சர்வதேசத்தின் கண்ணில் மண்ணை தூவும் நடவடிக்கையில் சிறிலங்கா ஈடுபட்டு வருகிறது: சர்வதேச மன்னிப்புச் சபையின் இந்திய தலைமை நிர்வாகி ஆனந்த பத்மநாபன்

Amnesty-India-chief-executive-G-Ananthapadmanabhanமனித உரிமை மீறல் தொடர்பில் சர்வதேசம் எடுக்கும் நடவடிக்கைகளுக்கு செவிசாய்க்காது சர்வதேசத்தின் கண்ணில் மண்ணை தூவும் நடவடிக்கையில் சிறிலங்கா ஈடுபட்டு வருவதாக சர்வதேச மன்னிப்புச் சபையின் இந்திய தலைமை நிர்வாகி ஆனந்த பத்மநாபன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

சிறிலங்காவில் யுத்தம் முடிந்து ஐந்து வருடங்கள் கடந்துள்ள நிலையில் பாதிக்கப்பட்டவர்கள் இன்னமும் நியாயம் வேண்டி நிற்பது வெட்கம் கெட்ட செயல்.

சிறிலங்கா மீது மனித உரிமை மீறல் மற்றும் போர்க்குற்ற விசாரணை நடத்தப்பட வேண்டியது அவசியம் என ஐ. நா மனித உரிமை ஆணையாளர் நாயகம் விடுத்துள்ள பலமான புதிய அறிக்கையின் பரிந்துரைகளை செயற்படுத்த சர்வதேச சமூகம் பாடுபட வேண்டும்.

மேலும், சர்வதேச போர்க்குற்ற விசாரணை வலியுறுத்தி நவிபிள்ளை வெளியிட்டுள்ள புதிய அறிக்கை முக்கியமானதும் அவசர மற்றும் கசப்பான நினைவூட்டல் எனவும் இனியும் தாமதிக்க முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

நவிப்பிள்ளையின் புதிய அறிக்கை ஒரு கண் திறப்பாக இருக்கட்டும் சிறிலங்கா மீது போர்க்குற்ற விசாரணை நடத்தும் வலுவான தீர்மானம் ஒன்றை ஐ. நா மனித உரிமை பேரவையில் நிறைவேற்ற வேண்டும் என ஐநாவிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

நவிப்பிள்ளையின் கண்டுபிடிப்புகள் எங்களது கருத்துகளுடன் ஒத்துப்போவதாகவும் சிறிலங்காவில் இரு தரப்பினராலும் மேற்கொள்ளப்பட்ட மனித உரிமை மீறல் மற்றும் போர்க்குற்றம் குறித்து தமக்கு இன்னும் ஆதாரம் கிடைத்து வருகிறது என அவர் குறிப்பிட்டுள்ளார்.