மதம் பிடித்த சந்நியாசி…!-கத்தோலிக்க பாதிரியார் ஜார்ஜ் பொன்னையாவின் வாய்கொழுப்பு…! -சகுனம் சொல்லும் பல்லி கழனிப் பானையில் விழுந்தது.

சபை நாகரீகம் கருதாமல், அரசியல் கட்சிகளின் தலைமைக் கழகப் பேச்சாளர்களை போல, பார்வையாளர்களின் கை தட்டல்களுக்காகவும், விசில் சப்தத்திற்காகவும் வாய்க்கு வந்தப்படியெல்லாம் கத்தோலிக்க பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா பேசிய பேச்சு, நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும், பூமா தேவியையும், பாரத மாதாவையும், பாரத பிரதமர் நரேந்திர மோதியையும் மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வையும் அருவறுக்கத்தக்க வார்த்தைகளால் சபித்து சாபமிட்டுள்ளளார் இந்த கத்தோலிக்க துறவி.

இவரது சில்லறைத் தனமான, அநாகரீகமான இத்தகையப் பேச்சை; மனச்சாட்சியுள்ள மனிதர்கள் அனைவரும் கடுமையாக கண்டித்துள்ளனர்.

இவர் மீது வழக்கு பதிவு செய்து சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, பாரதிய ஜனதா கட்சி உள்பட பல்வேறு இந்து அமைப்பினர் காவல்துறையில் கொடுத்த எழுத்துப்பூர்வமான புகாரை அடுத்து, தமிழ்நாடு காவல்துறையினர் பாதிரியார் ஜார்ஜ் பொன்னையாவை கைது செய்துள்ளனர்.

கிறிஸ்தவ பெருமக்கள் அனைவரும் ஆயர்கள், குருக்கள் மற்றும் துறவறத்தார் சொல்படிதான் நடப்பார்கள் என்றும், திமுகவினரின் திறமையால் அவர்களுக்கு வெற்றி கிடைக்கவில்லை என்றும், ஆயர்கள், குருக்கள் சொன்னதால்தான் திமுகவிற்கு கிறிஸ்தவர்கள் வாக்களித்தார்கள் என்றும், திமுக பெற்ற வெற்றி கிறிஸ்தவர்கள் மற்றும் இஸ்லாமியர்கள் போட்ட பிச்சை என்றும், கத்தோலிக்க பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா வெளிப்படையாகவே விமர்சித்துள்ளார்.

அப்படியானால், கடந்த 10 ஆண்டுகளாக திமுகவை ஆட்சிப் பொறுப்பில் அமரவிடாமல் தடுத்தவர்கள் கிறிஸ்துவர்களும், இஸ்லாமியர்களும் தானா?!-என்ன அபத்தமான பேச்சு இது.

கத்தோலிக்க பாதிரியார் ஜார்ஜ் பொன்னையாவின் இத்தகைய ஆணவப் பேச்சு உண்மையிலுமே அதிர்ச்சியளிக்கிறது.

ஏதோ ஒட்டுமொத்த கிறிஸ்துவ மக்கள் அனைவரும் அறிவற்ற ஆட்டுமந்தைகள் போலவும்; அவர்கள் சுயமாக சிந்திக்க தெரியாதவர்கள் போலவும்; அவர்கள் அனைவரையும் ஆயர்கள், குருக்கள்தான் வழிநடத்துவதாகவும், அவர்கள் கிழித்தக் கோட்டை ஒட்டுமொத்த கிறிஸ்துவ மக்களும் தாண்ட மாட்டார்கள் என்பதை போலவும் பேசியுள்ளார்.

இது ஒட்டுமொத்த கிறிஸ்துவ மக்களையும், அவர்களது உணர்வுகளையும் அவமதிக்கும் செயலாகும்.

எல்லா மதத்திலும்; எல்லா இனத்திலும், எல்லாக் கட்சிக்காரர்களும் இருக்கிறார்கள். ஒரு மதத்தை நம்பியோ; ஒரு இனத்தை நம்பியோ எந்த ஒரு அரசியல் கட்சியும் இல்லை. ஒரு வேளை ஒரு மதத்தை நம்பியோ, ஒரு இனத்தை நம்பியோதான் ஒரு அரசியல் கட்சி இருக்குமேயானால், இவரது அமைப்பைப் போலவே, அக்கட்சி கடைசி வரை லட்டர்பேடு கட்சியாகதான் இருக்குமே தவிர; நாடு முழுவதும் வாக்குகளை பெறக் கூடிய கட்சியாக அது ஒருபோதும் வளர முடியாது.

ஆனால், தேர்தலில் வெற்றியை நிர்ணயம் செய்வது நடுநிலை வாக்காளர்கள்தான்; அவர்களிடம் யார் என்ன சொன்னாலும், எவ்வளவு பணம் கொடுத்தாலும், எந்த காலக்கட்டத்தில் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதை அவர்கள்தான் சுயமாக, சுதந்திரமாக முடிவெடுப்பார்கள். ஒரு சைக்கிள் எவ்வளவு அழகானதாக வடிமைக்கப்பட்டாலும், அதை இயக்குவதற்கு ப்ரி வீல் அவசியம் வேண்டும். அதுபோல எந்த கட்சியையும் சாராத நடுநிலை வாக்காளர்கள்தான், தேர்தலில் வெற்றியை இறுதி செய்கிறார்கள். அப்படிப்பட்ட நல்ல மனிதர்கள், அனைத்து மதத்திலும் இருக்கிறார்கள்; அனைத்து இனத்திலும் இருக்கிறார்கள். இந்த உண்மை மதம் (வெறிப்) பிடித்த பாதிரியார் ஜார்ஜ் பொன்னையாவின் புத்திக்கு தெரிய வாய்பில்லை.

லட்சக்கணக்கான அப்பாவி ஏழை கிறிஸ்துவ மக்களை முன்னிறுத்தி; அவர்களின் உழைப்பை சுரண்டிதான் ஆயர்களும், குருக்களும் பிழைப்பு நடத்தி தனிப்பட்ட ஆதாயம் அடைந்து வருகிறார்களே தவிர; ஆயர்கள் மற்றும் குருக்களால் அப்பாவி ஏழை கிறிஸ்துவ மக்களுக்கும், அவர்களின் வாரிசுகளுக்கும் எந்த நன்மையும்; எந்த பிரயோசனமும் தற்போது இல்லை என்பதுதான் நிதர்சனமான உண்மை. எனவே, கை புண்ணிற்கு கண்ணாடி தேவையில்லை.

இன்னும் வெளிப்படையாக சொல்ல வேண்டுமானால், தீண்டாமையும், திருட்டுத்தனமும், அதிகாரப் போட்டியும், நிதி முறைக்கேடுகளும் திருச்சபைகளில் தலைவிரித்து ஆடுகிறது. கல்வி நிறுவன வேலை வாய்ப்புகளில் தங்களது குடும்ப உறவுகளை திணிப்பதற்கானப் போட்டியில்தான் ஆயர்களும், குருக்களும் தொடர்ந்து ஈடுப்பட்டு வருகிறார்கள்.

இதற்கு விரல் விட்டு எண்ணக்கூடிய மனசாட்சியுள்ள ஒரு சில பாதிரியார்கள் வேண்டுமானால் விதிவிலக்காக இருக்கலாம். இதை யாராவது மறுக்க முடியுமா?!

இவற்றையெல்லாம் எதிர்த்து என்றைக்காவது ஒரு நாள் பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா வெளிப்படையாக குரல் கொடுத்துள்ளாரா?! (அல்லது) இனிமேலாவதுதான் கொடுப்பாரா?!

தான் அங்கத்தினராக இருக்கும்; தான் பணி செய்யும் திருச்சபையில், கண் முன் நடக்கும் தீண்டாமை, திருட்டுத்தனம், அதிகாரப் போட்டி, நிதி முறைக்கேடு… இதுப்போன்ற ஒழுங்கீனங்களையும், ஒழுக்கக்கேடுகளையும் தட்டிக் கேட்காத இவர், வெளியில் வந்து சமத்துவம், சகோதரத் தத்துவம், சமூகநீதி, அரசியல் பங்களிப்பு.. குறித்து வாய் கிழிய பேசுவது; உண்மையிலுமே நமக்கு வருத்தமளிக்கிறது.

நாவடக்கம்’ என்பதற்கு இரண்டு அர்த்தங்கள் உண்டு; ஒன்று கண்டதை உண்ணாமல் இருப்பது; மற்றொன்று, மற்றவர்களின் மனம் புண்படும்படியாக கடுங்சொற்களை பேசாமல் இருப்பது.

அதனால்தான்,

யாகாவா ராயினும் நாகாக்க காவாக்கால்
சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு. (குறள்-127)

ஒன்றானுந் தீச்சொல் பொருட்பயன் உண்டாயின்
நன்றாகா தாகி விடும். (குறள்-128)

தீயினாற் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே
நாவினாற் சுட்ட வடு. (குறள்-129) -என்கிறார் திருவள்ளுவப் பெருந்தகை.

இதற்கெல்லாம் வரிசை பிரகாரம் என்ன அர்த்தம் தெரியுமா?!

ஒருவர் எதைக் காத்திட முடியாவிட்டாலும் நாவையாவது அடக்கிக் காத்திட வேண்டும். இல்லையேல் அவர் சொன்ன சொல்லே அவர் துன்பத்துக்குக் காரணமாகிவிடும்.

ஒரு குடம் பாலில் துளி நஞ்சுபோல், பேசும் சொற்களில் ஒரு சொல் தீய சொல்லாக இருந்து துன்பம் விளைவிக்குமானாலும், அந்தப் பேச்சில் உள்ள நல்ல சொற்கள் அனைத்தும் தீயவாகிவிடும்

நெருப்பு சுட்ட புண்கூட ஆறி விடும்; ஆனால் வெறுப்புக் கொண்டு திட்டிய சொற்கள் விளைத்த துன்பம் ஆறவே ஆறாது.

அகிம்சை, சத்தியம், தூய்மை, பொறாமையின்மை, குரூரத்தன்மையின்மை, பொறுமை, இவைகள் அனைத்தும் உலகத்தில் உள்ள அனைவரும் கடைபிடிக்க வேண்டிய பொதுவானத் தர்மங்கள் ஆகும். அப்படியானால் ஒரு சந்நியாசி (துறவி) எப்படிப்பட்டவராக இருக்க வேண்டும் என்பதை நீங்களே முடிவு செய்துக் கொள்ளுங்கள்…!

உண்மையான துறவு எனப்படுவது யாதெனில்;

யானென தென்னுஞ் செருக்கறுப்பான் வானோர்க்
குயர்ந்த உலகம் புகும். (குறள் – 346)

யான், எனது என்கின்ற ஆணவத்தை அறவே விலக்கி விட்டவன், தேவர்க்கும் எட்டாத உயர்ந்த நிலை அடைவான்!-என்கிறார் திருவள்ளுவப் பெருந்தகை.

கிறிஸ்துவம் என்பது வெறும் வார்த்தையல்ல…!-அது நாம் வாழும் முறை…!- மனம்தான் மாற வேண்டுமே தவிர…! மதம் மாற வேண்டிய அவசியம் இல்லை.

இதெல்லாம் அந்தி கிறுஸ்துவாக இருக்கும் பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா போன்ற நபர்களுக்கு எங்கு புரியப் போகிறது?!

சட்டத்திற்கு முன் அனைவரும் சமம்’- என்ற கோட்பாட்டில் அசைக்க முடியாத நம்பிக்கை உள்ளவன் நான், இருந்தாலும், நல்லெண்ணத்தின் அடிப்படையில் மத்திய, மாநில அரசுகளுக்கு இதன் மூலம் ஒரு அன்பான அவசர வேண்டுகோள் விடுக்க விரும்புகிறேன்…!

இயேசு தம்மை சிலுவையில் அறைந்தவர்களை மன்னித்தார். அவர்கள் செய்கிறது இன்னதென்று அறியாமல் செய்துவிட்டார்கள் இவர்களை மன்னியும் என்றார்.

அதேபோல், பாதிரியார் ஜார்ஜ் பொன்னையாவின் முதுமையை கருத்தில் கொண்டும்; ”கொரோனா” பேரிடரைக் கருத்தில் கொண்டும், அவரை உடனே பிணையில் விடுவியுங்கள்..!-அவர் வெளிநாடுகளுக்கு தப்பி செல்லாமல் இருப்பதற்காக அவரது கடவு சீட்டை(Passport) வேண்டுமானால் பறிமுதல் செய்துக்கொள்ளுங்கள்.

ஜாமீன் மறுக்கப்பட்ட நிலையில் பாதிரியார் ஸ்டான் ஸ்வாமி என்பவர் ஏற்கனவே ஜூலை 5-ம் தேதி மரணமடைந்தார். அதுபோன்ற அசம்பாவிதங்கள் தமிழ்நாட்டில் நடைபெறாமல் பார்த்துக்கொள்ளுங்கள்.

–Dr.துரைபெஞ்சமின்,
Editor and Publisher
www.ullatchithagaval.com
Mobile No.98424 14040.
E-mail : ullatchithagaval@gmail.com

Leave a Reply