உத்தரப் பிரதேசத்தில் முதலீட்டு வாய்ப்புகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன !- மத்திய அமைச்சர் பியூஷ் கோயல்.

தடையற்ற வர்த்தக ஒப்பந்தங்கள் மூலம் உலகளாவிய சந்தைகள் இந்தியாவிற்குத் திறக்கப்படுவதால், உத்தரப் பிரதேசத்தின் தொழில்முனைவோருக்கு சர்வதேச சந்தைகளை அணுகுவதற்கான சிறந்த வாய்ப்புகள் கிடைக்கும் என்று மத்திய வர்த்தகம், தொழில்துறை அமைச்சர் திரு பியூஷ் கோயல் கூறியுள்ளார்.

உத்தரப் பிரதேசத்தின் கிரேட்டர் நொய்டாவில் நடைபெற்ற உத்தரப் பிரதேச சர்வதேச வர்த்தகக் கண்காட்சியில் உரையாற்றிய திரு பியூஷ் கோயல், ஏற்றுமதி, முதலீடுகள் ஆகியவற்றை விரிவுபடுத்துவது, மாநிலத்தை ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாற்றும் இலக்கிற்குப் பங்களிக்கும் என்று கூறினார்.

சிறந்த தொழில்துறை கொள்கைகள், முனைப்பான தொழில்துறை திட்டங்கள் ஆகியவற்றால் உத்தரப் பிரதேச மாநிலம் விரும்பத்தக்க முதலீட்டு இடமாக உருவெடுத்துள்ளதாகவும் அவர் கூறினார். முக்கிய பெருநிறுவனங்களும் உலகளாவிய முதலீட்டாளர்களும் இம்மாநிலத்தில் முதலீடு செய்து, புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

உத்தரப் பிரதேசம் தற்போது ஆண்டுக்குச் சுமார் 2 லட்சம் கோடி ரூபாய் ஏற்றுமதி அளவைக் கொண்டுள்ளது என்றும், 2030-ம் ஆண்டுக்குள் இதை 5 லட்சம் கோடி ரூபாயாக உயர்த்த இலக்கு நிர்ணயிக்ப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் திரு பியூஷ் கோயல் குறிப்பிட்டார்.

Leave a Reply