டில்லியில் “பிசியோதெரபிஸ்ட்” படிப்பு படித்து வந்த இருபத்தி மூன்று வயதான நிர்பயா என்ற மாணவியை, டிசம்பர் 16, 2012-ல் ஓடும் பஸ்சில் ஆறு பேர் அடங்கிய கும்பல், கொடூரமாக பாலியல் பலாத்காரம் செய்து கொடுங்காயம் ஏற்படுத்தியது. சிங்கப்பூர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். உலகத்தையே உலுக்கி எடுத்த இச்சம்பவத்தால் நாடு முழுவதும் மாணவ அமைப்பினர் தொடர் போராட்டம் நடத்தினர்.
பஸ் டிரைவர் ராம்சிங், அக்ஷய் தாகூர், வினய் சர்மா, பவன் குப்தா, முகேஷ் சிங் மற்றும் 18 வயதுக்குட்பட்ட சிறுவன் ஒருவன் என, ஆறு பேர் திகார் சிறையில் அடைக்கப்பட்டனர்.
இதில் ராம்சிங், திஹார் சிறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டான். 18 வயது இளம் குற்றவாளி சிறுவன் என்பதால் விடுதலை செய்யப்பட்டான். மற்ற நான்கு பேருக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டது.
தங்களுக்கு விதிக்கப்பட்ட தண்டனையை எதிர்த்து, குற்றவாளிகள் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். இந்த மனு இன்று (05.05.2017) தள்ளுபடியானது.
படு தைரியமாக செய்யப்பட்ட இந்த குற்றம் நாட்டுக்கு அதிர்ச்சியை தந்துள்ளது. கிரிமினல் சதி நடந்ததற்கான ஆதாரங்கள் தெளிவாக உள்ளது. குற்றவாளிகளுக்கு கருணை காட்ட முடியாது. இது அரிதிலும் அரிதான வழக்கு என்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தங்களின் தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளனர்.
429 பக்கங்கள் அடங்கிய உச்ச நீதிமன்ற தீர்ப்பின் உண்மை நகல், நமது வாசகர்களின் பார்வைக்காக இங்கு பதிவு செய்துள்ளோம்.
-டாக்டர்.துரைபெஞ்சமின்.
ullatchithagaval@gmail.com
