மத்திய நிதி மற்றும் பெருநிறுவன விவகாரங்கள் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், 2027-28ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டைத் தயாரிப்பது தொடர்பாக நவம்பர் 16 முதல் 26ஆம் தேதி வரை பல்வேறு துறைகளைச் சேர்ந்த பிரதிநிதிகளுடன் ஆலோசனைக் கூட்டங்களை நடத்தினார்.
புதுடெல்லியில் இன்று நடைபெற்ற 13-வது மற்றும் இறுதிக்கட்ட ஆலோசனைக் கூட்டத்தில் இளைஞர் பிரதிநிதிகளுடன் அவர் கலந்துரையாடினார். இந்த ஆண்டு முதன்முறையாக இளைஞர்களுடன் தனிப்பட்ட பட்ஜெட் ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந்த ஆலோசனைகளில் 13 துறைகளைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் பங்கேற்றனர். வேளாண்மை, உற்பத்தித் துறை, சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள், புத்தொழில் நிறுவனங்கள், வங்கித்துறை, தகவல் தொழில்நுட்பம், உள்கட்டமைப்பு, கல்வி, சுகாதாரம், வேலைவாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு துறைகளின் கருத்துகள் பெறப்பட்டன.
இந்தியாவில் உயிரி உரங்கள் மற்றும் நவீன உயிரித் தொழில்நுட்பம் சார்ந்த வேளாண் இடுபொருட்களின் உள்நாட்டு உற்பத்தியை அதிகரித்தல், செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தில் இந்தியாவின் போட்டித்திறனை மேம்படுத்துதல், சிறு நிறுவனங்களுக்கான இணையப் பாதுகாப்பு விழிப்புணர்வை அதிகரித்தல் உள்ளிட்ட பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டன.
மேலும், கிராமப்புற இளைஞர்களுக்கு வேளாண்மை அல்லாத பிற துறைகளில் வேலைவாய்ப்புகளை உருவாக்குதல், 5ஆம் வகுப்பு முடிக்கும் ஒவ்வொரு மாணவரும் செய்தித்தாளைப் படித்துப் புரிந்துகொள்ளும் வகையில் நாடு தழுவிய வாசிப்பு இயக்கத்தைத் தொடங்குதல் ஆகிய யோசனைகளும் முன்வைக்கப்பட்டன.
நகர்ப்புறங்களில் குறைந்த வாடகை வீடுகளை ஊக்குவித்தல் மற்றும் இரண்டாம், மூன்றாம் நிலை நகரங்களின் வளர்ச்சியை விரைவுபடுத்துதல் மூலமாக இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு மற்றும் தொழில்முனைவோர் வாய்ப்புகளை அதிகரிக்கவும் பரிந்துரைக்கப்பட்டது.
புத்தாக்க வளர்ச்சி, வேலைவாய்ப்பு விரிவாக்கம், சமூக மற்றும் பொருளாதார உள்கட்டமைப்பு மேம்பாடு ஆகியவற்றை மையமாகக் கொண்டு இந்த ஆலோசனைகள் அமைந்திருந்தன. பல்வேறு தரப்பினரின் கருத்துகளைப் பெற்று அனைவரையும் உள்ளடக்கிய பொருளாதார வளர்ச்சியை உறுதி செய்வதே இந்த பட்ஜெட் ஆலோசனைகளின் முக்கிய நோக்கமாகும்.
திவாஹர்
