மகளிர் வாழ்வாதாரத்திற்கான இலவச பயிற்சிகள்!

Photo0132தமிழ்நாடு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மாநில மன்றம் மற்றும் தூத்துக்குடி காமராஜ் கல்லூரி விலங்கியல் துறை இணைந்து அறிவியல் விழிப்புணர்வு உருவாக்குதல் திட்டத்தின் கீழ் மகளிர் வாழ்வாதாரத்திற்கான இலவச பயிற்சி முகாம் இன்று (30.07.2014) காலை 10 மணி அளவில் தூத்துக்குடி காமராஜர் கல்லூரியில் நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு வந்திருந்த அனைவரையும் முகாம் ஒருங்கிணைப்பாளர் விலங்கியல் துறை பேராசிரியர் பானுமதி வரவேற்றார். முனைவர் நாகராஜன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு ‘கடல் பாசி வளர்ப்பும் பயன்களும்’ என்ற தலைப்பின் கீழ் தூத்துக்குடி மாநகர மகளிர் சுய உதவி குழுக்கள் மற்றும் மாணவ, மாணவிகளுக்கு கருத்துகளை எடுத்துரைத்தார்.

காமராஜ் கல்லூரியின் துணைத்தலைவர் திவாகர் ‘கடல் பாசி வளர்ப்பில் பொருளாதார பயன்பாடு’ குறித்து சிறப்புரை வழங்கினார். மதிய உணவு இடைவேளைக்குப் பிறகு ‘நன்னீர் மீன் வளர்ப்பு’ குறித்து கல்லூரி சுயநிதி பிரிவு இயக்குநர் சக்திவேல் பங்கேற்றோருக்கு விளக்கமளித்தார்.

இந்நிகழ்ச்சியில் மகளிர் சுயஉதவி குழு உறுப்பினர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் சுமார் 150-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.

-பொ.கணேசன் @ இசக்கி.