ஜனக்பூர் தாம் – அயோத்தி இடையே வாராந்திர ரயில் சேவைக்கு ரயில்வே ஒப்புதல்.

இந்தியா – நேபாளம் இடையிலான ரயில் போக்குவரத்தை மேம்படுத்தும் வகையில், நேபாளத்தின் ஜனக்பூர் தாம் நகரையும், உத்தரப் பிரதேசத்தின் அயோத்தியையும் இணைக்கும் புதிய வாராந்திர ரயில் சேவைக்கு இந்திய ரயில்வே ஒப்புதல் அளித்துள்ளது.

ராமாயணத்துடன் தொடர்புடைய முக்கிய ஆன்மிகத் தலங்களான சீதையின் பிறப்பிடமான ஜனக்பூர் தாம், ராமர் பிறந்த இடமான அயோத்தி ஆகியவற்றை இந்த ரயில் இணைக்கிறது. இதன் மூலம் இரு நாடுகளைச் சேர்ந்த பக்தர்களும், சுற்றுலாப் பயணிகளும் எளிதாகப் பயணம் செய்ய முடியும்.

மொத்தம் 604 கிலோமீட்டர் தொலைவுக்கு ஜனக்பூர் தாமிலிருந்து அயோத்தியா வரை இந்த புதிய ரயில் இயக்கப்படும். பீகார், உத்தரப் பிரதேச மாநிலங்களின் முக்கிய நகரங்களான ஜெய்நகர், மதுபனி, ஷிஷோ, சீதாமர்ஹி, ரக்சால், நர்கட்டியாகஞ்ச், கோரக்பூர், பஸ்தி, மன்காபூர் ஆகிய இடங்களில் இது நின்று செல்லும்.

வாரத்திற்கு ஒருமுறை இயக்கப்படும் இந்த ரயில், ஜனக்பூர் தாமிலிருந்து சனிக்கிழமையும், அயோத்தியா கண்ட்டிலிருந்து திங்கட்கிழமையும் புறப்படும்.

இந்தச் சேவை மூலம் ராமாயண ஆன்மிகச் சுற்றுலா மேம்படுவதுடன், கல்வி, வணிகம், குடும்பத் தேவைகள் ஆகியவற்றுக்காகப் பயணம் செய்வோருக்கும் வசதி ஏற்படும். ரயில் வழித்தடப் பகுதியில் உள்ள சுற்றுலா நிறுவனங்கள், தங்கும் விடுதிகள், உள்ளூர் வணிகர்கள், பாரம்பரியக் கைவினைக் கலைஞர்கள் ஆகியோருக்கும் வருமான வாய்ப்புகள் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பீகார், நேபாள எல்லைப் பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கும் கூடுதல் போக்குவரத்து வசதி கிடைக்கும்.

இந்தியா, நேபாளம் இடையே பல நூற்றாண்டுகளாக நிலவும் வரலாற்று, கலாசார, சமூக உறவுகளை மேலும் வலுப்படுத்தும் முயற்சியாக இந்த ரயில் சேவை அமையும் என இந்திய ரயில்வே தெரிவித்துள்ளது.

Leave a Reply