பட்டாசு ஆலையில் தொடர் வெடிவிபத்து தமிழக அரசின் மெத்தன போக்கையே காட்டுகிறது” தகுந்த முன்னேற்பாட்டையும், தொடர் கண்காணிப்பையும் தீவிரப்படுத்த வேண்டும்!- ஜி.கே.வாசன் வலியுறுத்தல்.

விருதுநகர் மாவட்டம், சிவகாசியை அடுத்துள்ள செங்கமலப்பட்டியில் தனியாருக்கு சொந்தமான பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 5 பெண்கள் உள்பட 8 பேர் உயிரிழந்த செய்தி அறிந்து மிகவும் வருத்தம் அடைந்தேன்.

விருதுநகர் மாவட்டத்தில் கடந்த காலங்களாக பட்டாசு ஆலையில் வெடிவிபத்தால் பலர் உயிரிழந்துள்ளனர். தற்பொழுது செங்கமலம்பட்டியில் ஏற்பட்ட பட்டாசு ஆலை வெடிவிபத்தில் 8 பேர் உயிரிழந்துள்ளனர், மேலும் 10 பேர் காயம் அடைந்தார்கள் என்ற செய்தி மிகவும் வருத்தத்தை ஏற்படுத்துகிறது. இது தமிழக அரசின் மெத்தன போக்கையே காட்டுகிறது. சரியான வழிகாட்டுதலும், பாதுகாப்பு இன்மையுமே இது போன்ற விபத்திற்கு வழி வகுக்கிறது.

அரசு அதிகாரிகளின் தொடர் கண்காணிப்பும், கட்டுப்பாடும் இல்லாததே இதுபோன்ற தொடர் விபத்துக்கு காரணமாக இருக்கிறது. இனிமேலும் பட்டாசு ஆலையில் வெடிவிபத்து ஏற்படாதவாறு தகுந்த முன்னேற்பாடுகளையும், கண்காணிப்பு பணியையும் தீவிரப்படுத்த வேண்டும். பட்டாசு ஆலையில் வேலைக்கு வருபவர்கள் அன்றாட உணவிற்கு திண்டாடுபவர்கள் தான். அவர்களை நம்பிதான் அவர்கள் குடும்பமே இருக்கிறது இந்நிலையில் இவர்களின் உயிரிழப்பு என்பது ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும்.

செங்கமலப்பட்டியில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு 10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். காயமடைந்தவர்களுக்கு உரிய, உயர் சிகிச்சை அளித்து அவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும். விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு தமிழ் மாநில காங்கிரஸ் சார்பாக ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துகொள்கிறேன்.

இவ்வாறு தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் தமது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

கே.பி.சுகுமார்

Leave a Reply