புனேவில் நடைபெற்ற பிரிக்ஸ் தொலைத் தொடர்பு பணிக் குழுக் கூட்டத்தின் இடையே, இந்தியாவும் பிரேசிலும் தொலைத்தொடர்பு தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன. இதன் மூலம், தொலைத்தொடர்பு தொழில்நுட்பங்களில் இருதரப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கான தங்கள் உறுதிப்பாட்டை எடுத்துரைத்துள்ளன.
மத்திய தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் திரு ஜோதிராதித்ய எம் சிந்தியா, பிரேசில் தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் மேதகு திரு ஃபிரடெரிகோ டி சிகுவேரா ஃபில்ஹோ ஆகியோர் இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.
இந்த இருதரப்பு ஒப்பந்தமானது, டிஜிட்டல் புத்தாக்கத்தை மேம்படுத்துவதிலும், டிஜிட்டல் கட்டமைப்பை வலுப்படுத்துவதிலும், குறிப்பாக தொலைத்தொடர்பு, தகவல் தொடர்பு தொழில்நுட்பங்களின் ஒத்துழைப்பை வளர்ப்பதிலும் இந்தியா – பிரேசில் இடையேயான உறுதிப்பாட்டை எடுத்துக் காட்டுகிறது.
இந்நிகழ்ச்சியில் பேசிய மத்திய அமைச்சர் திரு ஜோதிராதித்ய சிந்தியா, இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்படுவது, இந்தியா-பிரேசில் ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தி, உலகளாவிய இணைப்பு, இணையப் பாதுகாப்பு, டிஜிட்டல் பொது கட்டமைப்பு, வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள், திறன் மேம்பாடு, சிறந்த நடைமுறைகளைப் பரிமாறிக்கொள்ளுதல் ஆகியவற்றின் பரந்த ஒத்துழைப்புக்கு வழிவகுக்கும் என்றார்.
திவாஹர்
