நாடுகளிடையேயான ஒத்துழைப்பின் மூலம், உலக அளவில், சுகாதாரப் பாதுகாப்பிற்கான கட்டமைப்புகளை வலுப்படுத்துவதில், இந்தியாவின் உறுதியான நிலைப்பாட்டை மத்திய சுகாதாரத் துறைச் செயலாளர் திருமதி புண்ய சலிலா ஸ்ரீவஸ்தவா மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.
செப்டம்பர் 25 அன்று நியூயார்க்கில் நடைபெற்ற பெருந்தொற்றுத் தடுப்பு, தயார்நிலை குறித்த ஐநா உயர்நிலைக் கூட்டத்தில் பங்கேற்றுப் பேசிய அவர் இதனைத் தெரிவித்தார்.
கொவிட்-19 பெருந்தொற்றுப் பரவல் காலத்தில் பெற்ற அனுபவத்தின் மூலம், முதலீடு, செயல்பாடு, மீள்திறன் கொண்ட வலுவான சுகாதார கட்டமைப்புகளை மேம்படுத்த வேண்டியதன் அவசியத்தை அவர் சுட்டிக்காட்டினார்.
சுகாதார அவசரநிலைகளைத் திறம்பட எதிர்கொள்ளும் வகையில், ஆய்வக வசதிகள், அவசரகால ஒருங்கிணைப்பு, சுகாதாரப் பணியாளர்கள், மருந்துகளின் கையிருப்பு, மருத்துவ சிகிச்சைக்கான வசதிகளை விரிவுபடுத்துவதற்கான இந்தியாவின் முயற்சிகள் குறித்தும் திருமதி புண்ய சலிலா ஸ்ரீவஸ்தவா எடுத்துரைத்தார். கொவிட்-19 காலத்தில் இந்தியா சுமார் 100 நாடுகளுக்கு 30 கோடி தடுப்பூசி டோஸ்களையும், 150-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு மருத்துவ உதவிகளையும் வழங்கியதை அவர் சுட்டிக்காட்டினார். உலக சுகாதார அமைப்பின் (டபிள்யூஎச்ஓ) பெருந்தொற்று ஒப்பந்தத்தின் கீழ் நியாயமான முறையில் தடுப்பூசிகளும், மருத்துவத் தொழில்நுட்பங்களும் கிடைக்க வேண்டியதன் அவசியத்தையும் அவர் வலியுறுத்தினார்.
எம்.பிரபாகரன்
