புதுதில்லியில் யமுனை ஆற்றை சீரமைப்பது தொடர்பான ரூ.8,941 கோடி மதிப்பிலான திட்டங்களின் தொடக்க விழா மற்றும் அடிக்கல் நாட்டு விழாவில் மத்திய உள்துறை, கூட்டுறவுத்துறை அமைச்சர் திரு அமித் ஷா இன்று கலந்துகொண்டார்.
இந்நிகழ்ச்சியில் தில்லி துணைநிலை ஆளுநர் தரன்ஜித் சிங் சாந்து, முதலமைச்சர் திரு ரேகா குப்தா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
அப்போது உரையாற்றிய மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா, யமுனை ஆற்றை சுத்திகரிப்பதற்காக சுமார் ரூ.9,000 கோடி மதிப்பிலான முக்கிய திட்டங்களுக்கு இன்று அடிக்கல் நாட்டப்பட்டதாகவும், சில திட்டங்கள் தொடங்கி வைக்கப்பட்டதாகவும் கூறினார்.
தில்லியில் நம் கட்சியின் அரசு அமைந்தவுடன் பிரதமர் திரு நரேந்திர மோடி முக்கிய கூட்டத்தைக் கூட்டி யமுனை ஆற்றை சுத்திகரிப்பது தொடர்பான தன்னுடைய தொலைநோக்குப் பார்வையை தில்லி அரசிடமும், மத்திய உள்துறை அமைச்சகத்திடமும் முன்வைத்தார் என்று குறிப்பிட்டார்.
இதற்கான பணிகளில் குறுகிய காலத்தில் தாங்கள் 40 சதவிகிதத்திற்கும் அதிகமான வெற்றியை பெற்றுள்ளதாக கூறினார்.
கடந்த 30 ஆண்டுகளாக முந்தைய அரசுகள் தில்லியின் கழிவுநீரை யமுனை ஆற்றில் கலக்க அனுமதித்ததாகவும், பால் பண்ணையில் இருந்து நாள்தோறும் இரண்டாயிரம் டன் சாணத்தை யமுனை ஆற்றில் கொட்ட அனுமதித்ததாகவும் திரு அமித் ஷா கூறினார் .
கடந்த காலத்தில் உத்தரப்பிரதேசம், ஹரியானா ஆகிய மாநிலங்களில் முக்கிய எதிர்க்கட்சியின் கூட்டணிக் கட்சிகள் ஆட்சியில் இருந்தபோது, ஹரியானாவில் இருந்து தொழிற்சாலைக் கழிவு நீரும், உத்தரப்பிரதேசத்திலிருந்து அசுத்தமான நீரும் யமுனை ஆற்றில் கலந்ததாக தெரிவித்தார்.
