அழகானக் கிராமங்கள்! கழிப்பறை வசதி இல்லாமல் கஷ்டப்படும் பொதுமக்கள்!

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் வட்டம், கொடைக்கானல் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதியில் பூண்டி கிராம ஊராட்சி இருக்கிறது. இது அழகிய மலை கிராமம் ஆகும். இப்பகுதியில் உள்ள மலை அருவிக்கு சுற்றுலாப் பயணிகளும் அடிக்கடி வந்து செல்கின்றனர்.

இந்த பூண்டி கிராம ஊராட்சியில், கிளாவரை (Kilavarai), போலூர் (Polur), காவஞ்சி (Kavanji) என்ற மூன்று குக்கிராமங்கள் இருக்கிறது. பூண்டி கிராம ஊராட்சி மொத்தமாக 9 வார்டுகளைக் கொண்டு நிர்வகிக்கப்படுகிறது. வார்டு 1 முதல் 4 வரை: கிளாவரை மற்றும் அதனைச் சுற்றியுள்ள மலைக் கிராமப் பகுதிகளும், வார்டு 5 மற்றும் 6: போலூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரக் குடியிருப்புகளும், வார்டு 7 முதல் 9 வரை: பூண்டி முதன்மைக் கிராமம் மற்றும் காவஞ்சி மலைப்பகுதி விவசாயக் குடியிருப்புகளையும் உள்ளடக்கிய பகுதியாகும். இப்பகுதி பழனி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பகுதியாகும்.

இந்த பூண்டி ஊராட்சியில் உள்ள குக்கிராமங்களில் கழிப்பறை வசதி இல்லாமல் மக்கள் மிகவும் கஷ்டப்பட்டு வருகிறார்கள். ஏற்கனவே இருக்கும் பெண்கள் கழிப்பறைகளில் தண்ணீர் வசதி இல்லாததால் பயன்பாடு இன்றி இருந்து வருகிறது. இதனால் பெண்கள் பெரும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர்.

எங்கள் கிராமம் உருவான காலத்தில் இருந்து இன்றுவரை எங்கள் கிராமத்தில் கழிப்பறை என்பதே இல்லை. வயல்வெளி மற்றும் மயானப்பாதை என திறந்தவெளியிலேயே மலம் கழித்து வருகிறோம். அதிலும் போதிய திறந்த வெளி காலியிடங்கள் இல்லாததால் மிகவும் அருவருப்பான நிலையில்தான் நாங்கள் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம். எங்கள் போலூர் குக்கிராமத்தில் மட்டும் சுமார் 500 குடும்பங்கள் வாழ்ந்து வருகிறோம். பெண்களுக்கே போதிய கழிப்பறை வசதி இல்லாத போது, ஆண்களின் பரிதாப நிலையை கொஞ்சம் நினைத்துப் பாருங்கள். இயற்கை உபாதைகளை கழிப்பதற்காக மழை பெய்தாலும், வெயில் அடித்தாலும், பகல் நேரமாக இருந்தாலும், இரவு நேரமாக இருந்தாலும் பொதுவெளியில் உள்ள மறைவிடங்களை தான் தேடி ஓட வேண்டி இருக்கிறது. இது குறித்து மாவட்ட நிர்வாகத்திடம் பலமுறை எழுத்துப்பூர்வமாக கோரிக்கை வைத்துள்ளோம். ஆனால் இன்று வரை இப்பிரச்னை தீர்ந்தபாடு இல்லை என்கிறார் இந்த ஊராட்சியை சேர்ந்த கே.எம். பரமேஸ்வரன்.

சுதந்திரம் அடைந்து 79 ஆண்டுகளாகியும் கழிப்பறை வசதி கூட செய்து கொடுக்க முடியாத நிலையில் தான் இந்தியாவில் இதுபோன்று ஆயிரக்கணக்கானக் கிராமங்கள் இருக்கிறது. அவற்றில் ஒன்றுதான் இந்த பூண்டி ஊராட்சி. எனவே, அடிப்படை வசதிகளும், வளர்ச்சித் திட்டங்களும் கிராமங்களுக்கு முழுமையாக சென்று அடையவில்லை என்பதை ஆட்சியாளர்களும், அதிகாரிகளும் வெட்கத்தோடு ஒத்துக் கொள்ளத்தான் வேண்டும். மக்களின் வரிப்பணத்தில் பெரும்பகுதியை அரசு அதிகாரிகளுக்கும் மற்றும் ஊழியர்களுக்கும் ஊதியமாக அளித்தாலும் அவர்கள் மக்களுக்கு நேர்மையாகவும், விசுவாசமாகவும் பணியாற்றுவதில்லை என்பதுதான் கசப்பான உண்மை. கிராமங்கள் முன்னேறினால் தான் நாடு முன்னேறும். கிராமங்கள் சுகாதாரமாக இருந்தால்தான் நாடும் சுகாதாரமாக இருக்கும். அதனால்தான் “கிராமங்கள் தான் இந்தியாவின் முதுகெலும்பு” என்று மகாத்மா காந்தி சொன்னார்.

இத்தனை ஆண்டுகளாக இலவச அரிசி வழங்கும் அரசாங்கம் தான்! மலம் கழிப்பதற்கும், சிறுநீர் கழிப்பதற்கும் நகர்புறங்களில் ரூபாய் ஐந்து முதல் பத்து வரை வசூல் செய்கிறது, அதிலும் ஏகப்பட்ட முறைகேடு மற்றும் ஊழல் நடந்துள்ளது என்பதை நினைக்கும்போது மிகவும் வேதனையாக இருக்கிறது. முதலில் இத்தகைய முரண்பாடுகளை முற்றிலும் சரி செய்ய வேண்டும். நாடு முழுவதும் உள்ள கட்டணக் கழிப்பிடங்கள் அனைத்தையும் இலவச கழிப்பிடங்களாக மாற்றி பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். அவற்றின் தூய்மைப் பணிக்காக இரவு பகல் எந்நேரமும் (24 ×7) சுழற்சி முறையில் பணியாளர்களைப் பணி அமர்த்த வேண்டும்.

மாற்றத்தை விரும்பும் தமிழ்நாடு முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் அவர்கள், இவ்விசயத்தில் தனிக்கவனம் செலுத்த வேண்டும். கடந்த 79 ஆண்டுகால தீர்க்கப்படாத இத்தகைய அவலங்களுக்கு அவர் முடிவு கட்ட வேண்டும்.

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கிராமங்களையும் நேரில் சென்று பார்வையிட தங்கள் அமைச்சர்களுக்கும், ஆட்சித் தலைவர்களுக்கும் உத்தரவிட வேண்டும். தமிழ்நாட்டில் பொதுக் கழிப்பறைகள் இல்லாத கிராமங்கள் எத்தனை? பொதுக் கழிப்பறைகள் இருந்தும் சுத்தம் செய்யாமல், பராமரிப்பு இல்லாமல் மற்றும் தண்ணீர் வசதி இல்லாமல் பொதுமக்கள் பயன்பாட்டில் இல்லாத கழிப்பறைகள் எத்தனை? கிராமங்களில் கழிப்பறை வசதி இல்லாத குழந்தைகள் காப்பகங்கள் மற்றும் பள்ளிக்கூடங்கள் எத்தனை? கிராமங்களில் குடிநீர் தொட்டிகள் முறையாக சுத்தம் செய்யப்படுகிறதா? குடிநீர் தொட்டிகள் பாதுகாப்பாக பராமரித்து கண்காணிக்கப்படுகிறதா? தெரு விளக்குகள் தடையில்லாமல் எரிகிறதா? அனைத்துக் கிராமங்களிலும் சாலை மற்றும் சாக்கடை வசதிகள் இருக்கிறதா? என்ற உண்மையானப் புள்ளி விவரங்களை போர்கால அடிப்படையில் சேகரிப்பதற்கு உத்தரவிட வேண்டும். உண்மையாக சேகரிக்கப்பட்ட தரவுகளின் அடிப்படையில் இப்பிரச்சனைகளுக்கு தீர்வு காண வேண்டும். இதைதான் மக்களும் விரும்புகிறார்கள்.

சக ஊடக நண்பர்களுக்கு ஒரு அன்பான வேண்டுகோள்: மைக்கையும், கேமராவையும் தூக்கிக் கொண்டு இழவு வீடுகளில் என்ன நடக்கிறது? என்பதைப் புலனாய்வு செய்வதும், முக்கிய பிரமுகர்களின் அந்தரங்க வாழ்க்கையை ஆராய்ச்சிச் செய்து அவதூறுப் பரப்புவது மட்டுமே முழு நேர தொழிலாகக் கருதாமல், கிராமங்களை நோக்கிப் பயணப்படுங்கள்!விளிம்பு நிலை மக்களின் மீது தங்கள் பார்வையைச் செலுத்துங்கள்! பல தசாப்தங்களாக தீர்க்கப்படாத பிரச்னைகள் மீது வெளிச்சத்தைப் பாச்சுங்கள்! வரலாறு உங்களை வாழ்த்தும்.

Leave a Reply