அசாம் மாநிலத்தில் லாரியில் கடத்தப்பட்ட 20 கிலோ யாபா போதை மாத்திரைகள் பறிமுதல்!

வடகிழக்கு மாநிலங்களில் போதைப்பொருள் கடத்தலைத் தடுக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக, வருவாய் புலனாய்வு இயக்குநரகம் (DRI) மற்றும் அசாம் ரைஃபிள்ஸ் படையின் 38-வது பட்டாலியன் இணைந்து நடத்திய சோதனையில், 2026 நவம்பர் 12-ஆம் தேதி 20 கிலோ மெத்தாம்பெட்டமைன் (யாபா) போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

ரகசியத் தகவலின் அடிப்படையில், அசாம் மாநிலம் கச்சார் மாவட்டம் போர்கோலா அருகே சென்றுகொண்டிருந்த டாடா டிப்பர் லாரியை அதிகாரிகள் மடக்கிச் சோதனையிட்டனர்.

அப்போது லாரியின் வலதுபுறப் பக்கவாட்டுப் பலகையின் உட்பகுதியில் சிமெண்ட் மற்றும் பெயிண்ட் பூசி மறைக்கப்பட்டிருந்த ரகசிய அறை கண்டுபிடிக்கப்பட்டது.

அந்த அறையைத் திறந்து சோதனையிட்டபோது, இளஞ்சிவப்பு மற்றும் ஆரஞ்சு நிறத்திலான போதை மாத்திரைகள் அடங்கிய 32 பொட்டலங்கள் கைப்பற்றப்பட்டன. அவற்றில் 17 பொட்டலங்கள் தலா ஒரு கிலோ எடையும், 15 பொட்டலங்கள் தலா 200 கிராம் எடையும் கொண்டிருந்தன.

முதற்கட்ட சோதனையில் அவை ஆம்பெட்டமைன் வகை போதைப்பொருள் என்பது உறுதி செய்யப்பட்டது.

மொத்தம் 20 கிலோ போதை மாத்திரைகள் மற்றும் கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட லாரி ஆகியவை 1985-ஆம் ஆண்டு போதைப்பொருள் தடுப்புச் சட்டத்தின்கீழ் பறிமுதல் செய்யப்பட்டன. லாரியில் இருந்த நபரும் கைது செய்யப்பட்டார்.

போதைப்பொருள் கடத்தல் கும்பல்களை ஒழிக்கவும், சட்டவிரோத போதைப்பொருள் புழக்கத்தைக் கட்டுப்படுத்தவும் தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்படும் என வருவாய் புலனாய்வு இயக்குநரகம் தெரிவித்துள்ளது.

Leave a Reply