பொய் செய்தி வெளியிட்ட தினமலர் ஆசிரியர், வெளியீட்டாளர் மீது தமிழக செய்தி துறை அவதூறு வழக்கு!

dinamalarஉண்மைக்கு புறம்பாக பொய் செய்தி வெளியிட்டதாக ‘தினமலர்‘ ஆசிரியர் கிருஷ்ணமூர்த்தி, வெளியீட்டாளர் லட்சுமிபதி ஆகியோர் மீது தமிழக செய்தி மக்கள் தொடர்பு துறை இயக்குனர் குமரகுருபரன் அவதூறு வழக்கு தொடர்ந்து உள்ளார். சென்னை மாநகர அரசு வக்கீல் எம்.எல்.ஜெகன் செஷன்ஸ் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:

பிப்ரவரி 11ம் தேதி வெளிவந்த தினமலர் நாளிதழில், ‘அரசு செய்தி துறை இணையதளத்தில் அதிமுக வுக்கு தனி இணையதளம்‘ என்ற தலைப்பில் ஒரு செய்தி வெளிவந்துள்ளது. அந்த செய்தியில் , அரசின் செய்தி துறை வெப்சைட்டில் அதிமுகவுக்கு தனி வெப்சைட் ஒதுக்கப்பட்டு உள்ளதால் இணையதள பார்வையாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளதாகவும், செய்தி துறை வெப்சைட்டை திறந்தால், அதில் அதிமுக கட்சியின் வரலாறு, அன்றா டம் நடைபெறும் அனைத்து நிகழ்வுகளும் இடம் பெற்றுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

மேலும், பெயர் வெளியிட விரும்பாத ஒரு அதிகாரி, ‘அரசு துறைகளுக்கு என ஒதுக்கப்படும் இணையதளத்தில் கட்சிக்கு என இணையதளம் இருப்பது தவறு. ஆளும் கட்சியாக இருப்பதால் முதல்வரிடம் நற்பெயர் வாங்குவதற்காக இத்துறை அதிகாரிகள் கட்சிக்கு முக்கியத்துவம் தந்துள்ளனர்‘ என்று கூறியதாகவும் அந்த செய்தி தெரிவிக்கிறது.

இந்த செய்தி தமிழக தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி ஒலிபரப்பு துறை மற்றும் துறையின் இயக்குனரின் நற்பெயருக்கு களங் கம் ஏற்படுத்தும் வகையில் வேண்டுமென்றே உண்மைக்கு புறம்பாக வெளியிடப்பட்டு உள்ளது.

உள்நோக்கம் கற்பிக்கும் வகையில் இதுபோன்ற அவதூறு செய்தி வெளியிடுவது இந்திய தண்டனை சட்டம் பிரிவு 500, 501ன் கீழ் குற்றமாகும். எனவே இந்த செய்தியை வெளியிட்ட ‘தினமலர்‘ ஆசிரியர் கிருஷ்ணமூர்த்தி, வெளியீட்டா ளர் லட்சுமிபதி ஆகியோர் மீது அவதூறு பரப்புதல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டு உள்ளது. இந்த மனு முதன்மை செஷன்ஸ் நீதிமன்றத்தில் விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.

Leave a Reply