பட்டாசு ஆலை விபத்து நடைபெறாமல் இருக்க தொடர் கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்துகொள்ள வேண்டும்!-தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் அறிக்கை.

தமிழகத்தில் மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தால் 5 பேர் உயிரிழந்திருப்பது மிகவும் வருத்தம் அளிக்கிறது .

திருமங்கலம் அருகே அழகு சிறை கிராமத்தில் உள்ள பட்டாசு ஆலையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 1 பெண் உட்பட 5 தொழிலாளர்கள் சிக்கி உயிரிழந்திருப்பதும் , 10 க்கும் மேற்பட்டோர் காயமடைந்திருப்பதும் வேதனைக்குரியது .

இதனால் அப்பகுதி மக்கள் சோகத்தில் இருக்கிறார்கள் . உயிரிழந்த தொழிலாளர்களின் குடும்பத்தினர் மிகுந்த துயரத்தில் இருக்கிறார்கள் .

பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தால் பட்டாசு ஆலையும் , அதன் அருகே இருந்த சில கட்டிடங்களும் சேதமடைந்துள்ளன .

தமிழக அரசு காயமடைந்தவர்களுக்கு உயர்தர தீவிர சிகிச்சை அளித்து அவர்கள் விரைவில் குணமடைய நடவடிக்கை எடுக்க வேண்டும் .

தமிழகத்தில் ஆயிரக்கணக்கான பட்டாசு ஆலைகள் இருக்கின்றன . இலட்சக்கணக்கான தொழிலாளர்கள் ஆலைகளில் பட்டாசுத்தயாரிக்கும் தொழிலில் ஈடுபடுகிறார்கள் . அவ்வப்போது ஏற்படும் பட்டாசு விபத்தால் நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் உயிரிழந்ததும் , நூற்றுக்கணக்கானோர் காயமடைந்ததும் நாம் அறிந்ததே . ஆனாலும் இன்னும் பட்டாசு ஆலையில் விபத்துகள் ஏற்படுவதும் , உயிரிழப்பு ஏற்படுவதும் , காயமடைவதும் நீடிக்கிறது , இதற்கு காரணம் என்ன .

பட்டாசு ஆலைகள் உரிய உரிமத்துடனும் , பாதுகாப்பு வசதிகளுடனும் , முறையாக , சரியாக இயக்கப்படுகிறதா என்பதை தமிழக அரசு உறுதி செய்துகொள்ள வேண்டும் . இதில் எவ்வித சமரசத்துக்கும் இடம் கொடுக்கக்கூடாது .

பட்டாசு ஆலை இயக்கப்படுவதில் ஏதேனும் விதிமீறல்கள் இருப்பின் உடனடியாக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் .

மேலும் பட்டாசு ஆலைகளை தொடர்ந்து கண்காணித்து , தொழிலாளர்களின் பாதுகாப்பான தொழிலுக்கும் உதவிட வேண்டும் .

தமிழக அரசு , தற்போது பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு நிவாரணத் தொகை வழங்க வேண்டும் .

பட்டாசு ஆலையில் ஏற்பட்ட விபத்தால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு த.மா.கா சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்.

இவ்வாறு தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் தமது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

கே.பி.சுகுமார்

Leave a Reply