குளமாகக் காட்சி அளிக்கும் குடியிருப்புப் பகுதி! மண்ணச்சநல்லூர் ஒன்றியம், பிச்சாண்டார் கோவில் ஊராட்சி, டோல்கேட் சங்கரா நகரின் அவலம்!

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் ஊராட்சி ஒன்றியம், பிச்சாண்டார்கோவில் ஊராட்சியில் பங்கையர்செல்வி, வாளகட்டை, பிச்சாண்டார்கோவில், டோல்கேட், நெற்குப்பை ஆகிய பகுதிகள் உள்ளன. இதில் டோல்கேட் அருகே அமைந்திருப்பது தான் சங்கரா நகர், இந்த சங்கரா நகர் 2வது தெருவில் சாலை குண்டும் குழியுமாக இருக்கிறது. ஒரு மணி நேரம் மழைப் பெய்தாலே அந்த தெரு முழுவதும் குளம் போல் தண்ணீர் தேங்கி விடுகிறது. சாக்கடையும் நிரம்பி சாலையில் தேங்கியுள்ள தண்ணீரில் கலந்து அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. தேங்கிக் கிடக்கும் தண்ணீரில் கொசுக்கள் மற்றும் பாம்புகள் வசதியாக வாழ்கிறது. இதனால் அப்பகுதியில் வசிக்கும் குடியிருப்பு வாசிகள் மற்றும் குழந்தைகள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். மேலும், இருசக்கர வாகனத்தில் செல்லும் நபர்கள் தடுமாறி கீழே விழுந்து விடுகிறார்கள்.

கடந்த ஒரு வருட காலமாகவே அந்த தெருவின் சாலை பராமரிப்பின்றி இருந்து வருகிறது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை முறையிட்டும் இன்று வரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்த செய்திப் பதிவேற்றம் செய்யும் இந்த நிமிடம் வரை அப்பகுதியில் மழைநீர் தேங்கி குளம் போல் காட்சியளிக்கிறது. இப்பகுதி மண்ணச்சநல்லூர் சட்டமன்றத்திற்கும், பெரம்பலூர் பாராளுமன்றத் தொகுதிக்கும் உட்பட்ட பகுதியாகும்.

வீடுகளில் கழிவுநீர் தேங்கி இருந்தாலும் பழைய டயர், பக்கெட், பிளாஸ்டிக் கேன் மற்றும் உரல், அம்மிக்கல், ஆட்டுக்கல் ஆகியவற்றில் தண்ணீர் தேங்கி இருந்தாலும் “டெங்கு கொசு” உற்பத்தியாகும், நோய் பரவும் என்று பொது மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள், இதுபோல் தெருக்களில் குளம் போல் தேங்கி கிடக்கும் தண்ணீருக்கு என்னப் பரிகாரம் செய்ய போகிறார்கள்?

எனவே, சம்பந்தப்பட்ட துறை சார்ந்த அதிகாரிகள் இப்பகுதியை நேரில் பார்வையிட்டு சாலை அமைத்து தண்ணீர் தேங்காமல் உரிய நடவடிக்கை எடுப்பார்களா? பொறுத்திருந்துப் பார்ப்போம்.

Leave a Reply