சாலைப் போக்குவரத்துத் துறையில் உயர்தர ஆராய்ச்சியை மேம்படுத்துவது, ஆதாரம் அடிப்படையிலான கொள்கை வகுத்தலை வலுப்படுத்துவது ஆகியவற்றில் ஒரு சிறந்த நடவடிக்கையாக இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம், தேசிய பயன்பாட்டு பொருளாதார ஆராய்ச்சிக் குழுமத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. போக்குவரத்து, சரக்குப் போக்குவரத்தின் பொருளாதாரத்திற்கான மையத்தை உருவாக்குவதற்காக இந்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தின் தலைமையத்தில் நடைபெற்ற நிகழ்வில் இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது. இத்தகைய முதலாவது முன்முயற்சியானது, நாட்டின் விரைவாக விரிவடைந்து வரும் தேசிய நெடுஞ்சாலை உள்கட்டமைப்பின் மேம்பாடு, நிர்வாகத்தில் ஆராய்ச்சி, தரவுப் பகுப்பாய்வு, சான்றுகள் அடிப்படையிலான முடிவெடுத்தல் ஆகியவற்றை ஒருங்கிணைப்பதில் இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தின் அர்ப்பணிப்பைப் பிரதிபலிக்கிறது.
இந்நிகழ்ச்சியில் பேசிய இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத் தலைவர் திரு சந்தோஷ் குமார் யாதவ், நாட்டின் போக்குவரத்து, தளவாடத் திறன்களை மேம்படுத்துவதில் இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் முன்னணியில் இருப்பதாக தெரிவித்தார். இந்த ஒப்பந்தம் உயர்தர ஆராய்ச்சி, கொள்கைப் பகுப்பாய்விற்கான ஒரு பிரத்யேக தளத்தை உருவாக்கும் என்றும் இது போக்குவரத்துத் துறையில் திட்டமிடல், முதலீடு, சொத்து மேலாண்மை முடிவுகளை வலுப்படுத்த உதவும் என்றும் கூறினார்.
சாலை, போக்குவரத்துத் துறையில் நீண்டகாலத் திட்டமிடல், முதலீடு, கொள்கை உருவாக்கத்திற்கு ஆதரவளிக்கும் வகையில், செயல்படுத்தக்கூடிய நுண்ணறிவுகளை உருவாக்குவதில் கவனம் செலுத்தி, போக்குவரத்து, சரக்குப் போக்குவரத்து குறித்த பயன்பாட்டுப் பொருளாதார ஆராய்ச்சிகளை மேற்கொள்வதற்கான ஒரு பிரத்யேக தளமாக இந்த மையம் செயல்படும். இது தேசிய நெடுஞ்சாலைப் பொருளாதாரம், சரக்குப் போக்குவரத்து, போக்குவரத்து முறை ஒருங்கிணைப்பு, தேசிய நெடுஞ்சாலை முதலீடுகளின் பிராந்தியப் பொருளாதாரத் தாக்கங்கள், சுங்கக் கொள்கை, சொத்துக்களைப் பணமாக்குதல், சாலைப் பாதுகாப்புத் தலையீடுகள், தேசிய நெடுஞ்சாலைச் செயல்பாடுகள் பராமரிப்பில் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கொள்கை தொடர்பான ஆராய்ச்சிகளை மேற்கொள்ளும்.
எஸ்.சதிஸ் சர்மா
