பாதுகாப்பு ஆராய்ச்சி, மேம்பாட்டு அமைப்பான டிஆர்டிஓ-வின் கடற்படைப் பொருட்கள் ஆராய்ச்சி ஆய்வகத்தால் உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட காற்றுச் சார்பற்ற உந்துவிசை (ஏஐபி – AIP) அமைப்பின் ஆற்றல் தொகுப்பை செயல்பாட்டுக்குக் கொண்டுவரும் இரண்டாம் கட்டத்தை, கடற்படை தொடங்கியுள்ளது. இதில் நீருக்கடியில் செயல்படும் திறன்களை மேம்படுத்துவதற்கான ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல் எட்டப்பட்டுள்ளது. இந்த ஏஐபி அமைப்பானது, வளிமண்டல ஆக்ஸிஜனைச் சார்ந்திருப்பதைக் குறைப்பதன் மூலம், டீசல்-மின்சார நீர்மூழ்கிக் கப்பல்கள் நீருக்கடியில் தாக்குப்பிடிக்கும் திறனை அதிகரிக்கிறது.
குஜராத்தின் ஹசிராவில் உள்ள லார்சன் அண்ட் டூப்ரோ நிறுவனத்தின், கனரக பொறியியல் வளாகத்தில், இன்று (2026 அக்டோபர் 24) இரண்டாம் கட்ட செயல்பாடுகளின் தொடக்க விழா நடைபெற்றது. பாதுகாப்புத் துறைச் செயலாளர் திரு ராஜேஷ் குமார் சிங் தலைமை விருந்தினராகக் கலந்துகொண்டு, காணொலி வாயிலாக விழாவில் பங்கேற்றார்.
இந்நிகழ்ச்சியில் பேசிய திரு ராஜேஷ் குமார் சிங், உள்நாட்டு ஏஐபி திட்டத்தில் தொழில்துறை ஒத்துழைப்புகளைப் பாராட்டினார். இத்திட்டம், உற்பத்தித் தளத்தில் ஒரு பயனுள்ள அம்சமாக உருவெடுத்துள்ளது.
அடுத்த கட்டத்தில், ஏஐபி ஆற்றல் தொகுப்பானது மின் உற்பத்திக்காக இயக்கப்பட்டு, இந்தியக் கடற்படையின் நெறிமுறைகளின்படி கடுமையாகச் சோதிக்கப்படும். அதன் பிறகு, 2027-ம் ஆண்டின் தொடக்கத்தில் கல்வாரி வகை நீர்மூழ்கிக் கப்பலில் ஒருங்கிணைப்பதற்காக மசாகான் டாக் ஷிப் பில்டர்ஸ் லிமிடெட் நிறுவனத்திடம் அது ஒப்படைக்கப்படும்.
திவாஹர்
