கொச்சியில் உள்ள கொச்சின் கப்பல் கட்டுமான நிறுவனத்தால் கட்டப்பட்ட, நீர்மூழ்கி எதிர்ப்புப் போர் நடவடிக்கைகளுக்கான ஆழ்கடல் அல்லாத பகுதிகளில் பயன்படுத்தப்படும் கப்பலான மங்ரோல், 2026 ஆகஸ்ட் 21 அன்று இந்தியக் கடற்படையிடம் ஒப்படைக்கப்பட்டது.
இந்தக் கப்பல் 80 சதவீதத்திற்கும் அதிகமான உள்நாட்டுத் தயாரிக்கப்பட்ட பாகங்களைக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. இது நீருக்கடியில் கண்காணிப்புப் பணிகளை மேற்கொள்ளவும், கடலோரப் பகுதிகளில் நீர்மூழ்கி எதிர்ப்புப் போர் நடவடிக்கைகள், குறைந்த தீவிரத்தன்மை கொண்ட கடல்சார் செயல்பாடுகள், கண்ணிவெடி எதிர்ப்புப் போர் நடவடிக்கைகள் உள்ளிட்ட பல்வேறு திறன்களைக் கொண்டுள்ளது. வாட்டர்ஜெட் தொழில்நுட்பத்தால் இயக்கப்படும் இக்கப்பலில், அதிநவீன டார்பிடோக்கள், நீர்மூழ்கி எதிர்ப்பு ராக்கெட்டுகள்,மேம்பட்ட ரேடார் அமைப்புகள், சோனார்கள் ஆகியவை பொருத்தப்பட்டுள்ளன.
இந்தக் கப்பலுக்கு, குஜராத் மாநிலம் ஜூனாகத் மாவட்டத்தில் உள்ள மங்ரோல் என்ற கடலோர நகரம், சிறிய துறைமுகத்தின் பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்த நகரம் கடல்சார் மீன்பிடித் தொழிலுக்கு ஒரு முக்கிய மையமாகத் திகழ்கிறது. மேலும், 2004 வரை, சேவையில் இருந்த இந்தியக் கடற்படையின் கண்ணிவெடி அகற்றும் கப்பலான பழைய ஐஎன்எஸ் மங்ரோல் கப்பலின் பாரம்பரியத்தை இந்தக் கப்பல் கொண்டுள்ளது. இதன் மூலம், சிறப்பான போர்க்கப்பல்களின் பெயர்களைத் தொடர்ந்து பயன்படுத்தும் கடற்படையின் மரபு நிலைநிறுத்தப்பட்டு வருகிறது.
எஸ்.சதிஸ் சர்மா
