இந்திய கடற்படைக் கப்பல் சுதர்ஷினி அமெரிக்காவின் பாஸ்டனிலிருந்து புறப்பட்டது.

இந்தியக் கடற்படையின் பாய்மரப் பயிற்சிக் கப்பலான ஐஎன்எஸ் சுதர்ஷினி, நடைபெற்று வரும் லோகாயன் 26 பயணத் திட்டத்தின் ஒரு பகுதியாக அமெரிக்கா சென்றது. இந்நிலையில் அந்தக் கப்பல் நேற்று (2026 ஜூலை 25) அமெரிக்காவின் பாஸ்டன் நகரிலிருந்து புறப்பட்டது. அங்கு இருந்த காலத்தில், இக்கப்பல் மதிப்புமிக்க செயில் 250 என்ற பாய்மரக் கப்பல் அணிவகுப்புக் கொண்டாட்டங்கள், சர்வதேச கடற்படை அணிவகுப்பு ஆகியவற்றில் இந்தியா சார்பில் பங்கேற்றது. இதன் மூலம் இந்தியாவின் வளமான கடல்சார் பாரம்பரியத்தை வெளிப்படுத்தியதுடன், தொழில்முறை, கலாச்சார ஈடுபாடுகள் வழியாக கடல்சார் ஒத்துழைப்பையும் வலுப்படுத்தியது.

இந்தக் கப்பல், நார்போக், பால்டிமோர், நியூயார்க், பாஸ்டன் ஆகிய இடங்களில் நடைபெற்ற ‘செயில் 250’ நிகழ்வுகளில் பங்கேற்றதுடன், முக்கிய பிரமுகர்கள், இந்தியப் புலம்பெயர் சமூகத்தினர், சர்வதேச கடற்படைக் குழுக்கள் ஆகியோரை வரவேற்று, கடல்சார் ஒத்துழைப்பையும் நட்புறவுக்கான இந்தியாவின் உறுதிப்பாட்டையும் மீண்டும் நிலைநாட்டியது.

ஐஎன்எஸ் சுதர்ஷினி தற்போது போர்ச்சுக்கலின் அசோரஸ் தீவில் உள்ள பொன்டா டெல்கடாவை நோக்கிப் பயணத்தைத் தொடங்கியுள்ளது. இக்கப்பல், உலக அரங்கில் இந்தியாவின் கடல்சார் வலிமை, தொழில்முறைத் திறன், நல்லெண்ணம் ஆகியவற்றின் கலங்கரை விளக்கமாகத் தொடர்ந்து விளங்குகிறது.

Leave a Reply