அ.இ.அ.தி.மு.க. அமோக வெற்றி : தேசியக் கட்சிகளுக்கு தமிழகத்தில் வேலையில்லை! தமிழக மக்கள் மகத்தானத் தீர்ப்பு!

tn.cm jayaadmk1பாராளுமன்ற தேர்தலில், பாரதீய ஜனதா கூட்டணி, அகில இந்திய அளவில் வெற்றி பெற்றாலும், தமிழகத்தில் அந்தக் கூட்டணி படுதோல்வியை சந்தித்து இருக்கிறது. இந்தியா முழுக்க எழுந்த மோடி அலை மற்றும் சுனாமி எல்லாம், தமிழகத்தில் ஜெ.ஜெயலலிதாவின் மக்கள் செல்வாக்கிற்கு முன்னால், தவிடு பொடி ஆகிவிட்டது.

தமிழகத்தில் 37 தொகுதிகளை வெற்றதின் மூலம், அகில இந்திய அளவில் மிகப் பெரிய அரசியல் சக்தியாக, தமிழக முதல்வர் ஜெ.ஜெயலலிதா விஸ்வரூபம் எடுத்துள்ளார். அ.இ.அ.தி.மு.க. கட்சி, அகில இந்திய அளவில் 3- வது இடத்தைப் பெற்று வரலாற்று சாதனை நிகழ்த்தியிருக்கிறது.

தமிழக மக்களின் நலன்களுக்கும், உரிமைகளுக்கும் தொடர்ந்து துரோகம் இழைத்து வந்த காங்கிரஸ் மற்றும் பாரதிய ஜனதா ஆகிய இரு தேசிய கட்சிகளுக்கும்,

தமிழ், தமிழன் என்ற பெயரைச் சொல்லியே இத்தனை ஆண்டுகாலம் பிழைப்பு நடத்தி வந்த தி.மு.க. கட்சியினருக்கும், தமிழக மக்கள் இத்தேர்தலின் மூலம் சரியான சவுக்கடி கொடுத்திருக்கிறார்கள்.

எந்த கட்சியையும் கூட்டணிக்கு அழைக்காமல், தமிழக மக்கள் மீது நம்பிக்கை வைத்து தேர்தலை சந்தித்த, தமிழக முதல்வர் ஜெ.ஜெயலலிதாவிற்கு, தமிழக மக்கள் மிகப் பெரிய வெற்றியைப் பரிசாக தந்திருக்கிறார்கள்.

அ.இ.அ.தி.மு.க வெற்றிக்கு அடிப்படை காரணங்கள் :

 

தமிழகத்தில் நடைப்பெற்று வரும் ஜெ.ஜெயலலிதா தலைமையிலான அ.இ.அ.தி.மு.க ஆட்சி மீது, கடந்த 3 ஆண்டுகளில் எந்தவிதமான ஊழல் குற்றச்சாட்டுகளும், முறைகேடுகளும் இதுவரை இல்லை. இதனால் ஜெ.ஜெயலலிதா தலைமையிலான அ.இ.அ.தி.மு.க ஆட்சியின் மீது, தமிழக மக்கள் நல்ல மதிப்பும், மரியாதையும் மற்றும் அசைக்க முடியாத நம்பிக்கையும் வைத்திருக்கிறார்கள். தமிழக முதல்வர் ஜெ.ஜெயலலிதாவின் வாக்குறுதிகளை மட்டும்தான் தமிழக மக்கள் வேத வாக்காக நம்புகிறார்கள்.

அ.இ.அ.தி.மு.க வேட்பாளர்களை நம்பி மக்கள் யாரும் வாக்களிக்கவில்லை. ஜெயலலிதா’ என்ற ஒற்றை மனுஷிக்காகதான், தமிழக மக்கள் இந்த மாபெரும் மகத்தான வெற்றியை வழங்கியிருக்கிறார்கள். இதன் மூலம் தமிழக மக்களின் நம்பிக்கைக்கு உரிய ஒரே தலைவர் ஜெ.ஜெயலலிதா தான் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.

எதிர்க் கட்சியாக இருக்கும்போது மத்திய அரசைக் கடுமையாக எதிர்ப்பதும், ஆளும் கட்சி ஆனதும், தனிப்பட்ட ஆதாயங்களை அனுபவிப்பதும்… இது அனைத்துக் கட்சிகளும் கடைப்பிடித்து வரும் வழக்கமான நடைமுறைதான்.

ஆனால், தமிழக முதல்வராக இருக்கும் ஜெ.ஜெயலலிதா, தான் எதிர்கட்சியாக இருந்த போதே, 1960-ம் ஆண்டைய உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முற்றிலும் முரணாக, நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் ஒப்புதல் இல்லாமல், இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையே 1974 மற்றும் 1976 ஆம் ஆண்டுகளில் ஏற்பட்ட ஒப்பந்தங்கள் வாயிலாக கச்சத்தீவு இலங்கைக்கு தாரைவார்க்கப்பட்டு இருக்கிறது. இது சட்டவிரோமானது.

எனவே, கச்சதீவை இலங்கையிடமிருந்து மத்திய அரசு திரும்பப் பெறவேண்டும் என்று கூறி 2008-ம் ஆண்டு உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார்.

மீண்டும் தமிழக முதலமைச்சராகப் பதவியேற்றவுடன், தமிழக சட்டசபையில் ஜூன் 9, 2011 அன்று நடந்த சட்டபேரவை தீர்மானத்தில், தமிழக வருவாய் துறையையும் சேர்க்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றினார்.

மத்திய அரசு மீதான தனது கடுமையான விமர்சனங்களைப் பின் வாங்காமல் இன்றுவரை பிரயோகித்து வருகிறார். ‘ஆட்சியைப் பிடிப்பது எனது விருப்பமல்ல! மக்களுக்கு நன்மை செய்வதே எனது குறிக்கோள். தமிழர்களின் உரிமைகளை பொறுத்தவரை சமரசம் என்ற பேச்சுக்கே இடமில்லை’ என்று பகிரங்கமாக ஜெ.ஜெயலலிதா அறிவித்தார்.

காவிரிப் பிரச்சனையில் ஆணையத்தின் தீர்ப்பை மத்திய அரசிதழில் வெளியிடாததைக் கண்டித்தது, மேலும், சட்டத்தின் மூலம் கடுமையாக போராடி காவிரி ஆணையத்தின் தீர்ப்பை மத்திய அரசிதழில் வெளியிட வைத்தது.

முல்லைப் பெரியாறு அணைப் பிரச்னையில், மத்திய அரசு, கேரளாவுக்குச் சார்பான நிலைப்பாடு எடுக்கத் திட்டமிட்டதை எதிர்த்தது.

சட்டம்-ஒழுங்கைக் கண்காணிக்கும் உரிமையை மாநில அரசின் கையில் இருந்து பறிப்பது, அனைத்து நலத் திட்டங்களுக்குமான மானியத்தை நேரடியாக வழங்குவதைக் கண்டித்தது. நெய்வேலி நிலக்கரி சுரங்க பங்குகளை தனியாருக்கு விற்பதைத் தடுத்து நிறுத்தி, தமிழக அரசே பங்குகளை வாங்கியது.

தமிழக மீனவர்கள் பிரச்சனைக்கும், இலங்கை தமிழர்கள் பிரச்சனைக்கும் ஆதரவாக குரல் கொடுத்து வருவது… இப்படி மத்திய அரசுக்கு இவர் காட்டிய எதிர்ப்பின் பட்டியல் மிக நீளமானது…! பாரதிய ஜனதா கட்சி ஆளும் மாநில முதல்வர்கள் கூட , இதுவரை இத்தகைய எதிர்ப்பை யாரும் காட்டவில்லை.

தமிழக மக்களின் நம்பிக்கைக்கு உரிய நல்ல தலைவராகவும், தமிழக நலன் சார்ந்த உரிமைகளை மீட்பதில் தலைச்சிறந்த முதல்வராகவும், ஈழத்தமிழர்கள் மற்றும் புலம்பெயர் தமிழர்கள் மத்தியில் மதிப்பு மிக்க தலைவராகவும் ஜெ.ஜெயலலிதா விளங்கினார்.

‘மாநில சுயாட்சி’ என்று வெற்று வாதமாகப் பேசிக்கொண்டிருப்பதை விட, நடைமுறையில் அதற்கான பகிரங்க எதிர்ப்பைக் காட்டுவதே தற்போதைய அதிஅவசியத்தேவை.

மாநில அரசாங்கங்கள், மத்திய அரசின் குத்தகைப் பிரதேசங்களாக நினைக்கும் மனோபாவத்தை எதிர்க்கும் தில்லான முதலமைச்சராக ஜெ.ஜெயலலிதா தன்னை நிலை நிறுத்திக் கொண்டார்.

தமிழகத்தில் இதுவரை ஜெ.ஜெயலலிதா உள்பட, A.சுப்புராயலு ரெட்டியார், ராஜாபனகல், P.சுப்புராயன், B.முனுசாமிநாயுடு, ராமகிருஷ்ணரங்கராவ், P.T.ராஜன், குர்மாவெங்கடரெட்டி, C.ராஜாஜி, T.பிரகாசம், O.P.ராமசாமிரெட்டியார், P.S.குமாரசாமிராஜா, கர்மவீரர் காமராஜர், M.பக்தவசலம், அறிஞர் அண்ணா, நெடுஞ்செழியன், மு.கருணாநிதி, எம்.ஜி.ஆர்., வி.என்.ஜானகி, O.பன்னீர்செல்வம் ஆகியோர் முதலமைச்சர்களாக இருந்திருக்கிறார்கள்.

ஆனால், அவர்களெல்லாம் ஏதாவது ஒரு வகையில் டெல்லி தர்பாரின் கட்டளைகளுக்கு கட்டுப்பட்டு தான், ஆட்சி நடத்த வேண்டிய நிர்பந்தம் இருந்து வந்தது. டெல்லி தர்பாரின் கட்டளைக்கும், கண் அசைவுக்கும், இசைந்து கொடுக்காத எந்த ஒரு மாநில அரசும், ஐந்து ஆண்டு காலம் ஆட்சியை நிறைவு செய்ததாக வரலாறு இல்லை.

ஏதாவது ஒரு காரணத்தைச் சொல்லி இடைக் காலத்திலேயே ஆட்சியை கலைத்து விடுவார்கள். இந்த பாதிப்புக்கு எம்.ஜி.ஆரும் உள்ளாகியிருக்கிறார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

ஆனால், இவர்களுக்கெல்லாம் விதிவிலக்காக, ஆட்சி, அதிகாரத்தைப் பற்றியெல்லாம் கடுகளவும் கவலைப்படாமல், மத்தியரசின் மீது வழக்கு மேல் வழக்குப் போட்டு, தமிழகத்தின் உரிமைகளை மீட்டெடுத்தப் பெருமை தமிழக முதல்வர் ஜெ.ஜெயலலிதாவைதான் சேரும்.

‘உரிமை என்பது கேட்டுப்பெறுவதல்ல! மாறாக எடுத்துக்கொள்வது’ என்ற இலக்கணத்திற்கு எடுத்துக்காட்டாக தமிழக முதல்வர் ஜெ.ஜெயலலிதா திகழ்ந்து வருகிறார்.

தமிழகம் வளமாகவும், தமிழக மக்கள் நலமாகவும் வாழவேண்டும் என்பதற்காக, கடந்த 3 ஆண்டுகளாக அல்லும், பகலும் அயராது உழைத்து வருகிறார். அவரின் சுய நலமில்லாத கடின உழைப்பிற்கு, தமிழக மக்கள் அளித்த மிகப் பெரிய பரிசுதான் இந்த தேர்தல் வெற்றி.

மு.கருணாநிதி தலைமையிலான முந்தைய தி.மு.க. ஆட்சியில் நிர்வாக சீர்கேடு. நில ஆக்கிரமிப்பு, நில அபகரிப்பு மற்றும் அரசு நிர்வாகங்களில் ஆளும் கட்சிக்காரர்களின் தலையீடு, அதிகார துஷ்பிரயோகங்கள் அதிக அளவில் இருந்தது.

2006 – ஆம் ஆண்டு முதல் 2011 -ம் ஆண்டுவரை, தி.மு.க. ஆட்சிக்காலத்தில் காவல்துறையின் செயல்பாடுகள் அனைத்தும், அந்தந்த மாவட்ட அமைச்சர்கள், தி.மு.க மாவட்டச் செயலாளர்கள் மற்றும் அந்தந்த தொகுதி தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்களின் கட்டுப்பாட்டில் தான் இருந்தது. தி.மு.க.வில் குறுநில மன்னர்கள் போட்ட ஆட்டம் கொஞ்சம் நஞ்சமல்ல! இதையெல்லாம் தமிழக மக்கள் இன்னும் மறக்கவில்லை என்பது இத்தேர்தல் முடிவுகள் தெளிவாக உணர்த்துகிறது.

ஆனால், ஜெ.ஜெயலலிதா தலைமையிலான அ.இ.அ.தி.மு.க ஆட்சியில் கடந்த 3 ஆண்டுகளில் இப்பிரச்சனை அறவே இல்லை.

இன்னும் வெளிப்படையாக சொல்ல வேண்டுமானால், இப்போது தி.மு.க. பிரமுகர்கள் கூட கட்சி வேஷ்டியை கட்டிக் கொண்டு காவல் நிலையங்களில் தைரியமாக சிபாரிசுகளுக்கு செல்கிறார்கள்.

ஆனால், அ.இ.அ.தி.மு.க மாவட்ட, மாநில நிர்வாகிகள், சட்ட மன்ற உறுப்பினர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்கள், அ.இ.அ.தி.மு.க கட்சிக்காரர்களின் நியாயமான பிரச்சனைகளுக்கு கூட, காவல் நிலையங்களுக்கு போன் பேசுவதற்கு கூட பயப்படுகிறார்கள்.

இது அம்மாவின் இலாக்கா! நடப்பது அம்மாவின் ஆட்சி! இதில் நாங்கள் தலையிடமாட்டோம். இது அம்மாவிற்கு தெரிந்தால் அடுத்த நிமிடமே எங்கள் பதவி பறிபோய்விடும். எதுவாக இருந்தாலும் சட்ட ரீதியாக பார்த்து கொள்ளலாம் என்று கூறிவிடுகிறார்கள்.

இதனால் தி.மு.க. பிரமுகர்களின் பொய்யான புகார்களின் பேரில், காவல்துறையில் உள்ள பணத்தாசை பிடித்த தி.மு.க. ஆதரவு அதிகாரிகளால், அ.இ.அ.தி.மு.க கட்சிக்காரர்கள் மீதே வழக்கு பதிவு செய்யப்பட்ட சம்பவங்களும் உண்டு. இது ஏதோ கற்பனை அல்ல! இதற்கான சட்ட ரீதியான ஆதாரங்கள் என்னிடம் உள்ளது.

வழக்கு பதிவு செய்யப்பட்டு விட்டது என்ற ஒரே காரணத்திற்காக, செய்யாதக் குற்றத்திற்காக அ.இ.அ.தி.மு.க கட்சிக்காரர்கள் ஒரு சிலர், வழக்கு, வாய்தா என்று நீதிமன்றங்களுக்கு இன்னும் அழைந்து கொண்டுதான் இருக்கிறார்கள். இது ஏதோ அ.இ.அ.தி.மு.க ஆட்சிக்கு வக்கலாத்து வாங்குவதற்காக நான் இதை சொல்லவில்லை.

அந்த அளவிற்கு அனைத்து துறைகளிலும், அரசு அதிகாரிகளுக்கு முழு சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளது. அதை ஒரு சில அதிகாரிகள் தங்களின் சுயநலத்திற்காகவும், தனிப்பட்ட ஆதாயத்திற்காகவும் பயன்படுத்தி கொள்கிறார்கள். இதனால், இந்த ஆட்சிக்கு களங்கம் ஏற்படுவதோடு, ஆளும் கட்சிக்காரர்களே பாதிக்கப்படும் சூழ்நிலை உள்ளது என்ற உண்மையை இங்கு நான் பதிவு செய்தே ஆக வேண்டும்.

தமிழக மக்களுக்கு ஏதாவது தீமைகளோ, விரும்ப தகாத சம்பவங்களோ, சட்டம் ஒழுங்கு பிரச்சனைகளோ ஏற்படுமானால், அதற்கு ஒரு சில அதிகாரிகளின் பேராசையும், சுயநலமும், அவர்களின் கவனக் குறைவும் தான் காரணமாக இருக்குமேயொழிய.

தன் மனம் அறிந்து, தன் சிந்தனையாலும், சொல்லாலும், செயலாலும், கடமைகள் தவறியதாலும் எந்த ஒரு தீங்கையும், தமிழக மக்களுக்கு, முதல்வர் ஜெ.ஜெயலலிதா ஒரு காலமும் செய்யமாட்டார் என்பதை நான் முழுமையாக நம்புகின்றேன்.

எனவே, அரசு ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் அனைவரும், ஒழுக்கமாகவும், மிக நேர்மையாகவும் நடந்து கொண்டால், இந்திய அளவில் மட்டும் அல்ல! சர்வதேச அளவில் தலைச்சிறந்த மாநிலமாக தமிழகம் நிச்சயம் விளங்கும் என்பதில் எமக்கு எள்ளவும் சந்தேகம் இல்லை.

-டாக்டர்.துரைபெஞ்சமின்.

E.mail: drduraibenjamin@yahoo.in