விபத்து ஏற்படுவதை தடுப்பதுபோல், கொரோனாவை தடுக்கும் ஸ்பீடு பிரேக் தான் ஊரடங்கு!- தமிழக முதலமைச்சர் கே.பழனிசாமி பேட்டி.

சென்னை, வேளச்சேரியில் உள்ள கொரோனா பரிசோதனை மையத்தை தமிழக முதலமைச்சர் கே.பழனிசாமி இன்று நேரில் பார்வையிட்டார்.

கொரோனாவை கட்டுப்படுத்த அரசு தீவிர முயற்சி செய்து வருகிறது. வெளிநாடு மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்களால் தான் ஆரம்பத்தில் கொரோனா பரவியது. விபத்து ஏற்படுவதை தடுப்பதுபோல் கொரோனாவை தடுக்கும் ஸ்பீடு பிரேக் தான் ஊரடங்கு. கொரோனாவை தடுக்கவே மீண்டும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. மக்களை சிரமப்படுத்த அல்ல.

டாக்டர்கள், நர்சுகள் பணியால்தான் குணமடைபவர்களின் எண்ணிக்கை தமிழகத்தில் அதிகமாக உள்ளது. மக்கள் வெளியில் நடமாடுவதை குறைத்தால், நோய் பரவலை குறைக்கலாம். கொரோனாவை தடுக்க மக்களின் ஒத்துழைப்பு அவசியம்.

சென்னையில் ஏன் முழு ஊரடங்கு? என சில கட்சி தலைவர்கள் கேட்கின்றனர். நோய் பரவலை கட்டுப்படுத்த தான் அமல்படுத்தப்பட்டுள்ளது. நோய் பரவல் முயற்சிக்கு அனைத்து கட்சி தலைவர்களும் ஒத்துழைக்க வேண்டும்.

சென்னையில் காய்ச்சல் பரிசோதனை மையத்தை 300-ல் இருந்து 450 ஆக அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நாட்டிலேயே அதிகபட்சமாக 8.27 லட்சம் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் தான் அதிகபட்சமாக 83 பரிசோதனை மையங்கள் உள்ளன. தினமும் கொரோனா பரிசோதனையை அதிகரிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

வசதி இருப்பவர்கள் தான் தனியார் மருத்துவமனையை நாடுகின்றனர். தமிழகத்தில் ஊரடங்கை நீட்டிப்பது குறித்து இன்னும் முடிவெடுக்கவில்லை. தனக்கு, கொரோனா இல்லை என உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் மறுத்துள்ளார். கொரோனா எப்போது ஒழியும் என்பது கடவுளுக்கு தான் தெரியும். மக்கள் கட்டாயம் மாஸ்க் அணிய வேண்டும். சமூக இடைவெளியை அதிகப்படுத்த வேண்டும்.

சென்னையில் இருந்து வெளியே செல்பவர்களால் தான் பிற மாவட்டங்களில் கொரோனா பரவுகிறது. வெளியூர் செல்லாமல், சென்னை மக்கள் இங்கேயே தங்கியிருந்தால் தான் பரிசோதனை செய்ய முடியும்.

சென்னையில் ஒரே நாளில் 527 காய்ச்சல் முகாம்களில் 900 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு தமிழக முதலமைச்சர் கே.பழனிசாமி தெரிவித்தார்.

-எஸ். திவ்யா.

Leave a Reply