விரைவான மாற்றம் கண்டு வரும் பாதுகாப்பு, வளர்ச்சி சார்ந்த சவால்களை எதிர்கொள்வதற்கு வளரும் நாடுகளிடையே ஒத்துழைப்பை அதிகரிக்க வேண்டும் என்று குடியரசு துணைத்தலைவர் திரு சி பி ராதாகிருஷ்ணன் அழைப்பு விடுத்துள்ளார்.
புதுதில்லியில் உள்ள குடியரசு துணைத்தலைவர் மாளிகையில் நடைபெற்ற சர்வதேச உத்திசார் கூட்டாண்மைக் குறித்த ஆலோசனைக் கூட்டத்தில் உரையாற்றிய அவர் இதனைத் தெரிவித்தார். இந்தக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக பல்வேறு நாடுகளிலிருந்து இந்தியா வந்துள்ள 38 சர்வதேச பிரதிநிதிகளையும் அவர் வரவேற்றார். உலகளாவிய தெற்கு நாடுகள் உட்பட இந்தியாவின் நட்பு நாடுகள், இந்தியாவுடன் ஒத்தக் கருத்து கொண்ட நாடுகளைச் சேர்ந்த தொழில்துறை நிபுணர்கள், நிறுவனங்களின் தலைவர்கள் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றனர்.
நாடுகளுக்கு இடையேயான பேச்சுவார்த்தைகள் பரஸ்பர கற்றல் அனுபவங்கள், உத்திசார் நடவடிக்கைகளுக்கான தளத்தை உருவாக்கும் வகையில் இந்தியா தலைமையில் நடைபெற்ற ஜி20 உச்சிமாநாட்டின் போது வெளிப்படுத்தப்பட்ட நிலைப்பாட்டை இந்நிகழ்வு பிரதிபலிக்கும் வகையில் அமைந்துள்ளது என்று அவர் கூறினார்.
பாரம்பரியப் பாதுகாப்புத் தொடர்பான கவலைகள், தொழில்நுட்பம், இணையதளச் செயல்பாடுகள், செயற்கை நுண்ணறிவு, எரிசக்திப் பாதுகாப்பு, பொருளதார மீள்திறன், கடல்சார் பாதுகாப்பு, பருவநிலை மாற்றம், விநியோக நடைமுறைகளில் உள்ள சிக்கல்கள் ஆகியவற்றுக்குத் தீர்வுகாண வளரும் நாடுகள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டியதன் அவசியத்தை அவர் வலியுறுத்தினார்.
உலக அளவில் நிலவும் நிச்சயமற்ற சூழல் காரணமாக ஏற்படும் நீண்டகாலத் தாக்கங்கள் குறித்து முன்கூட்டியே கணிப்பதற்கும், அதற்குப் பொருத்தமான தீர்வுகளை வகுப்பதற்கும் இந்தத் தளம் ஒரு வாய்ப்பாக அமைந்துள்ளது என்று அவர் கூறினார்.
ஒத்துழைப்பு, ஒருங்கிணைப்பு, கூட்டு முயற்சி ஆகியவற்றின் மூலம் நாடுகள் எதிர்கொள்ளும் பொதுவான சவால்களைத் திறம்பட எதிர்கொள்ள முடியும் என்று திரு சி பி ராதாகிருஷ்ணன் வலியுறுத்தினார்.
எஸ்.சதிஸ் சர்மா
