மக்களவையில் பொதுத் தேர்வுகள் (முறைகேடுகள் தடுப்பு) திருத்த மசோதா, 2026 அறிமுகம்.

பொதுத் தேர்வுகள் (முறைகேடுகளைத் தடுக்கும்) திருத்த மசோதா, 2026-ஐ, மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், புவி அறிவியல் துறைகளின் இணையமைச்சரும் (தனிப்பொறுப்பு) பிரதமர் அலுவலகம், பணியாளர் நலன், பொதுமக்கள் குறைதீர்ப்பு மற்றும் ஓய்வூதியம், அணுசக்தி மற்றும் விண்வெளித் துறை இணையமைச்சருமான டாக்டர் ஜிதேந்திர சிங், இன்று மக்களவையில் அறிமுகப்படுத்தினார்.

பொதுத் தேர்வுகளில் முறையற்ற வழிமுறைகள் மற்றும் திட்டமிட்ட முறைகேடுகளைத் திறம்படத் தடுக்கும் நோக்கில், பொதுத் தேர்வுகள் (முறைகேடுகளைத் தடுக்கும்) சட்டம், 2024-ன் விதிகளை இந்தத் திருத்த மசோதா மேலும் வலுப்படுத்துகிறது. இதற்காக, விரைவான விசாரணை, சிறப்பு விரைவு நீதிமன்றங்கள் மூலம் துரித விசாரணை, சிறப்பு அரசு வழக்கறிஞர்களின் நியமனம், மேல்முறையீடுகளைக் குறிப்பிட்ட காலத்திற்குள் முடித்தல் மற்றும் கடுமையான தண்டனை விதிகள் ஆகியவற்றுக்கு மசோதா வழிவகை செய்கிறது.

சமீபத்திய ஆண்டுகளில் நிகழ்ந்த வினாத்தாள் கசிவு மற்றும் தேர்வு தொடர்பான திட்டமிட்ட முறைகேடு சம்பவங்களைக் கருத்தில் கொண்டு, தற்போதுள்ள சட்டக் கட்டமைப்பை வலுப்படுத்தும் நோக்கில் இந்தத் திருத்தங்கள் முன்மொழியப்பட்டுள்ளன. இவை, கூடுதல் பொறுப்புடைமையை உறுதி செய்வதுடன், இத்தகைய குற்றங்களுக்கு எதிரான தடுப்பு நடவடிக்கைகளை வலுப்படுத்தும், பொதுத் தேர்வுகளின் நம்பகத்தன்மையைப் பாதுகாக்கும்.

தற்போதுள்ள விதியின்படி குறைந்தபட்சம் மூன்று ஆண்டுகள் முதல் அதிகபட்சம் ஐந்து ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படும் நிலையில், முறையற்ற வழிகளைப் பின்பற்றுபவர்களுக்கான தண்டனையை அதிகரிக்க இந்த மசோதா வகை செய்கிறது. இதன்படி, சிறைத்தண்டனைக் காலம், குறைந்தபட்சம் ஐந்து ஆண்டுகள் முதல் அதிகபட்சம் பத்து ஆண்டுகள் வரை நீட்டிக்கப்படவுள்ளது.

குற்றங்களில் ஈடுபட்டதாகக் கண்டறியப்படும் சேவை வழங்குநர்களுக்கு, அதிகபட்ச அபராதத் தொகையை ரூ. 1 கோடியிலிருந்து ரூ. 5 கோடியாக உயர்த்தவும், பொதுத் தேர்வுகளை நடத்துவதிலிருந்து அவர்களைத் தடை செய்யும் கால அளவை நான்கு ஆண்டுகளிலிருந்து எட்டு ஆண்டுகளாக நீட்டிக்கவும் மசோதா வகை செய்கிறது.

சேவை வழங்குநர்களின் நிர்வாகப் பொறுப்பில் உள்ளவர்களுக்குக் கடுமையான தண்டனைகளை விதிக்கவும் மசோதா வழிவகை செய்கிறது. இதன்படி, அவர்களுக்குக் குறைந்தபட்சம் ஐந்து ஆண்டுகள் முதல் அதிகபட்சம் பத்து ஆண்டுகள் வரையிலான சிறைத்தண்டனையும், அதிகபட்ச அபராதத் தொகை ரூ. 1 கோடியிலிருந்து ரூ. 5 கோடியாகவும் உயர்த்தப்படும்.

தேர்வு தொடர்பான திட்டமிட்ட குற்றங்களை மிகவும் திறம்படக் கையாள்வதற்காக, குறைந்தபட்ச சிறைத்தண்டனையை 5-லிருந்து 7 ஆண்டுகளாக அதிகரிக்கவும், அதிகபட்ச அபராதத் தொகையை ரூ. 1 கோடியிலிருந்து ரூ. 10 கோடியாக உயர்த்தவும் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.

Leave a Reply