இலங்கையில் இறுதி யுத்தம் முடிவுக்கு வந்து 5 ஆண்டுகளுக்கு மேல் ஆகியும், அங்கு தமிழ் மக்கள் யாரும் நிம்மதியாக இல்லை என்பதுதான் எதார்த்தம்.
இந்நிலையில், இலங்கை இறுதி யுத்தத்தில் இராணுவத்தால் கைது செய்யப்பட்டு காணாமல் போன தனது மகள், தற்போதைய இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தேர்தல் துண்டு பிரசுரத்தில் இருப்பதாகவும், அவளை எப்படியாவது கண்டுபிடித்து தருமாறு அப்பெண்ணின் தாய் உருக்கமாக கோரிக்கை விடுத்துள்ளார்.
இலங்கை இறுதி யுத்தத்தில் காணாமல் போனவர்களை கண்டுப்பிடித்து குடும்பத்தாரிடம் ஒப்படைக் வேண்டி, அவர்களது உறவினர்கள் வவுனியா நகரசபை மைதானத்தில் நடத்திய ஆர்பாட்டத்தில் கலந்து கொண்ட போது இதனைத் தெரிவித்தார்.
2009 ஆம் ஆண்டு இறுதிக் கட்ட யுத்தத்தின் போது மாத்தளன் பகுதியில் வைத்து இராணுவத்தினரால் எனது மகள் பிடித்து செல்லப்பட்டாள். அப்பொழுது அவளுக்கு 17 வயது. எனது மகள் இராணுவத்தால் பிடிக்கப்பட்டு கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் கொண்டு செல்லப்பட்டாள் என்பதை அவளுடன் நின்ற பிள்ளை என்னிடம் கூறினாள்.
நான் எனது மகளைத் தேடிச் செல்லாத இடமே இல்லை. எனது மகளை இராணுவம் பிடித்து செல்லவில்லை என்றுதான் கூறுகிறார்கள். ஆனால், சிறிது காலத்திற்கு பின்னர் தொலைபேசி அழைப்பு ஒன்று வந்தது. அதில் எனது மகள் கொழும்பிலுள்ள ஒரு பாடசாலை ஒன்றில் கல்வி கற்று வருகிறாள். அவளை வந்து அழைத்து செல்லுங்கள் என்று கூறினார்கள்.
நான் போவதற்கு ஆயத்தமாகிய போது, மறுநாள் அதே தொலைபேசி அழைப்பிலிருந்து அது உங்களுடைய மகள் இல்லை என்று கூறினார்கள். நான் பேசிக் கொண்டு இருந்த போதே, தொலைபேசி இணைப்பை துண்டித்து விட்டார்கள். நான் மீண்டும் முயற்சித்த போது அந்த தொலைபேசி இயங்கவில்லை.
பின்னர் தேர்தல் காலங்களில் பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேனாவின் தேர்தல் துண்டுப் பிரசுரத்தில் எனது மகளை கண்டேன். எனது மகளை எனக்குத் தெரியும். அவள் உயிருடன்தான் இருக்கிறாள். எனவே, எனது மகளை மீட்டுத் தாருங்கள் என, அந்த தாய் கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்தார்.
பெற்றவளுக்கு தானே பிள்ளையோட அருமை தெரியும். நட்டவனுக்கு தானே பயிரோட அருமை புரியும்.
-எஸ்.சதிஸ் சர்மா.
