பப் பெற வேண்டும்.

இந்தியாவில் ஜனநாயகம் இருக்கிறதா? எந்த நாட்டைப் பற்றி நீங்கள் கேட்கிறீர்கள். உங்கள் கற்பனைக்கு வேண்டுமானால் இந்தியாவில் ஜனநாயகம் இருக்கலாம். உண்மையில் இந்தியாவில் ஜனநாயகம் இல்லை. ஒட்டுண்ணி முதலாளிகளுக்குத் தேவையான பணம் சேர்க்க பிரதமர் மோடி உதவி செய்து வருகிறார்.

யாரேனும் மோடிக்கு எதிராகப் பேசினால், செயல்பட்டால், அவர்களைத் ‘தீவிரவாதி’ என்று முத்திரை குத்துகிறார்கள். அது விவசாயிகளாக இருந்தாலும், தொழிலாளர்களாக இருந்தாலும்,மோகன் பாகவத்தாக இருந்தாலும் தீவிரவாதியாக முத்திரை குத்துவார்கள்.

இந்திய எல்லையில் இன்னும் சீன ராணுவம் இருக்கிறது. இந்தியாவின் ஆயிரக்கணக்கான கி.மீ. நிலப்பரப்பை சீனா பறித்துக்கொண்டுள்ளது. இதுபற்றி பிரதமர் ஏன் பேசாமல், ஏன் மவுனம் காக்கிறார். தேசத்தை பிரதமர் மோடி பலவீனமாக்கி வருகிறார். இதை வாய்ப்பாக வெளிப்புறச் சக்திகள் பயன்படுத்துகின்றன.

நான் ஊடகங்களுக்குச் சொல்வதென்றால் இதைப் புரிந்து கொள்ளுங்கள். உங்கள் ஊதியம் பாதிக்கப்படும் என்பது எனக்குத் தெரியும். ஆனால், என்ன நடக்கிறது எனப் பாருங்கள்.

இவ்வாறு ராகுல் காந்தி தெரிவித்தார்.

–டாக்டர்.துரைபெஞ்சமின்
Editor and Publisher
UTL MEDIA TEAM
ullatchithagaval@gmail.com

Leave a Reply