ராய்ப்பூரில் உள்ள அகில இந்திய மருத்துவ அறிவியல் கழகத்தின் (எய்ம்ஸ்) மூன்றாவது பட்டமளிப்பு விழாவில் குடியரசு துணைத்தலைவர் திரு சி பி ராதாகிருஷ்ணன் இன்று பங்கேற்றார். அப்போது பேசிய அவர், இந்திய மக்களின் சுகாதாரம், நம்பிக்கை, வாழ்வாதாரம் ஆகியவற்றுக்காக சேவையாற்றும் பொறுப்பு, பட்டம்பெறும் மாணவர்களுக்கு உள்ளதாகக் கூறினார்.
பட்டமளிப்பு விழா என்பது வெறும் கொண்டாட்டத்திற்கான தருணமாக மட்டுமின்றி, பொறுப்புணர்வுக்கான தருணம் என்றும் தெரிவித்தார். இன்று பட்டம் பெறும் மாணவர்களுக்கு நாட்டு மக்களின் சுகாதாரம், நம்பிக்கை, வாழ்வாதாரம் ஆகியவற்றை உள்ளடக்கிய மதிப்புவாய்ந்த பொறுப்பு ஒப்படைக்கப்பட உள்ளதாகக் கூறினார்.
நாட்டின் மத்தியப் பகுதியில் சுகாதாரம், மருத்துவக் கல்வி, ஆராய்ச்சித்துறைகள் ஆகியவற்றில் உள்ள பிராந்திய அளவிலான பாகுபாடுகளைக் களைவதற்கு 2012-ம் ஆண்டு நிறுவப்பட்ட ராய்ப்பூரில் உள்ள எய்ம்ஸ் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை ஆற்றிவரும் முக்கிய பங்களிப்பை குடியரசு துணைத்தலைவர் எடுத்துரைத்தார். குறுகிய காலத்தில் சத்தீஸ்கர் மற்றும் அண்டை மாநிலங்களில் கிராமப்புற, பழங்குடியின சமூகத்தினருக்கு சேவையாற்றும் முக்கிய உயர்தர மருத்துவ சிகிச்சை மையமாக இது வளர்ச்சியடைந்துள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.
ராய்ப்பூரில் உள்ள எய்ம்ஸின் வளர்ச்சி, சத்தீஸ்கரின் குறுப்பிடத்தக்க மாற்றத்தை பிரதிபலிப்பதாக கூறினார்.
பல தசாப்தங்களாக சத்தீஸ்கரின் சில பகுதிகள் எதிர்கொண்டு வரும் சவால்கள் குறித்து குறிப்பிட்ட திரு சி பி ராதாகிருஷ்ணன், கடினமான புவியியல் பகுதி, போதிய போக்குவரத்து வசதி இல்லாமை, இடதுசாரி தீவிரவாதம் போன்றவை வளர்ச்சிக்கு கடும் தடைகளை உருவாக்கியுள்ளதாகத் தெரிவித்தார்.
சத்தீஸ்கர் தற்போது கடந்த கால சூழல்களிலிருந்து விடுபட்டு, செழுமை, வளர்ச்சி, முன்னேற்றம் ஆகியவற்றில் புதிய விடியல்களை கண்டு வருவதாக குடியரசு துணைத்தலைவர் குறிப்பிட்டார்.
திவாஹர்
