விஞ்ஞான் பவனில் நாளை நடைபெறும் 2020, 2021 மற்றும் 2022-ம் ஆண்டுகளுக்கான அனுபவ விருதுகள் வழங்கும் விழாவிற்கு மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் தலைமை தாங்குவார்.

2020, 2021 மற்றும் 2022-ம் ஆண்டுகளில் தங்களின் அனுபவங்கள் குறித்து எழுதியவர்களை பாராட்டுவதற்காக புதுதில்லியில் உள்ள விஞ்ஞான் பவனில் அனுபவ விருதுகள் வழங்கும் விழாவை மத்திய ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியதாரர் நலத்துறை நாளை நடத்தவுள்ளது.

இந்த விருதுகள் வழங்கும் விழாவில் மத்திய பணியாளர் நலன், பொதுமக்கள் குறைதீர்ப்பு, ஓய்வூதியங்கள் துறைக்கான  மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் தலைமை தாங்குவார். ஓய்வூதியதாரர்களின் தேவைகளை ஒற்றைசாளர முறையில்  பூர்த்தி செய்வதற்கான ஒருங்கிணைந்த ஓய்வூதியதாரர்கள் இணைய பக்கத்தையும் அவர் தொடங்கிவைப்பார்.

இணையவழி ஓய்வூதியம் வழங்கும் முதலாவது வங்கியான  பாரத ஸ்டேட் வங்கி அதன் இணைய பக்கத்தை ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியதாரர் நலத்துறையின் இணைய பக்கத்துடன் இணைக்கவுள்ளது. இது ஒருங்கிணைந்த ஓய்வூதியதாரர்கள் இணைய பக்க தொடக்க நிகழ்வின் ஒரு பகுதியாக இருக்கும். ஓய்வூதியதாரர்களின் குறைகளுக்கான மூலக்காரணத்தை இந்த துறை ஆய்வு செய்தது. அதில் பெரும்பாலான துறைகள் வங்கி தொடர்பானவையாக இருப்பது தெரியவந்தது.

இதைத் தொடர்ந்து வங்கிகளில் ஓய்வூதியம் வழங்குவதை கையாளும்  ஊழியர்களுக்கான பயிலரங்குகள் நடத்துவதற்கு வங்கியாளர்கள் விழிப்புணர்வு திட்டம் புதிதாக தொடங்கப்பட்டது. இதற்காக உதய்பூரில் நடைபெற்ற பாரத ஸ்டேட் வங்கியுடன் இணைந்த முதலாவது விழிப்புணர்வு  நிகழ்ச்சியில் ஓய்வூதியம் வழங்கும் வங்கியின் அனைத்து இணையப்பக்கங்களையும் ஒருங்கிணைப்பதற்கான திட்டம் உருவானது.

நாளை நடைபெறும் நிகழ்வின் ஒரு பகுதியாக,  அடுத்த சில மாதங்களில் ஓய்வு பெற இருக்கும் மத்திய அரசு ஊழியர்களுக்கு, ஓய்வுக்கு முந்தையை கலந்துரையாடல் அமர்வுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.  ஒருங்கிணைந்த ஓய்வூதியதாரர்கள் இணையப் பக்கம், டிஜிட்டல் முறையில் வாழ்நாள் சான்றிதழ்/ முக அங்கீகாரம், ஓய்வூதிய பயன்கள், வருமானவரி தொடர்பான விஷயங்கள் இந்த கலந்துரையாடல் அமர்வில் இடம்பெறும்.

எஸ்.சதிஸ் சர்மா

Leave a Reply