தமிழ்நாட்டின் மின் கட்டமைப்பை வலுப்படுத்த ரூ.15,032 கோடியில் 231 புதிய துணை மின் நிலையங்கள்: முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் உத்தரவு.

தமிழ்நாடு முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் தலைமையில் இன்று (16.6.2026) தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற எரிசக்தித் துறை சார்ந்த ஆய்வுக் கூட்டத்தில், தமிழ்நாடு மின்சார வாரிய துணை நிறுவனங்களுடன் மின் உற்பத்தி. மின் தேவை. மின் விநியோகம் மற்றும் மின் கட்டமைப்பை வலுப்படுத்த மேற்கொள்ளப்பட்டுவரும் மேம்பாட்டுப் பணிகள் குறித்து விரிவான ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

தமிழ்நாடு முழுவதும் மின் உற்பத்தி மற்றும் மின் கொள்முதல் போதுமான அளவில் இருப்பதால், மாநிலத்தில் மின்சார பற்றாக்குறை எதுவும் இல்லை.இருப்பினும், சென்னை உள்ளிட்ட நகர்ப்புறங்களின் சில இடங்களில் உள்ள பழமையான மின் உபகரணங்கள், நிலத்தடி மின் கேபிள் பழுதுகள், அதிகரித்துள்ள மின் பயன்பாடு, பராமரிப்புப் பணிகள். பல்வேறு சேவைத் துறைகள் சாலை தோண்டும் பணிகளின்போது சேதமடைவது போன்ற எதிர்பாராதவிதமாக மின்கேபிள்கள் காரணங்களினால் பகிர்மான அளவில் அவ்வப்போது மின்தடைகள் ஏற்படுகின்றன.

இவ்வாறான பிரச்சனைகளுக்கு நிரந்தரத் தீர்வு காண, சென்னை மாநகரப் பகுதியில் மட்டும் சுமார் 2,275 கோடி ரூபாய் மதிப்பில் மின் விநியோக கட்டமைப்பை மேம்படுத்தும் திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளன.மாநிலம் முழுவதும் 121 புதிய மற்றும் மேம்படுத்தப்பட்ட துணை மின் நிலையங்கள் 10,109 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டு வருகின்றன.

மேலும் 231 புதிய துணை மின் நிலையங்கள் 15,032 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைத்திட திட்டமிடப்பட்டுள்ளன. மின் விநியோக சேவையை மேலும் மேம்படுத்தும் வகையில், கூடுதலாக 77 புதிய மின்தடை நீக்க (Fuse-Off Call) மையங்கள். 7 கூடுதல் மின்பழுது நீக்கும் குழுக்கள். 125 மின் பழுது நீக்கும் வாகனங்கள், 10 உயர்மட்ட கண்காணிப்புக் குழுக்கள் மற்றும் 2 மின் புதைவட கேபிள் பழுது கண்டறியும் குழுக்கள் செயல்பாட்டில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. இதன்மூலம் பொதுமக்களின் புகார்களுக்கு விரைவான தீர்வு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Leave a Reply